ஞாயிறு, 2 டிசம்பர், 2012

கேரளாவுக்கு செல்லும் பயணிகளுக்காக கோவை ரயில்கள் தாமதப்படுத்தப்படுத்தப்படுகிறது

கோவையை தென்னக ரயில்வே கேவலப்படுத்தியுள்ளது அம்பலம்
சென்னை மற்றும் வட மாநிலங்களில் இருந்து, கேரளாவுக்கு இயக்கப்படும் முக்கிய ரயில்கள், கோவை நகருக்குள் வராமலேயே சென்று விடும் அவலம் தொடர்கிறது. "இந்த ரயில்களை, கோவைக்குள் வந்து போகும்படி இயக்கினால், "அதி வேக ரயில்கள்' என்ற தகுதியையே, அவை இழந்து விடும்' என, தென்னக ரயில்வே கூறியுள்ளது அம்பலமாகியுள்ளது.கடந்த, 1950ம் ஆண்டுகளில், மகாராஷ்டிரா மும்பைக்கு அடுத்ததாக, தொழில் நகரம் என்ற பெருமையும், சிறப்பையும், கோவை நகரம் பெற்றிருந்தது. "தென் இந்தியாவின் மான்செஸ்டர்' என, அழைக்கப்பட்ட கோவை நகரம், இப்போது, பல வகைகளிலும் புறக்கணிக்கப்பட்டு, தொழில் நகரம் என்ற அந்தஸ்தை இழக்கும் நிலையில் உள்ளது. அதற்கு பல மணி நேர மின்வெட்டு உட்பட, பல பிரச்னைகள் காரணம்.இந்த சூழ்நிலையில், கோவை நகரத்தின் மிச்சமிருக்கும் முக்கியத்துவத்தையும் இழக்கச் செய்யும் பணியை, ரயில்வே துறை செய்து வருகிறது.ஒரு காலத்தில், கோவை மார்க்கமாக, கேரளாவுக்கு இயக்கப்பட்ட எல்லா ரயில்களும், கோவை ரயில் நிலையத்தில், நின்று செல்லும் நிலை இருந்தது. ஆனால், இருகூர் - கோவை இடையேயான ரயில் பாதையை, அகலப் பாதையாக மாற்றும் பணி துவங்கிய போது தான், ரயில்கள் நகருக்குள் வராமல் இயங்க ஆரம்பித்தன. தினமலர்.காம்
உரிய நிதி ஒதுக்கப்படாத காரணத்தால், வெறும், 18 கி.மீ., தூரம் கொண்ட, அந்த அகலப் பாதை பணி முடிவடைய, 15 ஆண்டுகளாகின. இந்த திட்டம் முடிந்து, இரண்டு ஆண்டுகளாகியும் நிலைமை மாறவில்லை."கோவை நகருக்குள் வராத வகையில், திருப்பி விடப்பட்ட ரயில்கள் எல்லாம், மீண்டும் நகருக்குள்ளும் வந்து செல்ல வேண்டும்' என, கோரிக்கை வைக்கப்பட்டது. 13 முக்கிய ரயில்கள், கோவைக்குள் வராமல் சென்று கொண்டிருக்கின்றன.பொதுமக்கள், வர்த்தகர்கள் என, பல தரப்பினரும் கோவைக்குரிய முக்கியத்துவம் பறிபோவதை உணர்ந்து, இந்த ரயில்களை கோவைக்குள் வரச் செய்ய வேண்டும் என, தீவிரமாக வலியுறுத்தினர். ஆனாலும், தென்னக ரயில்வே அதை கண்டு கொள்ளவில்லை.

இதுகுறித்து, கோவை தொகுதி மார்க்சிஸ்ட், எம்.பி., நடராஜனுக்கு, தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் அபய் குமார் கன்னா, ஒரு கடிதம் எழுதியுள்ளார்;

அதில் கூறப்பட்டுள்ளதாவது:கோவை நகருக்குள் வராத வகையில், திருப்பி விடப்பட்ட ரயில்களை, மீண்டும் நகருக்குள் வந்து செல்லும்படி இயக்குவது குறித்து, ஆராயப்பட்டது. அதன்படி, ஐந்து ரயில்கள் நகருக்குள் வந்து செல்ல, சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், மீதமுள்ள ஏழு ரயில்களை, கோவை நகருக்குள் வந்து செல்லும்படி, இயக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இவை அனைத்தும், அதிவேக விரைவு ரயில்கள். இவற்றை, கோவைக்குள் திருப்பினால், கூடுதலாக, 25 நிமிடங்களாகும். இது, இந்த ரயில்களின் வேகத்தையும், முக்கியத்துவத்தையும் இழக்கச் செய்து விடும்."அதிவேக ரயில்கள்' என்ற தகுதியையே, இந்த ரயில்கள் இழந்து விடும். எனவே, இந்த ரயில்களை, மீண்டும், கோவைக்குள் வந்து செல்லும்படி இயக்குவது என்பது, சாத்தியமில்லாதது.இவ்வாறு, அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

கோவை நகருக்குள் வந்து சென்றால், அதிவேக ரயில்கள் என்ற தகுதியையே, ரயில்கள் இழந்து விடும் என்று சொன்னால், இதை விட கோவை நகரத்தை கேவலப்படுத்தி விட முடியாது. வேறு மாநிலத்திலும், இது போல, ரயில்வே துறை கூறுவதற்கு, தைரியம் இருக்குமா என்பது தெரியவில்லை.இத்தனைக்கும் கோவை பகுதியில் மட்டும், 100 கி.மீ., வரை, இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன. இருந்தும், கோவைக்கு இந்த ரயில்களால் பலன் கிடைக்கவில்லை. கோவைக்குள் வந்து செல்லாமல், போத்தனூரில் இந்த ரயில்கள் நின்று செல்ல, இதற்கு முன், ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.பல போராட்டங்களுக்கு பின், இப்போது நான்கு ரயில்கள், கோவைக்குள் வந்து செல்கின்றன. இன்னும், ஒன்பது ரயில்கள் போத்தனூர் வழியாக ஓடிக் கொண்டிருக்கின்றன. இவற்றில், இரண்டு ரயில்களுக்கு, போத்தனூர் நிறுத்தமும், இல்லாமல் செய்துள்ளனர்.இதே ரயில்கள், சேலத்தில் நின்று செல்வதையும் ரத்து செய்திருந்தனர். கடும் எதிர்ப்பை அடுத்து இம்முடிவு கைவிடப்பட்டு, இப்போது சேலத்தில், இந்த ரயில்கள் நின்று செல்கின்றன.
கோவை நகருக்குள் மீண்டும் திருப்பி விடப்பட்ட ரயில்கள்



1. சென்னை - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் (தினசரி ரயில்)
2. மும்பை - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (வாரம் ஒருமுறை)
3. திருநெல்வேலி - பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் (வாரம் ஒருமுறை)
4. புதுச்சேரி - மங்களூரு எக்ஸ்பிரஸ் (வாரம் ஒருமுறை)
இவை பெரிதும் முக்கியத்துவம் இல்லாத ரயில்கள்.
திருப்பி விடப்பட வேண்டிய ரயில்கள்
1. சென்னை - திருவனந்தபுரம் (தினசரி)
2. சென்னை - மங்களூரு (தினசரி)
3. சென்னை - மங்களூரு சூப்பர் பாஸ்ட் (தினசரி)
4. யஷ்வந்த்பூர் - கண்ணனூர் (தினசரி)
5. எர்ணாகுளம் - பெங்களூரு (வாரம் இருமுறை)
6. எர்ணாகுளம் - பெங்களூரு (வாரம் ஒருமுறை)
7. கொச்சுவேலி - ஹுப்ளி (வாரம் ஒருமுறை)
8. சென்னை - திருவனந்தபுரம் (வாரம் ஒருமுறை)
9. திருச்சி- மங்களூரு (வாரம் ஒருமுறை)
கேரளாவுக்கு செல்லும் பயணிகள், தாமதம் இல்லாமல் செல்ல வேண்டுமென்பதற்காக, கோவை நகரத்தின் முக்கியத்துவம் பலியாகி வருகிறது. இந்நிலையில், மாற்றம் எப்போது வருமோ தெரியவில்லை.

-நமது டில்லி நிருபர்- 

கருத்துகள் இல்லை: