இத்தீர்ப்பை மறுஆய்வுக்கு உட்படுத்தக் கோரி மைய அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், அனைத்து இயற்கை வளங்களையும் எந்தச் சூழ்நிலையிலும் ஏலத்தில் விடுவது மட்டும்தான் அனுமதிக்கப்பட்ட முறையா? முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 2008-ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட அலைக்கற்றை உரிமங்கள் ரத்து செயப்பட்டிருப்பதால், அதற்கு முன்னர் அதேமுறைப்படி ஒதுக்கப்பட்ட அலைக்கற்றை உரிமங்களின் நிலை என்ன? இதற்கு முன்னர் பல்வேறு வகையான இயற்கை வளங்கள் ஏலம் அல்லாத முறைகளில் ஒதுக்கீடு செயப்பட்டிருப்பதோடு, அந்த ஒதுக்கீடுகளை உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்து தீர்ப்பு கூறியிருக்கிறது. இத்தீர்ப்புக்குப் பின்னர் அந்த ஒதுக்கீடுகளின் நிலை என்ன? இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் எந்த அடிப்படையில் தலையிட முடியும்?” என்பது உள்ளிட்ட 14 கேள்விகளை எழுப்பி, இக்கேள்விகளின் அடிப்படையில் இத்தீர்ப்புக்கு விளக்கம் அளிக்குமாறு கோரும் மற்றொரு மனுவை அரசுத் தலைவர் மூலம் தாக்கல் செய்தது. அதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, இயற்கை வளங்களைத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வது குறித்த பிரச்சினையில் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற மாதிரியானதொரு தீர்ப்பை கடந்த செப்.27 அன்று அளித்தது.
அத்தீர்ப்பில், “இயற்கை வளங்களை ஏல முறையில்தான் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனத் தாம் அளித்த தீர்ப்பு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடுக்கு மட்டுமே பொருந்தும்; மற்ற இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்வதற்குப் பொருந்தாது. இயற்கை வளங்களை ஏலத்தின் மூலம் ஒதுக்குவது வசதியான ஒதுக்கீடு முறையாக இருக்கலாம். ஆனால், அரசியலமைப்பு ரீதியாக அதனைக் கட்டாயமாக்க முடியாது. ஏலத்தில் விடாமல் இருப்பதைச் சட்டவிரோதமான செயலாகக் கருத முடியாது.”
‘‘அதிகபட்ச இலாப நோக்கத்தைக் கொண்டு இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்ய ஏலமுறைதான் சிறந்தது என்றாலும், அதிகபட்ச இலாப நோக்கத்தை மட்டுமே கொண்டு இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்ய முடியாது. பொதுநலன் நோக்கத்திற்காக இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்யும்பொழுது, ஏலமுறையைப் பின்பற்ற வேண்டிய தேவையில்லை. வருவாய்ப் பெருக்கத்தை நோக்கமாகக் கொண்டு கொள்கைகளை வகுக்கக் கூடாது. பொது நலனுக்கு அவசியமென்றால் ஏலம் அல்லாத பிற வழிகளிலும் இயற்கை வளங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கலாம்.”
‘‘இந்நீதிமன்றம் இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்தவற்கு எந்தவொரு முறையையும் பரிந்துரைக்கவுமில்லை; எந்தவொரு முறையையும் தடைசெயவுமில்லை. இயற்கை வளங்களைத் தனியாருக்கு ஒதுக்கீடு செய்ய எந்த முறையைப் பின்பற்றலாம் என முடிவெடுக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு மட்டுமே உண்டு. அம்முடிவு அரசியலமைப்பையும் பொதுநலனையும் மீறுவதாகக் கருதப்பட்டால், அதில் தலையிடும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு” என விளக்கமளித்திருக்கிறது.
அரசு இயற்கை வளங்களைத் தனியாருக்கு ஒதுக்கீடு செய்யும்பொழுது, அதில் இலாப/நட்டக் கணக்குப் பார்க்க முடியாது என்பதுதான் இத்தீர்ப்பு சொல்லியிருக்கும் செய்தி. அதாவது, அரசு இயற்கை வளங்களை ஏலத்தில் விடாதபொழுது, ஏலத்தில் விட்டிருந்தால் அரசுக்குக் கூடுதலாக இவ்வளவு வருவாய் கிடைத்திருக்கும். எனவே, ஏலத்தில் விடாததால் அரசுக்கு நட்டமேற்பட்டுவிட்டது எனத் தணிக்கை அதிகாரிகள் உள்ளிட்டு யாரும் இனி அரசின் மீது குற்றஞ்சுமத்த முடியாது.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து, 2ஜி வழக்கில் இந்த விளக்கத்தை எழுதிய கையோடு ஓய்வு பெற்றுச் சென்றுள்ள எஸ்.ஹெச். கபாடியா இந்த இலாப/நட்டக் கணக்கு குறித்து, இன்னும் தெளிவாகவே அரசுக்குச் சாதகமாக விளக்கியிருக்கிறார். இயற்கை வளங்களை மதிப்பீடு செய்வதில் பல குழப்பங்கள் நிலவுகின்றன. இக்குழப்பங்கள் நீங்க வேண்டும் என்றால், நட்டமென்பது உண்மையானது; இலாபமென்பது கருதுகோள்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தான் ஓய்வு பெறுவதற்கு முன்பாக, நிலக்கரி ஊழல் விவகாரம் நாடாளுமன்றத்தில் அடிபட்டுக் கொண்டிருந்த சமயத்தில் உபதேசித்தார், அவர்.
இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்ய அரசுக்கு உள்ள அதிகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள விளக்கம், இயற்கை வளங்களை மதிப்பீடு செய்வது குறித்து முன்னாள் தலைமை நீதிபதி ஹெச்.எஸ்.கபாடியா கூறியுள்ள கருத்து – இவை இரண்டும் ஆ.ராசாவால் அலைக்கற்றை ஒதுக்கீடு செயப்பட்டதில் அரசுக்கு 1,76,000 கோடி ரூபா நட்டமேற்பட்டுவிட்டதாகத் தணிக்கை அதிகாரி அளித்துள்ள அறிக்கையைக் கேள்விக்குள்ளாக்கிவிடுகிறது. அது மட்டுமின்றி, ஆ.ராசாவால் முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற முறையில் ஒதுக்கப்பட்ட 122 உரிமங்களை ரத்து செய்த உச்சநீதிமன்றத்தின் முந்தைய முடிவையும் கேள்விக்குள்ளாக்குகிறது.
2008-ஆம் ஒதுக்கப்பட்ட 122 உரிமங்களும் பொது நல நோக்கின் அடிப்படையில்தான் குறைந்த விலையிலும் – அதாவது, 2001-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையிலும், முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலும் ஒதுக்கப்பட்டதாகவும், வருவாய்ப் பெருக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஒதுக்கப்படாததால் அரசுக்கு எவ்வித இழப்பும் இல்லை என்பதுதான் மைய அரசின் வாதம். மேலும், முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற முறையைக் கடைபிடித்தார் என்பதற்காக ஆ.ராசா மீது வழக்குத் தொடரப்படவில்லை. வழக்கு தொடரவும் முடியாது. ஏனென்றால், ராசா அரசின் கொள்கை முடிவைத்தான் நடைமுறைப்படுத்தினார். இம்முறையை அவர் பாரபட்சமற்ற முறையில் கடைபிடிக்கவில்லை; சில தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக நடந்து கொண்டார்” என்றுதான் அவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டு, சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தற்பொழுது உச்சநீதிமன்றம் அளித்துள்ள விளக்கம் இவற்றின் அடிப்படையில் பார்த்தால், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு 122 உரிமங்களை ரத்து செய்த முடிவையும் கைவிட்டிருக்க வேண்டும். ஆனால், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வோ அரசுத் தலைவர் மூலம் விளக்கம் கோரும் மனுவில் 2ஜி தொடர்பாகக் கேட்கப்பட்டிருந்த மூன்று கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் ஒருபுறம் நழுவிக் கொண்டுவிட்டு, இன்னொருபுறம் நாட்டாமை கணக்கில், தனது முடிவை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற திமிரில் 122 உரிமங்களை ரத்து செய்தது செய்ததுதான் எனத் தீர்ப்புக் கூறியிருக்கிறது.
மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ள இயற்கை வளமான அலைக்கற்றையை ஏலத்தில்தான் விட வேண்டும்; தோண்டி எடுத்தால் காலியாகிவிடும் நிலக்கரி, கச்சா எண்ணெ போன்ற இயற்கை வளங்களை அரசு விரும்பும் எந்த முறையில் வேண்டுமானாலும் ஒதுக்கீடு செய்து கொள்ளலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் விளக்கமே தர்க்க அறிவுக்குப் பொருத்தமானதாக இல்லை. இயற்கை வளங்களுள் ஒன்றான அலைக்கற்றையை மட்டும் ஏலத்தில்தான் விடவேண்டும்” என்ற தனது முடிவை நியாயப்படுத்தும் விதத்தில் உச்சநீதிமன்றம் எந்தவிதமான விளக்கத்தையும் அளிக்கவில்லை. மேலும், தனது இந்த முடிவைப் பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்தும் நாணயமும் அதனிடம் இல்லை.
ஆ.ராசா தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது மட்டுமல்ல, அதற்கு முன்பும், அதாவது தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதி மாறன் தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோதும், அதற்கும் முன்பாக பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் அருண்ஷோரி தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோதும் 2ஜி அலைக்கற்றைகள் முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்தான் ஒதுக்கீடு செயப்பட்டுள்ளன. ஆனால், உச்சநீதிமன்றம் பிப்ரவரி மாதம் அளித்த தீர்ப்பில், ஆ.ராசா அமைச்சராக இருந்து, ஜனவரி 2008-க்குப் பிறகு ஒதுக்கிய அலைக்கற்றை உரிமங்களை மட்டும் உள்நோக்கத்தோடு தேர்ந்தெடுத்து ரத்து செய்திருக்கிறது.
ஆ.ராசா முதலில் வந்தவருக்கு முன்னுரிமை அடிப்படையில் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்து அரசிற்கு நட்டமேற்படுத்தினார் என்றால், தயாநிதி மாறனும் அருண்ஷோரியும் இதே முறையில் செய்த ஒதுக்கீடுகள் எப்படி அரசிற்கு இலாபத்தை ஈட்டித் தந்திருக்க முடியும்? அலைக்கற்றைகளை ஏலத்தின் அடிப்படையில்தான் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் முடிவு ஆ.ராசாவின் காலத்திற்குப் பொருந்தும்பொழுது, அதற்கு முந்தையை ஒதுக்கீடுகளுக்கு எப்படிப் பொருந்தாமல் போகும் என்ற கேள்விகளுக்குள் நுழையாமல், அவற்றை வேண்டுமென்றே அலட்சியப்படுத்திவிட்டுத் தனது விளக்கத்தை அளித்திருக்கிறது, உச்சநீதிமன்றம்.
உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒருதலைப்பட்சமாக தனது விளக்கத்தை அளித்திருப்பதாக இந்தப் பிரச்சினையைச் சுருக்கிப் பார்க்க முடியாது. காற்று, தண்ணீர் தொடங்கி நிலக்கரி, இரும்பு, அலுமினியம் போன்ற கனிம வளங்கள் ஊடாக மலை, மண் ஈறாக அனைத்து இயற்கை வளங்களையும் தனியாருக்குத் தாரை வார்ப்பதன் மூலம்தான் பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என ஆளுங்கும்பலும், அனைத்து ஓட்டுக்கட்சிகளும் சாமியாடிக் கொண்டிருக்கும் வேளையில், உச்சநீதிமன்றமும் அரசின் தனியார்மயக் கொள்கைக்கு ஏற்றபடியே, கார்ப்பரேட் கொள்ளைக்கு இசைந்தாற் போலவே தனது விளக்கத்தை அளித்திருக்கிறது.
எனினும், பா.ஜ.க., சி.பி.எம்., ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தைச் சேர்ந்த பிரசாந்த் பூஷண், சு.சாமி உள்ளிட்ட எதிர்த்தரப்பு யானையைத் தடவிப் பார்த்து வியந்து நின்ற குருடர்களைப் போல, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்திருக்கும் இந்த விளக்கம், மைய அரசு இனி தன் விருப்பம் போல இயற்கை வளங்களைத் தனியார் முதலாளிகளுக்கு ஒதுக்க முடியாதபடி ஆப்பு வைத்திருப்பதாகப் பொழிப்புரை எழுதி வருகிறார்கள். மைய அரசு பொது நலனுக்கு எதிராக இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்ய முனைந்தால், உச்ச நீதிமன்றம் தலையிட்டு நீதியை நிலைநாட்டிவிடுமென இவர்கள் ஒரேகுரலில் பீற்றி வருகிறார்கள்.
உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இந்த விளக்கத்தை அளித்தபொழுதுதான், 2ஜி ஊழலைவிடப் பல மடங்கு பிரம்மாண்டமான நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் அம்பலப்பட்டு, மன்மோகன் சிங்கின் யோக்கியதை சந்தி சிரித்தது. பொதுநலனுக்கு எதிராக இயற்கை வளங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டால் நாங்கள் தலையீடு செய்வோம் எனத் தனது விளக்கத்தில் நீட்டி முழங்கியிருக்கும் உச்ச நீதிமன்றம் இந்த ஊழல் குறித்து மௌனமாகவே இருந்து வருகிறது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கள்ள மௌளம் ஒருபுறமிருக்க, இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்வதில் பொது நலன் என்பதை எப்படி வரையறுப்பது? கிராம், செ.மீ., என்பது போல அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இதற்குப் பொது அளவுகோல் உண்டா? என்பதுதான் இந்த விவகாரத்தின் மையமான கேள்வியாகும்.
மக்கள் அனைவருக்கும் கைபேசி சேவை குறைந்த கட்டணத்தில் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அலைக்கற்றையைக் குறைந்த விலையில் ஒதுக்கீடு செததாக ஆ.ராசா வாதிட்டு வருகிறார். அவரது வாதத்தில் ஓரளவு நியாயம் இருப்பதை உச்சநீதிமன்றம்கூட மறுத்துவிட முடியாது. ஆனாலும், ஆ.ராசா பொது நலனுக்கு விரோதமாக அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததாகக் குற்றஞ்சுமத்தி, அவர் ஒதுக்கீடு செய்த 122 உரிமங்களை ரத்து செய்தது, உச்சநீதிமன்றம். அதேசமயம், ஆ.ராசாவிற்கு முன்பாக, பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் குறைந்த விலையிலும் முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலும் அலைக்கற்றைகள் ஒதுக்கீடு செயப்பட்டுள்ளதை ரத்து செய்யாததன் மூலம், அந்த ஒதுக்கீடு பொது நலனுக்கு விரோதமானதல்ல எனச் சொல்லாமல் சொல்லியிருக்கிறது, உச்ச நீதிமன்றம்.
‘‘பொது மக்களுக்கு மலிவான விலையில் மின்சாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நிலக்கரிச் சுரங்கங்களை ஏலத்தில் விடாமல், குறைந்த விலையில் தனியாருக்கு ஒதுக்கீடு செய்ததாக” மன்மோகன் சிங்கும் கூறி வருகிறார். ஆனால், மின்சாரக் கட்டணமோ மக்களின் மென்னியை இறுக்கும் வண்ணம் உயர்ந்து கொண்டே போகிறது. எனினும், தனியார் வர்த்தக மின்சாரக் கழகங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலக்கரிச் சுரங்கங்களைத் திரும்பப் பெறுவது குறித்துப் பேச மறுக்கிறது, உச்ச நீதிமன்றம்.
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது நாட்டு நலனுக்கு எதிரானது; அதனால் அதைத் தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், அரசின் கொள்கை முடிவைத் தடை செய்ய மறுத்து, அவ்வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.
பொது நலனை வரையறுக்கும் துல்லியமான, கறரான சட்ட விதிகள் எதுவும் கிடையாது என்பது மட்டுமல்ல, அரசு, நீதிமன்றம், ஓட்டுக்கட்சிகள் அனைத்தும் தற்பொழுது பொதுநலன் எனப் பேசி வருவது மக்கள் நலனையோ, நாட்டு நலனையோ குறிக்கவில்லை. அவர்கள் யாவரும் இன்று தனியார்மயத்துக்குச் சேவை செவதைத்தான் பொது நலன், நாட்டின் வளர்ச்சி என வரையறுக்கிறார்கள். தனியார்மயம் – தாராளமயம் மூலம்தான் வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற அரசின், ஆளும் வர்க்கத்தின் மறுகாலனியாதிக்கக் கொள்கையை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு, அதற்குத் தக்கபடிதான் சட்டத்திற்கும் அரசியல் சாசனத்திற்கும் விளக்கங்களை வழங்கி வருகிறது. வோடாஃபோன் வழக்கில், அந்நிறுவனம் 11,000 கோடி ரூபாயை வரியாகச் செலுத்தத் தேவையில்லை என ஹெச்.எஸ்.கபாடியா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பு ஒன்றே, நீதித்துறை யார் பக்கம் நிற்கிறது என்பதைத் துலக்கமாக எடுத்துக் காட்டியிருக்கிறது. 2ஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் விளக்கம், நாட்டின் இயற்கை வளங்களை, பொதுச் சோத்துக்களைக் கொள்ளையிடக் குதித்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களிடையே அரசு பாரபட்சம் காட்டக் கூடாது; அவர்களிடம் நேர்மையாகவும் முறையாகவும் நடந்துகொள்ள வேண்டும்” என்பதை உறுதி செயும் கார்ப்பரேட் நிறுவனங்களின் காவல்காரனாக உச்ச நீதிமன்றம் நிற்கும் என்பதை எடுத்துக் கூறுகிறது.
தனியார்மயத்துக்கு ஜே! உடன்பிறந்த ஊழலுக்கு ஜே! ஜே!
உச்ச நீதிமன்றம் உள்ளிட்டு, தனியார்மயம் – தாராளமயம் என்ற பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக் கொள்பவர்கள் அனைவரும் அக்கொள்கையோடு ஒட்டிப் பிறந்த ஊழலையும், கார்ப்பரேட் பகற்கொள்ளையையும் அங்கீகரித்துக் கொண்டே, இயற்கை வளங்களையோ, பொதுத்துறை நிறுவனங்களையோ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏல முறை மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ கைமாற்றிவிடும்பொழுது, அதில் ஊழலோ முறைகேடுகளோ நடைபெறக் கூடாது என உபதேசித்து வருகிறார்கள். இங்கே ஊழல் என்று உச்ச நீதிமன்றமும், நடுத்தர வர்க்க கனவான்களும் குறிப்பிடுவது, நிச்சயமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் அடிக்கும் பகற்கொள்ளையை அல்ல; பொதுத்துறை நிறுவனங்களையோ, இயற்கை வளங்களையோ தனியாருக்கு ஒதுக்கும்பொழுது அதில் அரசியல்வாதிகள், ஓட்டுக்கட்சிகள் தங்களது தனிப்பட்ட இலாபத்திற்காக அடிக்கும் கமிசனை மட்டும்தான் ஊழல் என்கிறார்கள். அரசியல்வாதிகளின் ஊழலைத்தான் இவர்கள் பொதுநலனுக்கு, அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக் கூறுகிறார்களே தவிர, கார்ப்பரேட் பகற்கொள்ளையை நோக்கி இவர்களின் சுண்டுவிரல் கூட நீளுவதில்லை.
உதாரணத்திற்கு 2ஜி வழக்கை எடுத்துக் கொண்டால் ஆ.ராசா, கனிமொழி, கலைஞர் டி.வி. பெற்ற கையூட்டுப் பற்றி பேசிய அளவிற்கு, 2 ஜி உரிமத்தைப் பெற்ற பின், தங்கள் நிறுவனப் பங்குகளை விற்று 22,000 கோடி ரூபாய் அளவிற்குக் கொள்ளை இலாபம் அடைந்த டாடா டெலி சர்வீசஸ், ஸ்வான், யுனிடெக் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் பற்றி உச்ச நீதிமன்றமோ, ஜெயாவோ, சுப்பிரமணிய சுவாமியோ, சோ ராமஸ்வாமியோ பேசவில்லை. இந்த ஊழலில் ஆதாயம் அடைந்ததாகக் குற்றஞ்சுமத்தப்பட்ட கலைஞர் டி.வி.யின் பங்குதாரர் என்ற முறையில் கனிமொழி கைது செய்யப்பட்டார். ஆனால், இவ்வூழலில் தொடர்பிருப்பது அம்பலமான பிறகும் பழம்பெரும் தரகு முதலாளியான டாடா சி.பி.ஐ.-யாலும் நீதிமன்றத்தாலும் விசாரிக்கப்படவேயில்லை. ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானியும் டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் அதிபர் பல்வாவும் அலைக்கற்றை உரிமம் பெற்றதில் கூட்டுக் களவாணிகளாக இருந்துள்ளனர் என்பது தெரியவந்த பிறகும், அனில் அம்பானி கைது செயப்படவில்லை. ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகளும், புதுத் தரகு முதலாளியான பல்வாவும்தான் சிறையில் அடைக்கப்பட்டனர். டாடா- நீரா ராடியா தொடர்பை உச்ச நீதிமன்றம் உள்ளிட்டு யாரும் மறந்தும்கூடத் தற்பொழுது பேசுவதில்லை.
நிலக்கரி ஊழல், இஸ்ரோ ஊழல், ஏர் இந்தியா ஊழல், முகேஷ் அம்பானி தொடர்புடைய கே.ஜி. எண்ணெ வயல் ஊழல், ஆதர்ஷ் அடுக்குமாடி ஊழல், பா.ஜ.க. தொடர்புடைய ரெட்டி சகோதரர்களின் ஊழல் என கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏகப்பட்ட ஊழல்கள் அம்பலமானாலும், முதலாளித்துவப் பத்திரிகைகள், பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சுப்பிரமணிய சுவாமி, சோ ராமஸ்வாமி போன்ற யோக்கியர்கள் மட்டுமல்ல, அரசியல் சாசன நிறுவனங்களான உச்ச நீதிமன்றம், தலைமை தணிக்கை அதிகாரி ஆகியோரும் 2ஜி ஊழலை மட்டும்தான், அதிலும் அவ்வூழலில் சம்பந்தப்பட்ட மற்றவர்களைக் காட்டிலும் ஆ.ராசா, மற்றும் தி.மு.க.வைத்தான் குறிவைத்துக் காய்களை நகர்த்தினார்கள்; தமிழகத்தின் பார்ப்பன ஜெயா கும்பல் 1,76,000 கோடி ரூபா அளவிற்கு தி.மு.க. ஊழல் செய்துவிட்டதாகப் புளுகுணி பிரச்சாரம் நடத்தி, தமிழக முதல்வர் பதவி என்ற அரசியல் ஆதாயத்தையும் அடைந்தது.
உச்ச நீதிமன்றம் உள்ளிட்டு ஊழலுக்கு எதிராக சவுண்டு விடுபவர்கள் அனைவரும் தனியார்மயத்தின் கீழ் நடக்கும் எல்லா ஊழல்களையும் கண்டு கொள்வதில்லை. ஊழலை யார் செய்தார்கள் என்ற அடிப்படையிலும் எந்த ஊழலை எந்த அளவிற்கு அம்பலப்படுத்துவது என்பதையும், இந்த ஊழல் எதிர்ப்பு சவுண்டு பார்ட்டிகள் அரசியல் உள்நோக்கம், சுய இலாபம் கருதியே தீர்மானித்து அம்பலப்படுத்துகிறார்கள். மற்றபடி, இவர்கள் அனைவரும், தனியார்மயத்தின் உடன்பிறப்புகளான ஊழலையும், கார்ப்பரேட் பகற்கொள்ளையும் பொது நலன் என்ற போர்வையில் ஒரு கொள்கையாகவே வரித்துக் கொண்டுவிட்டனர்.http://www.vinavu.com/2012/12/05/supreme-court-safeguarding-corporate-interests/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக