திங்கள், 13 அக்டோபர், 2014

திக்விஜய் சிங்: மோடியைத் துதிபாடுவது ஹிட்லரை துதிபாடுவதற்கு இணையானது!

பிரதமர் நரேந்திர மோடியைத் துதிபாடுவது, மறைந்த ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரை துதிபாடுவதற்கு இணையானது'' என்று பாஜகவை காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் எச்சரித்தார்.
இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநிலம், யாவத்மாலில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டில் 3 சித்தாத்தங்கள் உள்ளன. ஒன்று, காந்தி-நேரு-அம்பேத்கர் சித்தாந்தம். 2ஆவது, இடதுசாரி சித்தாந்தம். 3ஆவது ஆர்எஸ்எஸ், பாஜகவின் சித்தாந்தம். மத அடிப்படையில், நாட்டில் பிளவு ஏற்படுத்துவதில் பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் சிறந்தவர்கள்.
விஜயதசமி தினத்தன்று உரையாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், "அனைவரும் நம்மவர்கள்தான். அனைவரையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்' என குறிப்பிட்டார். ஆனால் அதற்கு மாறாக, பாஜக மதக் கலவரத்தை தூண்டிவிடுகிறது. முசாஃபர்நகர் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபரை கௌரவிக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, ஊழல்வாதிகளை ஆதரிக்கிறது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், குஜராத்தில் உள்ள ஊழல் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய மறுக்கிறது.
கடந்த 60 ஆண்டுகளில், நாட்டுக்கு காங்கிரஸ் கட்சி எதுவும் செய்யவில்லை என மோடி கூறுகிறார். ஆனால் தனது வெளிநாட்டுப் பயணத்தின்போது இந்தியாவை முன்னேறி வரும் நாடு என அவர் கூறுகிறார். அவரது அரசு பதவியேற்ற பிறகுதான், இந்தியா முன்னேறிவரும் நாடானதா?
நாட்டிலேயே அனைத்து மாநிலங்களையும் விட முன்னேறிய மாநிலம் குஜராத் என்றும், மகாராஷ்டிரம் பின்தங்கியுள்ளதாகவும் மோடி திரும்ப திரும்பத் தெரிவிக்கிறார். ஆனால் வளர்ச்சி குறித்த புள்ளி விவரங்களோ அனைத்துத் துறைகளிலும் மகாராஷ்டிரம் முதலாவது மாநிலமாக இருப்பதாகவும், குஜராத் பின்தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.
தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் மோடி அரசியல் செய்வது, கடும் கண்டனத்துக்குரியது. எல்லையில் பாதுகாப்பை ஸ்திரமாக வைத்திருப்பதற்கு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது என்றார் திக்விஜய் சிங். dinamani.com

கருத்துகள் இல்லை: