சனி, 8 டிசம்பர், 2012

இளவரசி ட்ரீட்மென்ட் எடுத்த பணிபுரிந்த இந்திய வம்சாவளி நர்ஸ் மர்ம மரணம்

லண்டன்: இங்கிலாந்தில் அரச குடும்பத்தினர், கோடீஸ்வரர்கள், அரசு உயர் பதவிகளில் வகிப்பவர்களின் அந்தரங்க விஷயங்களை வெளியிட்டு பத்திரிகைகள் பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றன. அவர்களை பற்றிய விவரங்களை சேகரிக்க பத்திரிகைகள் பல வழிகளில் முயற்சி செய்கின்றன. இந்நிலையில், இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் பணியாற்றிய இந்திய வம்சாவளியை சேர்ந்த நர்ஸ் மர்மமாக மரணம் அடைந்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் மனைவி இளவரசி கேத் மிடில்டன் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய லண்டன் பகுதியில் உள்ள கிங் எட்வர்ட் மருத்துவமனைக்கு காலையில் சென்றார். அங்கு சிகிச்சை பெற்ற பின் மாளிகைக்கு திரும்பினார். இந்நிலையில், கிங் எட்வர்ட் மருத்துவமனையை 2 பேர் போனில் தொடர்பு கொண்டுள்ளனர். அந்த நேரத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நர்ஸ் ஜெசிந்தா சல்தானா என்பவர் ரிசப்ஷனில் இருந்துள்ளார். அவர் போனை எடுத்து பேசியுள்ளார்.
எதிர் முனையில் பேசியவர்கள் தங்களை ராணி எலிசபத் என்றும் இளவரசர் சார்லஸ் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டு, கேத்துக்கு அளிக்கும் சிகிச்சை பற்றி விவரம் கேட்டுள்ளனர். அரசு குடும்பத்தினர் பேசுகின்றனர் என்று நினைத்துக் கொண்டு, கேத்துக்கு சிகிச்சை அளிக்கும் நர்சுக்கு போன் அழைப்பை மாற்றி கொடுத்துள்ளார் ஜெசிந்தா. அந்த நர்சும் சிகிச்சை விவரம் பற்றி கூறியுள்ளார். ஆனால், போனில் பேசியவர்கள் உண்மையில் ராணியோ அல்லது இளவரசர் சார்லசோ இல்லை என்பது பின்னர் தெரிய வந்தது. இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போது, ஆஸ்திரேலியாவின் ரேடியோ ஜாக்கிகள்தான் அப்படி போலியாக எலிசபத் போலவும் சார்லஸ் போலவும் பேசியுள்ளனர் என்பது தெரிந்தது. உடனே போனில் போலியாக பேசிய ஆஸ்திரேலிய எப்.எம். ஜாக்கிகள் மெல் கிரீக் மற்றும் மைக்கேல் கிறிஸ்டியன் ஆகிய இருவரும் மறுநாள் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர். இந்நிலையில், போனில் பேசிய நர்ஸ் ஜெசிந்தா நேற்று காலை மருத்துவமனைக்கு அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து மருத்துவமனை தலைமை நிர்வாகி ஜான் லோப்த்ஹவுஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த 4 ஆண்டுகளாக ஜெசிந்தா சிறப்பாக பணியாற்றினார். அவருடைய அன்பும், நோயாளிகளிடம் அவர் காட்டிய பரிவும் அனைவரும் அறிவார்கள். அவர் மர்மமான முறையில் இறந்ததை அறிந்து அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளோம். இந்த சோகமான நேரத்தில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் செயின்ட் ஜேம்ஸ் பேலஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், Ôநர்ஸ் ஜெசிந்தா மரணம் அடைந்தது குறித்த தகவல் அறிந்து இளவரசர் வில்லியம்சும் இளவரசி கேத்தும் அதிர்ச்சி அடைந்தனர். ஜெசிந்தாவின் மரணத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்Õ என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், லண்டன் கிங் எட்வர்ட் மருத்துவமனை பற்றியும், நர்ஸ்கள் அளித்த தகவல் பற்றியும் கேத் மிடில்டனுக்கு அளித்த சிகிச்சை பற்றியும் ஆஸ்திரேலிய ரேடியோ ஜாக்கிகள் பரபரப்பாக செய்திகள் வெளியிட்ட பிரச்னை தொடர்பாகவே நர்ஸ் ஜெசிந்தா இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ஜெசிந்தாவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரேடியோ நேயர்கள் ஆவேசம்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சதர்ன் கிராஸ் ஆஸ்ட்ரியோ அண்ட் 2டே எப்எம்Õமின் ஜாக்கிகளுக்கு நேயர்கள்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து ராணி எலிசபத் போலவும், இளவரசர் சார்லஸ் போலவும் மிமிக்ரி செய்து பேசிய ரேடியோ ஜாக்கிகள் மெல் கிரீக், மைக்கேல் கிறிஸ்டியனை வேலையில் இருந்து நீக்க வேண்டும். அவர்கள் பரபரப்புக்காக செய்த வேலை, இந்திய வம்சாவளி நர்சின் உயிரை பறித்து விட்டது. இது மோசமான நடவடிக்கை என்று நேயர்கள் நூற்றுக்கணக்கானோர் ரேடியோ நிலையத்தை போனில் தொடர்பு கொண்டு ஆவேசமாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பேஸ் புக்கில் நூற்றுக்கணக்கானோர் ஆவேசமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 'ஜாக்கிகள் கிரீக், மைக்கேல் இருவரும் வேலைக்கு வரமாட்டார்கள். நர்ஸ் ஜெசிந்தா இறந்த செய்தி மிகவும் சோகமானது. எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். ஜாக்கிகள் இருவரும் இந்த செய்தியால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்' என்று பேஸ் புக்கில் ரேடியோ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: