செவ்வாய், 4 டிசம்பர், 2012

தி.மு.க.,வுடன் தேர்தல் கூட்டணியா? "அமையலாம்' என்கிறார், விஜயகாந்த்

கோவை :"தி.மு.க.,வுடன் தேர்தல் கூட்டணி அமைக்கப்படுமா' என்ற கேள்விக்கு பதிலளித்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், "அமையலாம். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன. இப்போதே எல்லாவற்றையும் சொல்ல முடியுமா' என்று, பதிலளித்தார்.
முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட தே.மு.தி.க., மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ., பார்த்திபன், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை பார்த்து ஆறுதல் கூறுவதற்காக, கட்சி தலைவர் விஜயகாந்த் நேற்று கோவை வந்தார்.
கோவை மத்திய சிறை வாசலில், நிரூபர்களிடம் விஜயகாந்த் கூறியதாவது:ஆயிரம் பொய் வழக்குகள் போட்டாலும், அவற்றை எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம்.
தே.மு.தி.க., வளர்ச்சி அடைந்து வருவதை, கட்சியினர் மீது போடப்படும் பொய் வழக்குகள் மூலம் அறியலாம்.தமிழகம் முழுவதும் "டெங்கு' காய்ச்சல் பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தாமல், "மர்ம காய்ச்சல்' என்று கூறி வருகின்றனர். இதுகுறித்து கோர்ட் கேட்கும் கேள்விகளுக்கு, ஜெயலலிதாவால் பதில் சொல்ல முடியவில்லை.தமிழகம் முழுவதும் நிலவும் கடுமையான மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். "மின்வெட்டுக்கு மத்திய அரசு தான் காரணம்' என, கூறுவது ஏற்புடையதல்ல. மக்களிடம் ஓட்டு கேட்கும் போது, "விரைவில் மின்வெட்டு தீர்க்கப்படும்' என்று கூறித்தான், ஓட்டு கேட்டனர்.

காவிரி நதிநீர் பிரச்னையில், இரு மாநில அரசுகளும் சுமூகமாக பேசி நல்ல தீர்வு காண வேண்டும். இந்திய இறையாண்மை பாதிக்காத வகையில், மாநிலங்களிடையே உள்ள நல்லுறவு கெட்டுப்போகாத வண்ணம், அந்த தீர்வு இருக்க வேண்டும். இப்பிரச்னைகளை தவிர்க்க, நாட்டிலுள்ள அனைத்து நதிகளையும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு, விஜயகாந்த் கூறினார்.

"அடுத்து வரும் தேர்தலில், தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி அமையுமா' என, நிரூபர்கள் கேட்டதற்கு, ""அமையலாம் சார். தேர்தலுக்கு இன்னும் ரொம்ப நாட்கள் உள்ளன. இப்போதே உங்களுக்கு எல்லாத்தையும் சொல்ல முடியுமா? இன்னைக்கே தெரிஞ்சுக்கணுமா...,'' என, சிரித்துக் கொண்டே, கூறிச்சென்றார்.

கருத்துகள் இல்லை: