புதன், 5 டிசம்பர், 2012

தேர்தல் பணம் பறிமுதல் விதிமுறைகளில் அதிரடி மாற்றம்

அகமதாபாத்: சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் மாநிலத்தில் பணம் பறிமுதல் செய்வதற்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றம் செய்துள்ளது. குஜராத்தில் வரும் 13 மற்றும் 17 தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. கடந்த மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அங்கு நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. தேர்தலில் பண பலத்தை கட்டுப்படுத்தும் வகையில் முறையான ஆவணங்கள் இன்றி வெளியிடங்களில் ரூ. 1 லட்சத்துக்கு அதிகமாக பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.http://www.tamilmurasu.org/index.asp
இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்த பல்வேறு குழுக்களும் அமைக்கப்பட்டன. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வியாபாரிகள் மனு தாக்கல் செய்தனர். ரூ. 2.5 லட்சம் வரை பணம் எடுத்து செல்ல ஐகோர்ட் அனுமதி வழங்கியது. பொது மக்கள் பணம் எடுத்துச் செல்ல எந்த தடையும் விதிக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட் விசாரித்து, பொதுமக்கள் எடுத்துச் செல்லும் பணத்தை பறிமுதல் செய்வது அவர்களது அடிப்படை உரிமையை பாதிக்கும் செயல் என கருத்து தெரிவித்தது.

இதை தொடர்ந்து குஜராத்தில் பணம் பறிமுதல் செய்வதற்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றியுள்ளது. பொது மக்கள் எடுத்து செல்லும் பணத்தை பறிமுதல் செய்யக்கூடாது என தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் வேட்பாளர்கள், அவர்களது ஏஜென்டுகள் ஆகியோர் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம் எடுத்துச் செல்லக்கூடாது எனவும், கூடுதலாக எடுத்துச் செல்லும் பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

கருத்துகள் இல்லை: