நார்வே: குழந்தையை அடித்து துன்புறுத்திய இந்திய தம்பதியருக்கு நார்வே நீதிமன்றம் 18 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சந்திரசேகர்-அனுபமா தம்பதியர் நார்வேயில் வசித்து வருகின்றனர். இவர்களின் 7 வயது மகன் சாய் ஸ்ரீராம் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்துவந்தான்.
பள்ளிப் பேருந்தில் பயணம் செய்தபோது சாய் ஸ்ரீராம் சிறுநீர் கழித்து விட்டதாகவும், அவன் விதியை மீறி பள்ளிக்கூடத்தில் இருந்து விளையாட்டு பொம்மைகளை வீட்டுக்கு எடுத்துச் சென்றான் என்றும் சந்திரசேகர் தம்பதியருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சாய் ஸ்ரீராமை கண்டித்த பெற்றோர்கள், அவனை இந்தியாவுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து சாய் ஸ்ரீராம், பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவிக்கவே அவர்கள் போலீசில் புகார் செய்தனர். உடனே போலீசாரும் சந்திரசேகர் தம்பதியர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள் மீது குழந்தைகளை மிரட்டி மோசமாக நடத்துதல், வன்முறை, பிற தவறான செயல்கள் புரிதல் போன்ற குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு ஆஸ்லோ கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, சந்திரசேகர் தம்பதியர் தங்கள் மகனை அடித்து துன்புறுத்தியதுடன், சூடும் வைத்துள்ளனர் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். எனவே, இந்தக் குற்றத்திற்காக சந்திரசேகர் தம்பதியருக்கு ஓராண்டுக்கும் அதிகமாக சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இரு தரப்பு கருத்தையும் கேட்டறிந்த நீதிபதி, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், சந்திரசேகருக்கு 18 மாதமும், அவரது மனைவி அனுபமாவுக்கு 15 மாதமும் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
சிறை தண்டனை பெற்றுள்ள சந்திரசேகர், டி.சி.எஸ். நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராகவும், அனுபமா இந்திய தூதரக அதிகாரியாகவும் பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நார்வே நாட்டில் குழந்தைகளுக்கான உரிமைகள் அதிகஅளவில் உள்ளன. அவர்களுக்கு சுகாதாரமான சூழ்நிலை இருக்கவேண்டும் என்றும் தனி அறை, விளையாட்டுப் பொருட்கள் கொடுக்கப்படவேண்டும் எனவும் நார்வே அரசு வலியுறுத்தி வருகிறது. அவர்கள் மீது வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனவும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருள் கொடுக்கவில்லை என்றும் அவர்களை தனியாக உறங்கவைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டி கடந்த ஆண்டு இரண்டு இந்திய குழந்தைகளை காப்பகத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டனர் அந்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் குழந்தையை துன்புறுத்திய குற்றத்திற்காக தற்போது இந்திய தம்பதியினருக்கு 18 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.http://tamil.oneindia.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக