
இருளாண்டி இன்வெர்ட்டர் கம்பெனி உரிமையாளர் இருளாண்டி: ''இருள் சூழ்ந்த தமிழகத்துக்கு அடிக்கல் நாட்டிய அம்மாவின் பொற்பாதங்களுக்கு முதல் வணக்கம். அதன் பின்னரே என் உரை தொடக்கம். தமிழகம் இன்று இருள கமாக இருந்தாலும், எங்களுக்கு உங்கள் அருளகம் இருந்ததால்தான் எங்கள் வாழ்வில் வெளிச்சம் வீசியிருக்கிறது. அதுவும் இ.பி. வெளிச்சம் இல்லம்மா... அப்பப்ப வந்துட்டுப் போற இன்வெர்ட்டர் கரன்ட் வெளிச்சம் அம்மா! (ஜெ லேசாகச் சிரிக்கிறார்).
உங்களின் பொற்கால ஆட்சியில் மக்கள் கற்காலத்தை நோக்கியும், எங்கள் கம்பெனி ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கியும் ஓடிக்கொண்டே இருக்கிறது. (திடீர் என்று அருகில் வந்த ஓ.பி.எஸ். காதில் ஏதோ கிசுகிசுக்கிறார்) அதனால்தான் சொல்கிறேன்... அம்மா பிரதமராவது உறுதி. தமிழகத்தை மின் குறை மாநிலமாக்குவதும் உறுதி என்று சொல்லி அம்மாவின் பாதம் தொட்டு முடிக்கிறேன்''!
பிளாக் லைட் ஜெனரேட்டர் கம்பெனி உரிமையாளர் இருளரசு:
''அம்மா உங்கள் ஆட்சியில் தமிழர்களுக்குத் தினம் தினம் அமாவாசைதான். ஆனால் உங்கள் முகமே எங்களுக்கு பௌர்ணமி. மாதங்களில் நீங்கள் சித்திரை. மின்சாரம் இல்லாமல் மக்கள் இழந்து நிற்கிறார்கள் நித்திரை. அந்த கேப்பில்தான் எங்கள் ஜெனரேட்டர் நிறுவனம் பதித்தது முத்திரை. விரைவிலேயே நீங்கள் பிரதமராகி இந்தியா முழுவதும் எங்கள் தொழிலை வளரச் செய்யணும்னு கேட்டு அம்மாவின் பாதம் தொட்டு பணிந்து முடிக்கிறேன்''!
நிறைவாக மைக் பிடித்த ஜெ, ''அ.தி.மு.க என்பது ஆலமரம். இந்த ஆலமரத்தில் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். புரட்சித் தலைவர் வென்றெடுத்த இயக்கம் இது. நீங்கள் எதற்காக இந்த விழாவை நடத்தினீர்கள் என்பது எனக்குத் தெரியும். அது நிச்சயமாக நடக்கும். உங்கள் பகுதிகளில் உள்ள கழக முன்னோடிகளோடு இணைந்து நீங்களும் நாடாளுமன்றத் தேர்தல் பணியாற்றுங்கள். அடுத்து அமைய இருக்கும் மைய அரசில் அ.தி.மு.க. நிச்சயம் அங்கம் வகிக்கும். வீட்டுக்கு வீடு இலவச இன்வெர்ட்டர், தொழிற்கூடங்களுக்கு ஜெனரேட்டர், மின் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு மெழுகுவத்தி என விநியோகம் செய்வோம். அதற்கு உங்கள் நிறுவனங்களிடம் இருந்தே ஒப்பந்தம் போடுவோம். நாளை நமதே... நாற்பதும் நமதே!''
thanks vikatan + Gopalaswamy Iyengar ,Sri Rangam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக