ஞாயிறு, 12 அக்டோபர், 2014

பவானி சிங் சிறப்பு பேட்டி : ஜெயலலிதா வழக்கு தோல்விக்கு யார் காரணம்?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜரான நாளில் இருந்து இன்று வரை ஆட்சேப குரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. அவ‌ர் மீதான‌ விமர்சனங்களுக்கும், புகார்களுக்கும் பஞ்சமே இல்லை.
தீர்ப்பு வெளியான பின்பு, தொலைக்காட்சி சேனல்களுக்கு தொடர்ந்து பேட்டிகள் அளித்தபடி இருக்கிறார். அவர் மீதான பல்வேறு விமர்சனங்கள் குறித்து கேள்வி கேட்டபோது, சளைக்காமல் புன்சிரிப்புடன் பதில் அளித்தார்.
ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் தண்டனை வாங்கிக் கொடுத்ததில் உங்களுக்கு எவ்வளவு பங்கு இருப்பதாக நினைக்கிறீர்கள்?
முதலில் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள். 1974-ம் ஆண்டிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளை பார்த்துவிட்டேன். ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு எனக்கு மிகவும் சாதாரணமானது. இதனை விட சவாலான எத்தனையோ வழக்குகளை பார்த்திருக்கிறேன். இந்த வழக்கு, அரசியல் அழுத்தங்கள் காரணமாக பெரிதாக பார்க்கப்பட்டது.

தேவேகவுடா, எஸ்.எம்.கிருஷ்ணா, குமாரசாமி, எடியூரப்பா ஆகியோர் கர்நாடக முதல்வராக இருந்த போதே அவர்களுக்கு எதிரான தேர்தல் வழக்கு களில் ஆஜராகி இருக்கிறேன். அதில் அவர்களுக்கு அபராதமும் விதிக்கச் செய்திருக்கிறேன். ஆனால் அதில் கூட இவ்வளவு பிரச்சினைகளை அனு பவிக்கவில்லை.
ஜெயலலிதா வழக்கில் 100 சதவீதம் அக்கறை காட்டினேன். இந்த வெற்றியின் மூலம் என் மீது சுமத்தப்பட்ட அத்தனை பழிகளும் துடைத்தெறியப்பட்டிருக்கிறது. என்னை குறை சொன்னவர்கள் எல்லாம் இப்போது எங்கே போய்விட்டார்கள்?
ஜெயலலிதாவுக்கு நீதிபதி டி'குன்ஹா வழங்கிய 4 ஆண்டுகள் சிறைத் தண் டனை, 100 கோடி அபராதம், சொத்துகள் பறிமுதல் என்ற‌ தீர்ப்பு இந்திய நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது? இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? இதனை ஏற்கெனவே எதிர்பார்த்தீர்களா?
இப்படி தான் தீர்ப்பு வருமென்று எனக்கு ஏற்கெனவே தெரியும். ஏனென்றால் வழக்கில் ஆதாரங்களும், ஆவணங்களும், சாட்சியங்களும் வலுவாக இருந்தன. எனது ஆணித்தரமான வாதமும் வழக்குக்கு வலு சேர்த்ததால், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு கிடைத்துள்ளது. 100 கோடி அபராதம் என்பது ஜெயலலிதாவின் அன்றைய சொத்து மதிப்போடு ஒப்பிடுகையில் அதில் பாதி அளவு கூட இல்லை. தீர்ப்பு நகலை முழுமையாக படித்தவர்கள் இதனை ஒரு பொருட்டாகவே கருத மாட்டார்கள்.
அரசு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா தொடர்ந்திருந்தால் தீர்ப்பு இன்னும் கடுமையாக இருந்திருக்கும் என்கிறார்களே?
அதெல்லாம், என்னை குறை சொல்பவர்களும், சில ஊடகங்களும் கிளப்பிவிடுகிற அப்பட்டமான பொய்கள். இந்த வழக்கில் அவர் செய்தது என்ன? நான் செய்தது என்ன? ஆவணங்களை தருகிறேன் பார்க்கிறீர்களா?
நீதிபதி டி'குன்ஹா தனது தீர்ப்பில் நீங்கள் வழக்கில் சிறப்பாக வாதிடவில்லை என குறிப்பிட்டு இருக்கிறாரே?
இதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். எனது இறுதி வாதத்தை முடித்த பிறகு தாக்கல் செய்த 9 உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகல்களை அடிப்படையாக வைத்தே அவர் இந்த தீர்ப்பை எழுதி இருக்கிறார். நான் முன்னுதாரணமாக அளித்த தீர்ப்பு நகல்களை பல்வேறு நீதிபதிகளும், மூத்த‌ வழக்கறிஞர்களும் பாராட்டி இருக்கிறார்கள் தெரியுமா?
வழக்கில் இறுதிவாதம் செய்யாமல் கால தாமதம் செய்ததற்காக உங்களுக்கு நீதிபதி டி'குன்ஹா அபராதம் விதித்தார். உச்ச நீதிமன்றத்தால் சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவருக்கு அபராதம் விதிப்பது இதுதான் முதல்முறை என்கிறார்களே?
உலகில் எல்லோருக்கும் நோய்கள் இருக்கின்றன. எல்லோராலும் ‘கல்’ மாதிரி இருக்க முடியாது. எனது உடல்நிலை காரணமாக ஆஜராக முடியவில்லை. ஒருநாளைக்கு நான் சாப்பிடும் மாத்திரைகளை பார்த்திருந்தால் அத்தகைய முடிவுக்கு அவர் சென்றிருக்க மாட்டார் என நினைக்கிறேன். ஆனால் நான் உச்ச நீதிமன்றம் வரை போய் வெற்றியோடு திரும்பி இருக்கிறேனே?
நீதிபதி டி'குன்ஹா தீர்ப்பு அறிவித்தபோது ஜெயலலிதாவின் எதிர்வினை எப்படி இருந்தது?
மிகவும் அதிர்ந்து போய் இருந்தார். கண் கலங்கி, சாந்த சொரூபியாக மாறியிருந்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் த‌னக்கு எதிராக பவானி சிங் தான் ஆஜராகி வாதிட வேண்டும் என ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் போராடினார். பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் அவரை சந்தித்தபோது என்ன பேசிக்கொண்டீர்கள்?
தீர்ப்பு வெளியான செப்டம்பர் 27-ம் தேதி தான் ஜெயலலிதாவை முதன் முதலாக நேரில் பார்த்தேன். அதற்கு முன்பு சின்ன வயதில் சினிமாவில் பார்த்திருக்கிறேன். அவரும் எதுவும் பேசவில்லை. அதனால் நானும் எதுவும் பேசவில்லை.
அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து உங்களை நீக்குவதற்காக திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பில் தொடர் முயற்சிகள் நடந்ததே?
திமுக தலைவர் கருணாநிதி எழுதிய‌ ‘சொத்துக்குவிப்பு வழக்கு ஒரு தொடர்கதை' என்ற நூலை ஆங்கிலத்தில் படித்தேன். அவ்வப்போது அவர் வெளியிடும் அறிக்கைகளையும் படித்திருக்கிறேன். ஜெயலலிதாவின் ஆதரவாளன் என்று ‌திமுகவினர் என் மீது சுமத்திய அத்தனை பழிகளுக்கும் தீர்ப்பின் மூலம் பதில் சொல்லி விட்டேன். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்காக ஆஜரான‌ மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி என்னை பார்த்து, ''நீ ஒரு திமுக வழக்கறிஞர்'' என கோபமாக கூறினார். இதற்கு கருணாநிதி என்ன பதில் சொல்லப்போகிறார்?
ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்ட பிறகு,உங்களுக்கு நிறைய மிரட்டல்கள் வருவதாக கேள்விப்பட்டோம். உண்மையாகவே மிரட்டுகிறார்களா?
பல்வேறு தொலைப்பேசி எண்களில் இருந்து தமிழில் ஏதேதோ பேசுவார்கள். பதிலுக்கு எனக்கு தெரிந்த சிவாஜிநகர் தமிழில் நானும் ஏதோ பேசுவேன். இப்போது அதெல்லாம் பழகிப் போய்விட்டது. அவர்களுக்கு எல்லாம் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் படித்தது கிரிமினாலஜி. பார்ப்பது கிரிமினல் வழக்கறிஞர் தொழில். தலையை வெட்டி ரத்தம் சொட்டச் சொட்ட கொண்டுவரும் எத்தனையோ கிரிமினல்களை பார்த்து விட்டேன். அதனால் உங்களுடைய சேட்டை எல்லாம் என்னிடம் பலிக்காது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் தோல்விக்கு யார் காரணம்? அவருடைய‌ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களின் வாதம் சிறப்பாக இருந்ததா?
நான் வழக்கறிஞர் தொழிலுக்கு வந்த புதிதில் சென்னை நீதிமன்றத்தில் யாராவது வழக்கறிஞர் வந்தால் ஓடிப் போய் அவர்களது வாதத்தை கவனிப்பேன். அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கும். அதே போல என்னை இவ்வழக்கில் அரசு வழக்கறிஞராக நியமித்த போது ஜெயலலிதாவின் வழக்கறிஞர்களிடம் நிறைய கற்றுக் கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார் நன்றாக வாதிடுவார். அவர் சுங்கவரி ஏய்ப்பு தொடர்பான வழக்குகளில் அனுபவம் மிக்கவர். ஆனால் இது போன்ற கிரிமினல் வழக்குகளில் அனுபவமே இல்லாதவர். சசிகலாவின் வழக்கறிஞர் மணி சங்கர் வாதிட்டதை விட நீதிபதியை கோபமூட்டியது தான் அதிகம். மற்ற படி அசோகன், செந்தில் எல்லாம் நீதிமன்றத்தில் வாதாடியே பார்த்ததில்லை.
சொத்துக்குவிப்பு வழக்கை நடத்திய தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார்களா?
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அவர்கள் எங்களுக்கு உதவவே இல்லை. வழக்கு தொடர்பான கோப்புகளில் உள்ள தகவல்கள் முழுமையாகத் தெரியாது. நானும் எனது உதவியாளர் முருகேஷ் எஸ்.மர்டியும் நாங்களாகவே தகவல்களைத் திரட்டினோம். நானாக இருந்ததால், லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் செயல்களைப் பொறுத்துக்கொண்டேன். அதுவே வழக்கறிஞர் ஆச்சார்யாவாக இருந்திருந்தால், அவர்களை துரத்தி விட்டிருப்பார்.
ஜெயலலிதாவின் ஜாமீனை ஆட்சேபித்து காலையில் மனு தாக்கல் செய்த நீங்கள், மாலையில் ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன்?
தண்டனையை ரத்து செய்யவும், ஜாமீன் கோரியும் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுக்களை கடுமையாக ஆட்சேபித்து மனு தாக்கல் செய்தேன். ஆனால் ராம்ஜெத்மலானி தனது வாதத்தில் 4 ஆண்டுகளுக்கு குறைவான சிறை தண்டனையை பெற்றிருக்கும் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்க அரசு வழக்கறிஞரின் வாதமே தேவையில்லை. நீதிபதி தனது சுய அதிகாரத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்கலாம் என்றார். எனவே, நிபந்தனை ஜாமீன் வழங்க ஆட்சேபிக்கவில்லை என்று நான் தெரிவித்தேன். ஓர் அரசு வழக்கறிஞர் தனது சொந்த கருத்தை மட்டுமல்ல அரசு மற்றும் சமூகத்தின் கருத்தையும் எதிரொலிக்க வேண்டும். எனது மனசாட்சிப்படி நடந்து கொண்டேன்.
அப்படியென்றால் உச்சநீதிமன்றத்திலும் ஜெயலலிதாவின் ஜாமீனை ஆட்சேபிக்க மாட்டீர்கள் தானே?
அதை இப்போது சொல்ல முடியாது. உச்ச நீதிமன்றத்தில் இருந்து எனக்கு இன்னும் நோட்டீஸே வரவில்லை.
கடைசியாக ஒரு கேள்வி. எல்லோரும் உங்களிடம் கேட்க விரும்பும் கேள்வி இது. எதிர் முகாமிலிருந்து நீங்கள் பணம் வாங்கியதாக பரவலாக பேச்சு அடிபடுகிறதே, அது உண்மையா?
“யாருங்க பணம் கொடுத்தாங்க? உங்களிடம் எனது முகவரியை கேட்டால் மறக்காமல் சொல்லுங்கள்” என கிண்டலாக சொல்லி சிரிக்கிறார் பவானி சிங்.​tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: