வியாழன், 16 அக்டோபர், 2014

கௌரவக்கொலைகளும் பெண்ணின் திருமண வயதும்! ஆதிக்க ஜாதியின் அலங்கோலம் ஒரு கௌரவமா ?

* மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகாவைச் சேர்ந்த திலீப்குமார் என்ற தலித் இளைஞருக்கும், விமலாதேவி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்த விவகாரத்தில் விமலாதேவியை அவரது பெற்றோர்கள் கௌரவக் கொலை செய்ததாக புகார்.
* 'பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21ஆக உயர்த்தவேண்டும். 18 வயது பெண்கள் திருமணம் செய்வதற்கான பக்குவமான வயது அல்ல’ என்று மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. சமீபத்திய மேற்சொன்ன இரண்டு செய்திகள் நம் சமூகத்தின் மனநிலை குறித்து அறிய உதவுகின்றன. ஏற்கனவே சாதிமறுப்புத்திருமணங்கள் தடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, பல்வேறு சாதி அமைப்புகள் கூட்டமைப்பாக இணைந்து, சாதிமறுப்பு காதல் திருமணங்களுக்கு எதிராகப் பரப்புரை செய்துவருகின்றனர்.
இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள மதுரை உயர்நீதிமன்றத் தீர்ப்பை மகிழ்ச்சியுடன் தங்கள் வாதங்களுக்குப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
“18 வயது என்பது பெண்கள் மனமுதிர்ச்சி அடையாத, பக்குவம் அடையாத வயது. இந்த வயதில் அவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பது பொருத்தமானது அல்ல. எளிதில் உணர்ச்சிவசப்பட்டு காதலில் விழும் பெண்கள், பெற்றோரை மீறித் திருமணம் செய்து தங்கள் எதிர்காலத்தைத் தொலைக்கின்றனர்” என்ற இவர்களது குரலுக்கு சமூகத்தில் கணிசமான வரவேற்பு மனநிலையும் உள்ளது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டு ‘பெண்ணின் திருமண வயது 21’ என்றே வைத்துக்கொண்டாலும் ’21 வயதில் ஒரு பெண் தனக்கான வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதை ஏற்றுக்கொள்கிறீர்களா?” என்று கேட்டால் அதற்கும் அழுத்தமான மறுப்பே பதிலாக வருகிறது.
இவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது ஒன்றே ஒன்றுதான். “பெற்றோர்களின் சம்மதமில்லாமல் காதல் திருமணங்கள் நடக்கக்கூடாது”. பெற்றோர்கள் சம்மதத்துடன்தான் காதல் திருமணங்கள் நடக்கவேண்டுமென்றால், காதல் திருமணங்களே நடக்கமுடியாது என்பதுதான் யதார்த்தம்.

சரி, 21 வயதுக்கு மேல் காதலித்து நடக்கிற திருமணங்கள் நிலை என்ன என்பதற்கு ஒரே ஓர் உதாரணம், கண்ணகி - முருகேசன் காதல் திருமணம்.  விருத்தாசலத்தைச் சேர்ந்த கண்ணகியும் முருகேசனும் கடந்த 2003ல் திருமணம் செய்துகொண்டனர். தலித் இளைஞரான முருகேசன், பொறியியல் பட்டதாரி. கண்ணகி வணிகவியல் பட்டதாரி. இவர்களது காதலின் எதிர்வினையாக, இருவர் வாயிலும் விஷம் ஊற்றி உயிரோடு எரித்துக்கொன்றனர்.
2003ல் நடந்த இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஆங்காங்கே கௌரவக்கொலைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இன்னொருபுறம் கௌவரக்கொலைகளைப் போலவே, கலப்புத் திருமணங்களால் பெற்றோர் தற்கொலை செய்துகொள்வதோ, அல்லது சமூகத்தால் வலுக்கட்டாயமாக பிரிக்கப்படும் நிலையில் போராட முடியாமல் காதலர்கள் தற்கொலை செய்துகொள்வதோ நடக்கின்றன.
கௌரவக்கொலைகள், கௌரவத் தற்கொலைகள் இவை இரண்டும் நடப்பதற்குக் காரணம் வெறுமனே பெண்களின் திருமண வயது மட்டுமல்ல. பெண்களின் திருமண வயதுக்கு மட்டும் ஏன் இவ்வளவு அழுத்தம் கொடுக்கப்படுகிறது, பெண்ணின் திருமண வயது ஏன் ஆணின் வயதைவிடக் குறைவாக இருக்கவேண்டும் என்கிற கேள்விகளை எழுப்பிப் பார்த்தால்தான், இந்த மனநிலை என்பதும், கௌரவம் என்பதும் சாதித் தூய்மையைப் பாதுகாக்கத் துடிக்கிற மனநிலை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

நவீன வாழ்க்கை என்பது ஏராளமான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏதேனும் ஒருவகையில் இந்த மாற்றங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பெண்கள் நிறைய படிக்கிறார்கள். வேலைக்குச் செல்கிறார்கள். மாற்று சாதியைச் சேர்ந்த இளைஞர்களோடு பழகுகிற, நட்பு பாராட்டுகிற, காதலிக்கிற வாய்ப்பு கிட்டுகிறது. ஆனால் நவீன வாழ்க்கை அளிக்கும் தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் வசதிகளையும் வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்கிற மனம், இதன் புறவிளைவான காதல் திருமணங்களை மட்டும் ஏற்க மறுக்கிறது.

சென்ற நூற்றாண்டு வரை பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை நாம் பாடப்புத்தகத்தின் மூலம் அறிவோம். குழந்தைத் திருமணம், விதவைகள் நிலைமை, சதி என்னும் உடன்கட்டை ஏறுதல் ஆகிய இந்த அநீதிகளுக்கு எதிராகப் பல்வேறு சமூகச் சீர்திருத்தவாதிகள் குரல் எழுப்பினர். ’’இது கடவுளுக்கே பொறுக்காது” என்றும் “இது பாவச் செயல்” என்றும் அந்தச் சமூகச் சீர்திருத்தவாதிகள் குரல் எழுப்பினர். எந்த மத நம்பிக்கைகளின் அடிப்படையில் பெண்களுக்கு இந்த அநீதிகள் இழைக்கப்பட்டதோ அதே மத உணர்வுகளின் அடிப்படையில் சீர்திருத்தவாதிகள் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.
ஆனால் இவர்களிடமிருந்து மாறுபட்டு, வரலாற்று ரீதியாக இந்த அநீதிகளை ஒருவர் ஆராய்ந்தார். அவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர். “ஒரு சாதி தன்னுடைய தூய்மையை விட்டுக்கொடுக்கத் தயாராயில்லை. அதனால்தான் “கணவனை இழந்த பெண், வேறு சாதியைச் சேர்ந்த ஆணுடன் பழகிவிடுவாள், திருமணம் செய்துவிடுவாள்“ என்பதற்காகவே விதவைகள் அலங்கோலப்படுத்தப்பட்டனர். அவர்களது பாலுணர்வுகள் சிதைக்கப்பட்டன. இன்னும் ஒருபடி மேலே போய் சாதித் தூய்மையைக் காப்பாற்றுவதற்காக சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கமும் ஏற்படுத்தப்பட்டது’ என்பது அம்பேத்கரின் ஆய்வு. குழந்தைத் திருமணங்கள், பெண் கல்வி மறுப்பு என எல்லாவற்றுக்குமான அடிப்படை, இந்த சாதித் தூய்மையைப் பாதுகாக்கும் மனநிலை.

திருமணம், குடும்பம் இவற்றுக்கும் தனிச்சொத்துக்கும் உள்ள உறவு குறித்து மார்க்ஸும் ஏங்கெல்ஸும் ஆராய்ந்தனர். இந்தியச் சமூகத்தில் கூடுதலாக திருமணம், குடும்ப உறவுகள் இவற்றுக்கு அடிப்படையாக சாதியும் சொத்தும் இருக்கின்றன. ‘பெண்ணைப் பெத்தவங்களோட மனசு’ போன்ற வாதங்கள் எல்லாம் பெண்களை உடைமைகளாகப் பார்க்கிற மனோபாவம்தான். தங்கள் வாழ்க்கைத்துணை தொடங்கி எந்த ஒரு விஷயத்திலும் பெண்கள் சுதந்திரமாக முடிவுகள் எடுப்பதற்கு இவர்கள் அனுமதிப்பதேயில்லை. ’பெண்கள் பாதுகாக்கப்படவேண்டியவர்கள்’ என்று இவர்கள் சொல்லிக்கொள்வதே பிற்போக்குத்தனமானதுதான் என்றாலும், உண்மையில் இவர்கள் பாதுகாக்க விரும்புவது பெண்களை அல்ல, தங்கள் சாதியையும் சொத்தையும்தான்.

இப்போது காலம் மாறிக்கிடக்கிறது. விதவைகள் முன்புபோல கொடுமையான முறையில் கட்டுப்படுத்தப்படுவதில்லை. சதி என்னும் உடன்கட்டை சட்டப்படி குற்றம். இவையெல்லாம் மாறிவிட்டாலும் இவைகளுக்கு அடிப்படையாக இருந்த சாதித் தூய்மையைப் பாதுகாக்கும் மனநிலை மட்டும் அப்படியே இருக்கிறது. சதி என்னும் உடன்கட்டைக்குப் பதிலாக கௌரவக்கொலைகளும், கௌரவத் தற்கொலைகளும் நிகழ்கின்றன.

தலித் அல்லாத இரண்டு சாதிகளைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்யும்போது சின்னச் சின்ன மோதல்களும் மனக்கசப்புகளும் ஏற்படுகின்றனவே தவிர, அது கௌரவக்கொலைகளில் முடிவதில்லை. தொடக்கத்தில் ஏற்படுகிற கசப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, இணைந்துவிடும் குடும்பங்களும் உண்டு. கடைசிவரை ஒன்றுசேராது தங்கள் சாதித் தூய்மையைக் காப்பாற்றிக்கொள்ளும் குடும்பங்களும் உண்டு. ஆனால் அவை கொலைகளிலோ தற்கொலைகளிலோ முடிவதில்லை.
திருமணம் செய்துகொள்பவர்களில் ஒருவர் தலித்தாக இருக்கும்போது மட்டும்தான் கௌரவக் கொலைகளும் கௌரவத் தற்கொலைகளும் நடக்கின்றன என்பதுதான் சமூக எதார்த்தம். ‘தீண்டாமை ஒரு பெருங்குற்றம்’ என்று சட்டப்புத்தகமும் சொல்கிறது; பாடப் புத்தகமும் சொல்கிறது. ஆனால் மனதளவில் கடைப்பிடிக்கப்படும் இந்தத் தீண்டாமையைத் தண்டிக்க சட்டத்தில் வழி ஏதுமில்லை.

‘18 வயதுள்ள பெண்ணுக்குப் பக்குவம் இருக்காது, மனமுதிர்ச்சி இருக்காது’ என்று சொல்பவர்களே, எத்தனை வயதைக் கடந்தும் சாதியை விட்டுத்தரத் தயாராக இல்லாத இந்தப் பெற்றோர்களிடம் என்ன பக்குவம் இருக்கிறது?
நவீன வாழ்க்கையின் எல்லா வாய்ப்புகளையும் அனுபவித்துக்கொண்டு மனதளவில் மாறாமல் இருப்பவர்கள், சாதித் தூய்மையைக் காப்பாற்றுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருப்பவர்கள், தங்கள் சாதிவெறிக்காகத் தங்களின் சொந்தக் குழந்தைகளையே கொல்லத் தயங்காதவர்கள், தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையைவிட சாதிதான் முக்கியம் என்று தற்கொலை செய்துகொள்பவர்கள்...இவர்கள்தான் மனமுதிர்ச்சி அடைந்தவர்களா? இதற்குப் பெயர்தான் பக்குவமா?

- சுகுணாதிவாகர் vikatan.com

கருத்துகள் இல்லை: