07 செப்டம்பர் 2011 செய்யாத குற்றத்துக்காக ஒரு திறமையான அமைச்சர் அரசியல்வாதிகள், ஊடகங்கள்,
நீதிமன்றங்கள் என்று பலதரப்பின் நெருக்கடிக்கு பலிகடா ஆக்கப்பட்டிருப்பது,
கடந்த ஆண்டு நாம் ‘ஸ்பெக்ட்ரம்’ குறித்து எழுதியிருந்தபோது, நீதிவான்கள்
பலரும் கய்யோமுய்யோவென்று கத்தினார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழலில் இருந்து உனக்கு
எவ்வளவு கொடுத்தார்கள் என்றெல்லாம் குதித்தார்கள். இந்திய ராணுவத்திடம்
சும்மா ஒப்புக்கு இருந்த அலைவரிசையை பெற்று, நிறுவனங்களுக்கு விற்றதின்
மூலமாக அரசுக்கு கூடுதல் வருவாயை ஏற்படுத்தித் தந்தார் அ.ராசா என்பது
நம்முடைய அப்போதைய வாதமாக இருந்தது.2008ஆம் ஆண்டு 122 விண்ணப்பதாரர்களுக்கு 22 வட்டங்களில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கப்பட்டபோது அரசுக்கு கிடைத்த வருவாய் 12,386 கோடிகள். சி.ஏ.ஜி. அறிக்கையோ இந்த ஒதுக்கீட்டை ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் கோடிகளுக்கு விற்றிருக்க முடியும் என்று ஒரு கற்பனைத் தொகையை குன்ஸாக அடித்துவிட்டது. மத்திய அமைச்சர் கபில்சிபல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏதுமில்லை என்று அப்போதிலிருந்தே கரடியாக கத்தி வருகிறார்.
மாறாக பி.ஜே.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சி.ஏ.ஜி. அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, அரசுக்கு நெருக்கடி தர அ.ராசா தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. பின்னர் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு, இன்றுவரை திகார் சிறையில் இருக்கிறார்.
நீதிமன்றத்தில் அரசின் கொள்கை முடிவையே தான் அமல்படுத்தியதாக தொடர்ச்சியாக அ.ராசா வாதிட்டு வருகிறார். இந்த கொள்கை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் மட்டுமல்ல, முந்தைய பா.ஜ.க. ஆட்சிக்காலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டதுதான் என்பதை போதிய தரவுகளோடு வாதிடுகிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் ‘உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம்’ பாணியில் 30,000 கோடி ரூபாய் அரசுக்கு இந்த ஒதுக்கீட்டால் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டுக்கு முன்பாக TRAI-யிடம் எவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று எல்லா கோணங்களிலும் ஆராய்ந்து சொல்லும்படி கேட்டிருந்தது. TRAI இழப்புத் தொகையை சொல்வதற்கு முன்பாகவே அவசர அவசரமாக குற்றப்பத்திரிகையில் பெரும் தொகையை சி.பி.ஐ. குறிப்பிட்டிருக்கிறது.
இப்போது TRAI பலவகைகளில் இந்த ஒதுக்கீட்டை ஆராய்ந்து விற்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் அலையின் விலையை ரூ.5,500 கோடியிலிருந்து, ரூ.9,500 கோடியாக வரையறுத்து சொல்லியிருக்கிறது. இதன் அடிப்படையில் பார்க்கப் போனால் அ.ராசாவால் அரசுக்கு ரூ.3,000 கோடியிலிருந்து ரூ.7,000 கோடி வரை லாபம் என்று தெரிகிறது. மேலும் ஏலமுறையில் விற்பனை செய்ய பரிந்துரை எதையும் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்துக்கு செய்யவில்லை என்பதையும் TRAI தெளிவுபடுத்தியிருக்கிறது.
ராசா குற்றவாளியல்ல, மிகத் திறமையாக, சாதுர்யமாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விற்பனையில் நடந்துகொண்ட அமைச்சர், இந்த ஒதுக்கீட்டின் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாயை ஏற்படுத்தித் தந்தவர் என்பதை TRAI மூலமாக இப்போது கொஞ்சம் தாமதமாகவே அறிந்துகொள்ள முடிவது வேதனையானது.
எந்த தொழில்நுட்ப அறிவுமின்றி தயாரிக்கப்பட்ட சி.ஏ.ஜி. அறிக்கை வந்தவுடனேயே ஒண்ணே முக்கா லட்சம் கோடி ரூபாய் இழப்பு என்று வானுக்கும், பூமிக்குமாக எகிறிக் குதித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது வாய் உள்ளிட்ட ஒன்பது ஓட்டைகளையும் அடைத்துக்கொண்டு அமைதிகாத்து வருவது வெட்கக்கேடானது. நிமிடத்துக்கு நாலு ஃப்ளாஷ் நியூஸ் ஓட்டிக்கொண்டிருந்த ஊடகங்கள் இப்போது காத்துவருவது அப்பட்டமான, அயோக்கியத்தன மவுனம்.
செய்யாத குற்றத்துக்காக ஒரு திறமையான அமைச்சர் அரசியல்வாதிகள், ஊடகங்கள், நீதிமன்றங்கள் என்று பலதரப்பின் நெருக்கடிக்கு பலிகடா ஆக்கப்பட்டிருப்பது, அவர் பிறந்த சாதியினாலோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது. இங்கே ஜனநாயகம் வாழுகிறது என்று சொன்னால், நம்புபவன் இரு காதுகளிலும் சாமந்திப்பூ வைத்தவனாக இருக்க வேண்டும். தன்னை நிரூபித்து விரைவில் தகத்தாய தங்கமாக, சிங்கமாக தமிழ் மண்ணுக்கு வருகை தரவிருக்கும் வருங்கால மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அ.ராசாவுக்கு முன்கூட்டிய வாழ்த்துகள்!
தர்மம், தாமதமானாலும் வெல்லும்!
எழுதியவர் யுவகிருஷ்ணா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக