புதன், 15 அக்டோபர், 2014

அதிமுகவை தடை செய்யுமாறு ட்ராபிக் ராமசாமி வழக்கு !ஆளுங்கட்சி போராட்டம் நடத்தகூடாது! நீதிமன்ற உத்தரவை மீறி ... Contempt?

டெல்லி: ஆளும் கட்சியே போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை தமிழக அதிமுக மீறியுள்ளதால் அந்த கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய ஆவண செய்ய வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை தண்டனை பெற்றதை தொடர்ந்து தமிழகத்தில் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். கடைகள் இழுத்து மூடப்பட்டன, பஸ்கள் எரிக்கப்பட்டன, உடைக்கப்பட்டன. சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதால் ஜனாதிபதி ஆட்சி வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுக்க தொடங்கியபிறகு வன்முறை கைவிடப்பட்டுள்ள போதிலும், தினமும் ஏதாவது ஒரு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
மக்களுக்கு இடையூறு- அதிமுகவுக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி மனு இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் சமூக நல ஆர்வலர் டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் இன்று ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "ஆளும் கட்சியே போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில், ஜெயலலிதாவின் சிறை தண்டனையை தொடர்ந்து அதிமுகவினர் தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பிலுள்ள ஆளும் கட்சியே இதுபோல நடந்துகொள்வதுதான் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே உச்சநீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்ட அதிமுகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். அதிமுக அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட வேண்டும். மேலும், மக்கள் பிரதிநிதிகளாக தேர்வான அதிமுகவின் எம்.பி., எம்.எல்.ஏக்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை அனுமதியின்றியேகூட அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே அத்தகைய எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு அந்த மனுவில் ராமசாமி தெரிவித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை எப்போது வரும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

tamil.oneindia.in/news

கருத்துகள் இல்லை: