செவ்வாய், 4 டிசம்பர், 2012

தென் சீன கடலில் சீனா அடாவடி!! இந்திய கடற்படை கப்பல்கள் களத்தில் குதிக்கின்றன!

Viruvirupu
இந்தியாவுக்கு சில ஆயில் ப்ளாக்குகள் இங்கே உள்ளன!
“தென் சீன கடல் பகுதியில் உள்ள இந்திய உரிமைகளை பாதுகாக்க, இந்தியக் கடற்படை முழுமூச்சாக செயல்படும். எமது கப்பல்கள் அந்த கடல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார், கடற்படை தளபதி டி.கே.ஜோஸி.
இந்தக் கடல் பகுதியில் சீன கடல்படை அந்துமீறி நடந்து கொள்வதாக சமீபகாலமாக செய்திகள் வெளியாகின்றன. தென் சீன கடல் பகுதியில் இந்தியாவுக்கு சில ஆயில் ப்ளாக்குகள் (oil blocks) உள்ளன. வியட்நாமினால் இந்தியாவுக்காக ஒதுக்கப்பட்ட இவற்றில் சீனாவுக்கு எப்போதும் ஒரு கண் உண்டு.
கடற்படை தளபதி டி.கே.ஜோஸி, “அந்தக் கடல் பகுதியில் இந்தியக் கப்பல்களை 365 நாட்களும் நிறுத்தி வைத்திருப்பது சாத்தியமல்ல. ஆனால், இந்திய உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ள காரணத்தால், நாம் அங்கு செல்லத்தான் வேண்டியுள்ளது. அங்கே எமது கப்பல்கள் அடுத்த சில தினங்களில் வரைந்து செல்லுமா என்ற கேள்வி எழுந்தால், எனது பதில், ‘ஆம்’ என்பதாகவே இருக்கும்” என்றும் கூறியுள்ளார்.
இந்தக் கடல் பகுதியில் நடமாடும் மற்றைய நாட்டு கப்பல்களை தடுத்து நிறுத்தப் போவதாக அறிவித்துள்ள சீனா, தென் சீன கடல் பகுதி முற்று முழுதாக தமக்கே சொந்தம் என கூறத் தொடங்கியுள்ளது. இந்தக் கடலில் கடந்த சில நாட்களாக நடமாடிய மீன்பிடி கப்பல்களை சீன எல்லைக் காவல் படையினர் கைப்பற்றி, மாலுமிகளையும் சிறைப்படுத்தி வருகின்றனர்.
அப்படியான சூழ்நிலையில்தான், இந்தியக் கப்பல்கள் அங்கு செல்லவுள்ளன.

கருத்துகள் இல்லை: