திங்கள், 13 அக்டோபர், 2014

Chennai :கார் பிளாட்பாரத்தில் தூங்கியவர்கள் மீது ஓடியதில் மூவர் பலி !

சென்னை: சென்னையில் இன்று அதிகாலை நிலை தவறிய கார், பிளாட்பாரத்தில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது ஏறியதில் கர்ப்பிணி பெண் உட்பட 3 பேர் பலியாகினர். இது குறித்து சென்னை போக்குவரத்து போலீஸார் கூறப்படுவது: சென்னை வேளச்சேரி - தரமணி 100 அடி சாலையில் உள்ள பாரதி நகர் அருகே நள்ளிரவுக்குப் பின் 1 மணியளவில் அங்கு உள்ள டி.சி.எஸ். பேருந்து நிலையம் தாண்டி தாறுமாறாக கார் ஒன்று வந்துக்கொண்டிருந்தது. அப்போது திடீரென சாலை ஓரம் நின்று கொண்டிருந்த பசு மீது மோதிய கார், அதனை தாண்டி அங்கு பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்தோர் மீதும் ஏறியது. இதில் 63 வயதுடைய மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயம் அடைந்த ஆறுமுகம் (35) அவரது மனைவி ஐஸ்வர்யா (29) சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு பரிதாபமாக உயிரிழந்தனர். பலியான ஐஸ்வர்யா கர்ப்பமாக இருந்திருக்கிறார். இந்த விபத்தில் காயமடைந்த பசுவும் உயிரிழந்துவிட்டது. சம்பவத்தை அடுத்து காரை தாறுமாறாக ஓட்டி வந்த சசிகுமார் (25), சிவகுமார் (29) மற்றும் அவரது நண்பர் தேவா ஆகியோர் வண்டியை வேகமாக ஓட்டி அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்றனர். பின்னர் சசிகுமார் மட்டும் வேளச்சேரி பகுதியை தாண்டும் வழியிலேயே போலீஸாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் காரை ஓட்டி வந்த சசிகுமார் மற்றும் இருவரும் குடிபோதையில் இருந்தனர் என்றும், விபத்து ஏற்படுத்திய கார் ஒரு நிறுவனத்துக்கு சொந்தமானது என்றும், சசிகுமார் அதில் மேலாளராக பணிபுரிந்து வருவது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து சென்னை கிண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த மூவரின் உடல்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் விபத்து ஏற்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய இருவர் குறித்து சசிகுமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: