வெள்ளி, 17 அக்டோபர், 2014

நிபந்தனை ஜாமீன் தான் பொறுக்கிகளை ஜெயலலிதா அடக்கி வைக்கணும் - சு.சாமி

டெல்லி: ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் தான் கிடைத்துள்ளது என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலி நரிமன் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்குமாறு வாதாடினார். இதையடுத்து நீதிபதிகள் ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.  ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி இன்று நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்தது சாமியை அதிருப்தியடைய வைத்தது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் சாமி கூறுகையில், ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் தான் கிடைத்துள்ளது. அவருக்கு உடல் நலம் சரியில்லாதது எனக்கும் தெரியும். அவர் வெளியே வந்தாலும் கட்சியினரை சந்திக்காமல் வீட்டில் தான் இருக்க வேண்டும். அதிமுகவினரை வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று அவர்களுக்கு உத்தரவிடுமாறு ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் 18ம் தேதிக்குள் அவர் கர்நாடக நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீடு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்ய தவறினால் அவரது ஜாமீன் ரத்தாகும் என நீதிபதிகள் தெரிவித்தனர் என்றார். சாமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, உடல் நலம் உள்ளிட்ட காரணங்களுக்காக ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பொறுக்கிகள் மற்றும் எலிகளை கூண்டுக்குள் வைக்க வேண்டும். வெளியே விட்டால் ஜாமீன் ரத்து தான் என்று தெரிவித்துள்ளார்.
//tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: