லித் இளைஞர்கள் ஜீன்ஸ், கூலிங் கிளாஸ், டி-சர்ட் அணிந்து உயர்சாதிப் பெண்களை மயக்கி விடுகிறார்கள்” என்கிறார் ராமதாஸ். தர்மபுரி தலித் குடியிருப்புகளை எரித்து சாம்பலாக்கிய வெறியாட்டங்களைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு ஆதிக்க சாதி அமைப்புகளை தலித்துகளுக்கு எதிராய் ஒன்றிணைக்கும் கூட்டத்தில் தான் ஆதிக்க சாதி பெண்கள் வெறும் ஜீன்சுக்கும் டிசர்ட்டுக்கும் மயங்கிவிடுவார்கள் என்று உளறிக் கொட்டி ‘சேம் சைடு’ கோல் போட்டுள்ளார்.
வெறும் ஜீன்ஸ் டி-சர்ட் போட்டுக் கொண்டாலே ‘உயர்’ சாதிப் பெண்களெல்லாம் மயங்கி விடுவார்கள் என்று ராமதாசுக்கு கவலை பிறந்துள்ளதற்கு  காரணம் இல்லாமல் இல்லை. ராமதாஸ் ஒருபக்கம் தாங்கள் கலப்புத் திருமணங்களை எதிர்க்கவில்லையென்றும், காதல் நாடகத் திருமணங்களைத் தான் எதிர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவரால் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதிக்க சாதி வானவில் கூட்டணியைச் சேர்ந்த இரா. மணிகண்டன் தமது அமைப்பு காதல் கலப்புத் திருமணங்களையே மொத்தமாக எதிர்ப்பதாக அறிவித்துள்ளார்.

இந்த விஷயத்தில் ராமதாசுக்கே குரு மணிகண்டன் தான். ஏப்ரல் மாதம் கரூரில் கூட்டம் நடத்திய கொங்கு வேளாள கவுண்டர்கள், வேறு சாதியில் திருமணம் முடிப்பதால் கொங்குக் கலாச்சாரம் சீர்கெட்டுப் போய் விடுவதாகவும், பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுப்பதால் கொங்கு வேளாளர்களின் நிலவுடைமை பாதிக்கப்படுவதாகவும் மேற்படி கூட்டத்தில் பேசிவிட்டு தீர்மானமும் நிறைவேற்றியுள்ளனர். மேலும் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொடுப்பதையும் எதிர்த்து பேசியுள்ளனர்.
“தேச பக்தி என்பது பொறுக்கிகளின் கடைசி புகலிடம்” என்றார் சாமுவேல் ஜான்சன். இந்தியாவிலோ கடைந்தெடுத்த நாலாந்தர பொறுக்கிகள் சரணடையும் கடைசி புகலிடமாக சாதி இருக்கிறது. இவர்கள் சாதாரண பொறுக்கிகளல்ல – ஓட்டுப் பொறுக்கி ஒட்டுண்ணிகள். தேர்தல் அரசியலில் மாறி மாறி கூட்டணி வைத்து இரண்டு திராவிடக் கட்சிகளின் தோள்களில் வேண்டிய மட்டும் சவாரி செய்து அதன் பலன்களை அனுபவித்தவர் ராமதாஸ். பிறகு தனது பேரங்கள் தோல்வியடைந்த பிறகு அவரது பிழைப்பிற்கு பிரச்சினை வருகிறது. இப்படித்தான் சாதியை வைத்து மீண்டும் கல்லாவைக் கட்டலாமா என்று முனைகிறார்.
சாதி ரீதியிலான அணி திரட்சி என்பது தவிர்க்கவியலாதவாறு பாட்டாளி மக்கள் கட்சியின் மேல்மட்டத்தை தேர்தல் பிழைப்புவாதத்தில் மூழ்கடித்தது என்றால் அதன் கீழ்மட்டமோ கட்டப்பஞ்சாயத்துகளில் சுகம் கண்டு சொந்த சாதியினராலேயே புறக்கணித்து ஒதுக்கப்பட்டனர். வன்னியர் ஓட்டு அந்நியருக்கு இல்லை என்று சவடாலடித்த ராமதாசுக்கு வன்னியர் ஓட்டும் இல்லை என்று சொந்த சாதி மக்களே இவர்களை தேர்தல்களில் புறக்கணிக்கத் துவங்கினர்.
இந்த நிலையில் மொத்த கட்சியும் வீழ்ச்சியின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருந்த போது, இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆதரவுத் தளத்துக்கும் கழுத்தறுப்புப் போட்டியாக வேல்முருகன் தோன்றுகிறார்.  ‘உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா’ நிலைத் தவிர்க்க, தனக்கு எது நன்றாக வருமோ அதையே செய்வோமே என்று தீர்மானிக்கும் ராமதாஸ், காடுவெட்டியை ஏவி விடுகிறார். வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் ஊர் ஊராக கூட்டங்கள் நடத்தி அப்பாவி தலித் மக்களுக்கு எதிராக வன்மம் கக்க வைக்கிறார்.
கடந்த சித்ரா பௌணர்மியன்று மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க மாநாட்டில் பேசும் குரு, “வன்னிய இனப் பெண்களை கலப்புத் திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா…வன்னியர் சங்கத் தலைவர் நான் சொல்கிறேன்”  என்று பகிரங்கமாக வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசுகிறார். இந்தப் பின்னணியில் தான் தர்மபுரி கலவரம் நடக்கிறது. கலவரத்தைத் தொடர்ந்து முற்போக்கு ஜனநாயக சக்திகளிடம் பா.ம.க முற்றிலுமாக அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் தான், ‘காதல் நாடகத் திருமணம்’ எனும் சொத்தை வாதத்தை ராமதாஸ் கையிலெடுத்துள்ளார்.
ராமதாஸின் முதன்மைக் கூட்டாளிகளான கவுண்டர்கள் சங்கமோ படு பிற்போக்கான ஒரு பின்னணியில் இருந்து உதித்த சாதி அமைப்பு. உலகமே முன்னேறி மாறிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னமும் நியான்டிரதால் காலத்திலேயே உறைந்து போய் நின்று விட்ட மூளைகளுக்குச் சொந்தக்காரர்கள் கொங்கு வேளாளக் கவுண்டர்களின் இந்த அமைப்பினர். ஒரு சாதிக் கட்சி எனும் வகையில் இதுவரையில் குறிப்பிடத்தக்க அளவில் எந்த தேர்தல்களிலும் வெற்றி பெறாத அமைப்பு இது. பெரும்பாலான கவுண்டர்கள் வேறு ஓட்டுக் கட்சிகளில் சிதறியிருக்கும் நிலையில், இது போன்ற 8ம் நூற்றாண்டுக் கோரிக்கைகளின் அடிப்படையில் அவர்களைத் திரட்டி அரசியல் ஆதாயம் தேடும் எத்தனிப்பே இவர்களை இயக்குகிறது.
ராமதாசின் வளர்ச்சியில் திராவிடக் கட்சிகளுக்கு எந்தளவுக்குப் பங்கு இருக்கிறதோ அதே அளவுக்கு ‘அறிவுஜீவிகளுக்கும்’ இருக்கிறது. சாதி ரீதியிலான அணி திரட்சி தான் சமூக விடுதலைக்கான துவக்கம் என்று என்பதுகளில் முழங்கிய அறிவுஜீவிகள், தொன்னூறுகளில் கூட ‘இது வித்தியாசமான கட்சி’ என்று பா.ம.க வை உயர்த்திப் பிடித்தனர். வித்தியாசம் என்றவுடன் பீதியடையாதீர்கள் நண்பர்களே. தே.மு.தி.கவுக்கும் விஜயின் மக்கள் இயக்கத்துக்கும் அறிவுஜீவிகளின் ஆலோசனை இல்லாததால் தையல் மிஷினும் அயர்ன் பாக்ஸும் கொடுப்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள் – பாம.கவுக்கு அவர்கள் ஆசி இருந்ததால் மாதிரி பட்ஜெட் போடுவது, மது ஒழிப்பு, தலித்-இடைநிலைச் சாதிகள் ஐக்கியம் என்று சில காலம் பம்மாத்துக் காட்டி வந்தனர்.
இப்போது தேர்தல் அரசியலில் முங்கியெழுந்து முற்றும் துறந்த முனி கோலத்தில் நிற்பதால், மறைந்து கொள்ள ஆட்டம் ஆரம்பித்த சாதியவாதப் புதரின் பின்னேயே ஒதுங்கியிருக்கிறார்கள். அதன் துவக்கம் தான் காதல் நாடகத் திருமண எதிர்ப்பு எனும் நாடகம்.
தலித் அமைப்பினர் இளைஞர்களுக்கு காதலிப்பது எப்படி என்று வகுப்பெடுப்பதாகவும், அதிலும் குறிப்பாக ஆதிக்க சாதி பெண்களை ‘மடக்க’ பயிற்சியளிப்பதாகவும், இந்தப் பயிற்சிகளில் தேறி பட்டையம் பெற்ற மாணவர்கள் ஆதிக்க சாதிப் பெண்களை மயக்கி விடுவதாகவும் பாட்டாளி மக்கள் கட்சியினர் புரளி கிளப்பிக் கொண்டுள்ளனர். மேலும், பெண்ணை ஒப்படைக்க வேண்டுமென்றால் பணம் கொடுக்க வேண்டுமென்று மிரட்டிப் பறிப்பதாகவும் கிசுகிசுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையே கொங்கு வேளாளர் அமைப்பினர் வெளிப்படையாகச் செய்கின்றனர்.
இவர்கள் சொல்வது போல் காதலைத் திட்டமிட்டு வரவழைக்கச் செய்ய முடியும் என்று நம்புவதும், பெண்கள் ஜீன்ஸ் பேண்ட்டை பார்த்தே மயங்கி விடுவார்களென்று நம்புவதும் காட்டுமிராண்டித்தனம் என்பது ஒருபக்கம் இருக்கட்டும். இவ்வாறு தங்கள் சமூகப் பெண்கள் யாரைக் காதலிக்க வேண்டும், எப்படிக் காதலிக்க வேண்டும், எதற்குக் காதலிக்க வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்க இவர்கள் யார்? பெண்களை உயிரும் உணர்வும் அறிவும் கொண்ட சக மனிதப் பிறவியாகப் பார்க்காமல் வெறும் சொத்தாகப் பார்க்கும் ஆணாதிக்கத் திமிரில் இருந்தும் ரத்ததில் கலந்து விட்ட ஆதிக்கசாதிக் கொழுப்பிலிருந்தும் தான் இப்படிப்பட்ட சிந்தனைகள் வரமுடியும்.
ஆட்சியதிகாரம் இந்தத் தாலிபான்களின் கைகளில் இன்னமும் நேரடியாச் சேரவில்லை. இருந்தால் எப்படியிருக்கும் என்பதை நாம் ஆப்கானிஸ்தானைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  இது போன்ற நச்சுக் கிருமிகள் தலையெடுப்பது அந்த சாதிகளில் இருக்கும் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் உழைக்கும் மக்களுக்குமே எதிரானது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டு இவர்களை முறியடிக்க முன்வர வேண்டும். அப்போது தான் இவர்களை முற்றாக ஒழித்துக்கட்ட முடியும். அப்படிச் சாதிக்க முடியும் என்பதை இதே தருமபுரியில் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னே தோழர்கள் அப்புவும் பாலனும் நிரூபித்துச் சென்றுள்ளனர்.