சமீபத்தில் வெளியாகியுள்ள 'ரத்தசரித்திரம்' என்னும் தமிழ் டப்பிங் திரைப்படம் உண்மையாகவே ஆந்திர தேசத்தில் நடந்த கதைதான் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
அந்தக் கதையை முழுமையாகத் தெரிந்து கொள்ள கூகிளாண்டவர் துணையை நாடியபோது எனது ரத்தமே உறைந்து போனதைப் போன்றுதான் தோன்றியது. இதுவரையில் நான் பார்த்த அத்தனை தெலுங்கு திரைப்படங்களின் ரத்தம் தெறித்த கதைகளைப் பற்றியெல்லாம் ஏதோ ரசிகர்களின் ரசனைக்காகத் தெலுங்கு திரைக்கதையாசிரியர்கள் தீனி போட்டிருக்கிறார்கள் என்று நினைத்திருந்த எனது எண்ணத்தின் மீது, நாலு லாரி மண்ணையள்ளிப் போட்டு மூடிவிட்டது.
கிட்டத்தட்ட 10 மணி நேரங்கள் முழுமையாக இணையத்தின் முன் அமர்ந்து இது தொடர்பான அனைத்துச் செய்திகளையும் தேடிப் பிடித்துப் படித்து, தொகுத்து அவற்றை ஏதோ, என்னால் முடிந்த அளவுக்கு, எனக்கிருக்கின்ற கொஞ்சூண்டு பத்தாம் கிளாஸ் அறிவுக்கேற்றாற்போல் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்திருக்கிறேன்.
நீண்ட நெடும் கதை என்பதால்தான் அத்திரைப்படமே இரண்டு பாகங்களாக வந்திருக்கிறது.. நான் ஒரு பாகமாக முழுமையாகவே கொடுத்துவிட்டதால் பக்கங்கள் நீண்டுவிட்டன. பதிவுலகத் திலகங்கள் கொஞ்சம் சோம்பேறித்தனப்படாமல் இதனை முழுமையாகப் படித்து உண்மையைத் தெரிந்து கொண்டு, என்னைத் திட்டியாவது ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டுப் போனால் உண்மையாகவே செல்லங்களான எனது கைகளும், விரல்களும் மகிழ்ச்சியடைவார்கள்.. நன்றி..
ரத்தசரித்திரம்..! ஆம்..!! ரத்தம் தெறிக்க வைத்திருக்கும் இந்தக் கதையின் பல்வேறு முடிச்சுக்களும், திருப்பங்களும் பயங்கரமானவை. அதிகாரமும், அரசியலும் இணைந்து, பிணைந்து ஜனநாயகம் என்ற போர்வையில் நாட்டில் எப்படியொரு சர்வாதிகாரத்தை நிலை நாட்டியிருக்கின்றன என்பதற்கு இந்த பரிதலா ரவியின் சொந்தக் கதையும் ஒரு சான்று..
இந்தக் கதையில் தற்போதைக்கு ஒரு முடிவுதான் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. இன்னொரு முடிவை காலம் எதிர்நோக்கி காத்திருக்கிறது. இதன் ஆதிமூலத்தை அறிய வேண்டுமெனில் நாம் பல காலம் பின்னோக்கி போக வேண்டியிருக்கிறது..
2005-ம் ஆண்டு ஜனவரி 24. மதியம் 2.55 மணி. ஆந்திராவின் ரத்த அரசியலுக்கு புகழ் பெற்ற அனந்தப்பூர் மாவட்டத் தலைநகரமான அனந்தப்பூரில் உள்ள தெலுங்கு தேசக் கட்சியின் தலைமையகம். அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜில்லா பரிஷத் தேர்தல்கள் குறித்து கட்சி ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்துவிட்டு அலுவலகத்தில் இருந்து வாசலுக்கு வந்து கொண்டிருந்தார் பரிதலா ரவி..
கட்சியினரின் கை கூப்பல்களையும், வணக்கத்தையும் ஏற்றுக் கொண்டே வந்தவரை எதிர்கொண்டவர்கள் ஐவர்.. அதில் இருவரின் கைகளில் இருந்த துப்பாக்கியில் இருந்து சீறிப் பாய்ந்த தோட்டாக்கள் பரிதலா ரவியின் உடலையும், தலையையும் ஊடுறுவித் தாக்க.. சம்பவ இடத்திலேயே பிணமாகவே சரிந்தார் ரவி.
கொல்லப்பட்ட பரிதலா ரவி சாதாரணமானவர் அல்ல. அப்போதைய அனந்தப்பூர் மாவட்டத்தின் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்.. பெனுகுண்டா சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர். ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர். ஒரு முறை தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர். அனந்தப்பூர் மாவட்டத்தின் காட்பாதரே இவர்தான்.
இவ்வளவு ஏன்..? 56 கொலை வழக்குகள், பல கொலை முயற்சி வழக்குகள், தேர்தல் முறைகேடுகள் சம்பந்தமான வழக்குகள் பல வகையிலும் இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமானவராக சம்பந்தப்பட்டவர்.. ஆனால் எந்த வழக்கிலும் சட்டப்படியாக இதுவரையிலும் தண்டிக்கப்படாதவர்.. இவரைத்தான் அன்றைய மதிய நேரத்தில் சில துப்பாக்கித் தோட்டாக்கள் சட்டவிரோதமாகத் துளைத்தெடுத்து படுகொலை செய்தன.
விஷயம் கேள்விப்பட்டு ஆந்திராவே தகதகத்தது.. அனந்தப்பூர் என்றில்லை.. ஹைதராபாத்வரையிலுமாக தெலுங்கு தேசம் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்து பட்டையைக் கிளப்ப... பரிதலா ரவியின் உடல் அடக்கம் செய்யப்படும்வரையிலும் வன்முறைக் காட்சிகள் தொடர்ந்தன.
ஆந்திர வரலாற்றிலேயே வன்முறையால் அதிக அளவுக்குப் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதில் இரண்டாமிடம் இந்த நிகழ்ச்சிக்குதான். சுமார் 60 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தீக்கிரையானதாகச் சொல்கின்றன ஆந்திர மீடியாக்கள்..
கொந்தளித்துப் போயிருந்த பரிதலா ரவியின் ஆதரவாளர்கள் அனைவரும் ஒரே குரலில் சொன்னது, “அவனைத் தூக்குல போடு.. இல்லைன்னா ஒரு நாள் அவனை பெயில்ல விடு. அவன் கதையை நாங்க முடிச்சர்றோம்..” என்பதுதான்.. அந்த “அவன்” யார் என்பதை பத்திரிகைகளில் இருந்து, தொலைக்காட்சி செய்திகளில் இருந்து வெளிப்படையாகவே சொல்லித் தீர்த்தன மீடியாக்கள்.
“அந்த 'அவனி'ன் துணையோடு ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டிதான் திட்டமிட்டு பரிதலா ரவியைப் படுகொலை செய்திருக்கிறார்..” என்று திட்டவட்டமாகவே, நேரிடையாகவே குற்றம்சாட்டினார்கள் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபுநாயுடுவும், அவருடைய கட்சித் தலைவர்களும்.
“இல்லை..” என்று மறுத்த அப்போதைய முதல்வர் ராஜசேகர ரெட்டி.. “இதற்காக எந்த தீக்குளிப்பையும் செய்யத் தயாராக இருக்கிறேன். எனது மகன் ஜெகன்மோகன் ரெட்டி அப்படிப்பட்டவன் இல்லை..” என்று மறுத்தார். டெல்லிவரையிலும் இந்தப் படுகொலையின் தாக்கம் எதிரொலித்தது.
சந்திரபாபு நாயுடுவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றி ஒரு ஆண்டுகூட ஆகவில்லை. அதற்குள் மக்கள் மத்தியில் கெட்ட பெயர் வேண்டாம் என்று டெல்லி மேலிடம் எச்சரித்ததினாலும், கொந்தளித்துப் போயிருந்த எதிர்க்கட்சியினரைச் சமாளிக்க வேண்டியும் இந்தக் கொலை வழக்கை உடனேயே சி.பி.ஐ.க்கு மாற்றுவதாகக் கூறினார் ராஜசேகர ரெட்டி.
அடுத்து அவர் உடனடியாகச் செய்த வேலை.. கர்நாடக அரசுக்கு போன் செய்ததுதான். அப்போது உயிருக்குப் பயந்து பெங்களூரில் தங்க வைக்கப்பட்டிருந்த தனது மகன் ஜெகன்மோகன்ரெட்டிக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் பாதுகாப்பைத் தரும்படி கேட்டுக் கொண்டார் ராஜசேகர ரெட்டி.
இப்படி மாநிலத்தின் ஆட்சியையே ஆட்டம் காண வைக்குமளவுக்கு நடத்தப்பட்ட இந்தப் படுகொலையின் சூத்திரதாரியான அந்த அவனின் பெயர் “மட்டலச்செருவு சூர்ய நாராயண ரெட்டி” என்னும் “சூரி..” அதுதான் ஆள் தெரிந்துவிட்டதே.. “தூக்கி உள்ளே போட வேண்டியதுதானே..?” என்பீர்கள்.. ஆனால் இந்த சூரி அப்போது இருந்ததே ஹைதராபாத்தில் உள்ள செர்லபள்ளி மத்திய சிறைச்சாலையின் அதியுயர் பாதுகாப்பு செல்லில்.. பின்பு எப்படி இந்தக் கொலை..? மில்லியன் டாலர் கேள்வி இது..?
ஆந்திர மாநிலத்தின் அரசியலில் மிகத் தீவிரமான வன்முறைகளுக்குப் பெயர் பெற்ற மாவட்டங்கள் அனந்தப்பூர், கடப்பா, கர்னூல், சித்தூர் ஆகியவை. இவை ராயலசீமா பகுதிகள் என்றழைக்கப்படுபவை. இந்த நான்கு மாவட்டங்களுமே ஒன்றுடன் ஒன்று நிலத் தொடர்புடையவை.. இதில் அனந்தப்பூரும், சித்தூரும் கர்நாடக மாநிலத்தின் எல்லைப் பகுதியாகவும் அமைந்துள்ளன.
காலம், காலமாக ஆந்திராவின் அரசியலில் நிலவி வந்த நிலச்சுவான்தாரர், குடிமக்கள் பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த காலக்கட்டம் அது.. பண்ணையார்கள் குடியானவர்களை அடிமைகளாக நடத்துவதையும், ஏழைகளின் நிலத்தை பறித்து தங்கள் சொத்தாக்கி அவர்களை கொடுமைப்படுத்துவதையும் எதிர்த்துதான் மார்க்சிய இயக்கத்தின் மீது தாக்கம் கொண்ட சிலர் தீவிரவாதம் பேசி நக்ஸலைட்டுகளாக உருமாறி பதில் தாக்குதல்களை ஆதிக்க சாதிகளின் மீது தொடுத்துக் கொண்டிருந்த சூழலும் இருந்தது.
நக்ஸலைட்டுகள் என்றழைக்கப்பட்ட தீவிர மார்க்சியவாதிகளின் ஆதிக்கம் இந்த நான்கு மாவட்டங்களிலும் உச்சத்தில் இருந்ததற்குக் காரணம் இங்கு நிலவிய வர்க்க வித்தியாசமும், ஆண்டான், அடிமை கலாச்சாரமும்தான். சுதந்திரம் அடைந்ததாக உண்மையாகச் சொல்லிக் கொண்டாலும், ஏழைகளுக்கு அது கிடைக்கவிடாமல் செய்யத்தான் அரசியல் துணையோடு இந்தப் பகுதி நிலச்சுவான்தாரர்கள் கூட்டணி வைத்திருந்தார்கள்.
நமது கதாநாயகன் பரிதலா ரவி இந்த வெப்பக் காடான அனந்தப்பூர் மாவட்டத்தின் பெனுகுண்டா சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெங்கடபுரம் என்னும் கிராமத்தில் 28-05-1957-ல் பிறந்தவர். இவருடைய அப்பா ஸ்ரீராமுலு அப்போதே 300 ஏக்கர் நிலங்களுக்குச் சொந்தக்காரர். ஆனாலும் மார்க்சிய சிந்தாந்தத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். பரிவு கொண்டவர். இதனாலேயே தனது நிலங்களின் பெரும் பகுதியை ஏழை, எளிய மக்களுக்குப் பிரித்துக் கொடுத்திருக்கிறார். அத்தோடு அந்தப் பகுதி ஏழை மக்களுக்குத் தலைவராகவும் இருந்திருக்கிறார்.
இந்த மாவட்டத்தின் பெரும்பாலான நிலங்கள் கனகன்பள்ளி பண்ணையாரான கங்குல நாராயண ரெட்டி என்பவரிடமும், சென்னகொத்தபள்ளி பண்ணையார் சேனா சென்னா ரெட்டி என்பவரிடமும்தான் இருந்திருக்கின்றன. இந்த இரண்டு பண்ணையார்களிடமும் இருந்த 600 ஏக்கர் நிலங்களை பராமரித்தல் மற்றும் அவற்றை ஏழை, எளிய உழைக்கும் மக்களிடம் கொடுத்து பாடுபட வைப்பது என்ற வேலைகளைச் செய்து வந்தது பரிதலா ரவியின் அப்பா ஸ்ரீராமுலுதான்.
1971-ம் ஆண்டில் ஸ்ரீராமுலு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். சேர்ந்த வேகத்திலேயே ஏற்கெனவே அவருக்கு இருந்த நல்ல பெயரால், அந்த இயக்கத்தின் மிக முக்கியத் தலைவராகவும் ஆகிவிட்டார். நக்ஸல் இயக்கத்தில் இருந்தாலும் அவர் உயிருடன் இருந்தவரையிலும் யாரையும் கொலை செய்தததில்லை என்று நக்ஸல் இயக்கம் இன்றுவரையிலும் சொல்லி வருகிறது.
கங்குல நாராயண ரெட்டியின் நிலங்களை ஸ்ரீராமுலு ஏழைகளுக்கு வாரிக் கொடுப்பதையும், அதன் மூலம் கிடைக்கின்ற புகழ் அவருக்கே கிடைப்பதையும் கண்டு பொறாமைப்பட்ட சென்னா ரெட்டி, கங்குல ரெட்டிக்கு தூபம் போட்டு அவர் மனதை திசை திருப்பிவிட்டார். இந்தத் திடீர் வில்லங்கத்தினால் ஸ்ரீராமுலு, கங்குல ரெட்டி மற்றும் சென்னா ரெட்டி இருவருக்கும் ஒரே நேரத்தில் எதிரியானார்.
நக்ஸல் இயக்கத்தினரிடம் இந்த ரெட்டிகள் இருவரின் திடீர் மனமாற்றத்தையும், நிலங்களை தர மறுப்பதையும் ராமுலு எடுத்துச் சொல்லி போராட்டத்துக்குத் தயார்படுத்திய நிலையில் ராமுலுவை விட்டுவைத்தால் இனி தாங்கள் நிம்மதியாக இருக்க முடியாது என்பதால் அவரைப் போட்டுத் தள்ள அவரது உதவியாளர்களில் ஒருவனையே சென்னா ரெட்டி தயார் செய்து அனுப்பி வைத்திருக்கிறார்.
1976-ம் ஆண்டு பக்ஸம்பள்ளி என்னும் ஊரில் நடந்த ஒரு கல்யாணத்துக்காக பேருந்தில் சென்ற ராமுலுவை பின் தொடர்ந்த அந்த உதவியாளர் பக்ஸம்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகேயே பேருந்தில் இருந்து இறங்கி நிமிடத்தில் ராமுலுவை படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடிவிட்டார். இதுதான் இன்றுவரையிலான பரிதலா ரவி-சூரி பரம்பரையினர் இரு தரப்பிலும் போட்டுத் தாக்கும் படுகொலைகளின் துவக்கப் புள்ளி..
இந்த நேரத்தில் பரிதலா ரவி நக்ஸல் இயக்கத்திலும் இல்லை. எந்தப் போராட்டத்திலும் ஈடுபடவும் இல்லை. ரவியின் தந்தை ஸ்ரீராமுலு போலவே ரவியின் அண்ணன் ஹரியும் நிலச்சுவான்தார் ஒழிப்பு விவகாரத்தில் மிகத் தீவிரமான ஈடுபாடுடையவர். ஆனால் தந்தை ஸ்ரீராமுலுவால் அடக்கி வைக்கப்பட்டிருந்தவர் ஸ்ரீராமுலுவின் இறப்புக்குப் பின்பு 1979-ல் நக்ஸல் இயக்கத்தில் இணைந்தார்.
இயக்கத்தில் இணைந்த நிலையில் பல கொலைகளுக்கு சாட்சியாகவும், சில கொலைகளுடன் நேரடித் தொடர்பிலும் செயல்பட்டிருக்கிறார் ஹரி. இவரது செயல்பாட்டால் அப்போதைய அரசு இவரையும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்தது.
இந்த நிலையில் 1982-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதியன்று தனது சொந்த வீட்டுக்கு வந்திருக்கிறார் ஹரி. அவரது வருகையை மோப்பம் பிடித்த வெங்கடபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபீர், பெரும் போலீஸ் படையுடன் வந்து ஹரியைச் சுற்றி வளைத்திருக்கிறார்.
போலீஸ் வந்துள்ளதைப் பார்த்து ஹரி வீட்டுக் கதவுகளைச் சாத்திக் கொண்டு உள்ளேயே மறைந்து கொள்ள.. ஹரியின் தங்கையைப் பிடித்துக் கொண்ட போலீஸ், ஹரி வெளியே வராவிட்டால் தங்கையை கற்பழித்துவிடுவோம் என்று மிரட்டிய காரணத்தால் போலீஸிடம் சரணடைந்தார் ஹரி.
அங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நசனகொட்டா கிராமத்திற்கு ஹரியை கொண்டு சென்ற போலீஸ் அங்கே 2000 கிராம மக்கள் கூடியிருந்த நிலையில், அவர்களது கண் முன்பாகவே ஹரியை சுட்டுக் கொன்றுள்ளது. இந்தக் கொலைக்குப் பின்னணியில் இருந்ததும் அதே கங்குல நாராயண ரெட்டி, கங்குல நரசன்னா மற்றும் சேனே சென்னா ரெட்டியும்தான்..
ஸ்ரீராமுலுவின் குடும்பத்தை விட்டு வைத்தால் நமக்கு ஆபத்துதான் என்பதால் அடுத்து ரவியையும் இந்தக் கூட்டம் தேட ஆரம்பித்தது. இந்த நேரத்தில்தான் பரிதலா ரவி உருவகொண்டா நகரத்தின் அருகேயுள்ள சீர்பிகொட்டாளா என்னும் தனது தாய் பிறந்த ஊருக்குச் சென்று மறைந்து வாழ்ந்துள்ளார். அங்கே அவரது மாமா கொண்டையாவின் தயவினாலும், சிறிது காலம் இருக்கலாம் என்றுதான் சென்றிருக்கிறார். அங்கே வாழ்ந்து வந்த நேரத்தில்தான் 1986-ல் கொண்டையாவின் மகள் சுனிதாவை திருமணம் செய்திருக்கிறார் ரவி.
தனது பாதுகாப்பிற்காகவும், எதிர்கால வாழ்க்கைக்காகவும் இந்தச் சமயத்தில்தான் நக்ஸல் இயக்கத்தில் ரவி இணைந்திருக்கிறார். ஆனால் இதில் இருந்த சமயத்தில் அவர் எந்தவொரு கொலைகளையும் செய்ததில்லை என்று நக்ஸல் அமைப்பினரும், கத்தார் போன்ற மூத்தத் தலைவர்களும் இன்றுவரையிலும் சொல்லி வருகிறார்கள்.
ரவி இப்படி தனது மாமா ஊரில் தலைமறைவாக வாழ்ந்து வந்த நிலையில் அவருடைய அப்பா மற்றும் அண்ணனின் மரணத்திற்குகாக நக்ஸல் இயக்கமே பழிக்குப் பழி ஆட்டத்தைத் துவக்கியிருக்கிறது.
முதலில் கங்குல நாராயண ரெட்டியின் கூட்டாளிகளான நரசன்னா மற்றும் யாடி ரெட்டியை சுட்டுக் கொன்றது நக்ஸல் இயக்கம். 1983-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி அனந்தப்பூரில் இருந்த ஒரு விடுதியில் தங்கியிருந்த பெனுகுண்டா சட்டமன்ற உறுப்பினர் கங்குல நாராயண ரெட்டியை வெட்டிக் கொன்றார்கள் நக்ஸல்கள்.
இந்தப் படுகொலைச் செய்தி பரவியபோது இதனை செய்தது பரிதலா ரவிதான் என்றே ஆந்திரா முழுவதும் செய்திகள் பரவின. ஆனால் இதனைச் செய்தது நாங்கள்தான் என்று நக்ஸல் அமைப்பினர் இன்றைக்கும் சொல்கிறார்கள்.
அதுவரையில் பெனுகுண்டா தொகுதியின் அசைக்க முடியாத சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்த நாராயண ரெட்டி கொல்லப்பட்ட பின்பு, ராமச்சந்திர ரெட்டி என்பவர் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பாக எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். இந்த ரெட்டிகாரு வந்த பின்புதான் அனந்தப்பூர் தொகுதி அமைதி முற்றிலுமாக சிதைந்து போனது என்கிறார்கள்.
நாராயண ரெட்டி மேலே போய்ச் சேர்ந்தாலும் இன்னொரு பண்ணையாரான சென்னா ரெட்டியும், அவரது மகன்களான ரமணா ரெட்டி, ஓபுல் ரெட்டி, இவர்களோடு கொல்லப்பட்ட நாராயண ரெட்டியின் மகனான கங்குல சூர்ய நாராயண ரெட்டி இவர்களுடைய கூட்டணி கொடுமைகள் அனந்தப்பூர் மாவட்டத்தில் அனலைக் கக்கியுள்ளது.
இதில் சூர்ய நாராயண ரெட்டி மற்றும் ஓபுல் ரெட்டி மீது வண்டி, வண்டியாக புகார்கள். அத்தனையும் கற்பழிப்புச் செய்திகள்தான். ஊரில் எந்த ஒரு அழகான பெண்ணையும் விட்டுவைத்ததில்லையாம் இந்தக் கூட்டணி.
ஓபுல் ரெட்டி ஒரு மோசமான சேடிஸ்ட்டாக வாழ்ந்திருக்கிறார் என்கின்றன ஆந்திர மீடியாக்கள். பெண்கள் என்றாலும், 45 வயதுக்குள், திருமணமான பெண்களையே குறி வைத்து குதறி எடுப்பதுதான் ஓபுல் ரெட்டியின் மகத்தான மக்கள் சேவையாம்.
அதிலும் சில சமயங்களில் அந்தப் பெண்களின் வீடுகளுக்குள்ளேயே நுழைந்து கணவன்மார்கள் முன்னிலையிலேயே அவர்களைக் கற்பழிப்பதுதான் இவனது ஸ்டைலாம்.. அதே சமயம் இந்தச் சமயத்தில் அந்தப் பகுதியில் பொறுப்பில் இருந்த பல தெலுங்கு தேசம் கட்சிப் பிரமுகர்களை பரலோகத்திற்கு அனுப்பி வைத்த பெருமையும் இந்த ரெட்டிக்காரப் புள்ளைகளுக்கு உண்டு.
1989-ல் காங்கிரஸ் ஆந்திராவில் ஆட்சியமைத்தபோது பெனுகுண்டா தொகுதியின் எம்.எல்.ஏ.வாக தேர்வானவர் சென்னா ரெட்டிதான். ஏற்கெனவே அவிழ்த்துவிட்ட காளைகளாக பவனி வந்த பிள்ளை ரெட்டிகள் கூட்டணி, இதன் பின்பு அசுர பலத்துடன் அப்பாவிகள் மீது பாய்ந்துள்ளன.
சென்னா ரெட்டியின் வீட்டின் அருகேதான் பெண்கள் கல்லூரி இருந்ததாம். 1989 முதல் 1993 வரையிலான காலக்கட்டத்தில் அந்தக் கல்லூரியில் படித்த பெண்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடையத் தொடங்கி வகுப்புக்கு இரண்டு பேர், மூன்று பேர் மட்டுமே படிப்பதற்காக வந்துள்ளனர். அந்த அளவுக்கு இந்த ஓபுல் ரெட்டியும், சூர்ய நாராயண ரெட்டியும் தங்களது மன்மத விளையாட்டை அந்த ஊரில் விளையாடித் தீர்த்திருக்கிறார்கள்.
கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவிகள் என்றெல்லாம் பாரபட்சம் பார்க்காமல் தனது பள்ளியறைக்குத் தூக்கிச் சென்றிருக்கும் இந்த ரெட்டிகளைப் பார்த்து அன்றைய அனந்தப்பூர் மாவட்டமே கிலியடித்துப் போயிருந்ததாக இப்போதுதான் எழுதுகிறார்கள். பேசுகிறார்கள். சொல்கிறார்கள்.
தர்மாவரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் மனைவியை வீடு புகுந்து கற்பழித்த செய்திதான் முதன் முதலில் ஓபுல் ரெட்டி மீதான பார்வையை உலகத்திற்குக் கொண்டு சென்றது என்கிறார்கள். ஆனால் நேரடி சாட்சியங்கள் எதுவுமில்லாததால் பேச்சோடு அது நின்று போனதாம். தமிழ்நாட்டில் இருந்து தர்மாவரத்திற்கு குடியேறிய இரண்டு பெண்களை ஓபுல் ரெட்டி கற்பழித்ததும் தொடர்ந்திருக்கிறது.
தெரியாத பெண்கள் என்றில்லை. ஓபுல் ரெட்டி தன்னிடம் வேலை செய்யும் ஆட்களின் வீடுகளிலும் கை வைத்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் டாக்டர் குள்ளயப்பா என்பவரின் மகளையும் கற்பழித்த புகார் இவர் மீது அப்போது எழுந்துள்ளது.
இவர் ஒரு சேடிஸ்ட் மனப்பான்மை கொண்டவர் என்பதையும் இவருடைய மரணத்திற்குப் பின்புதான் அங்கேயிருந்தவர்கள் வெளியில் சொல்லியிருக்கிறார்கள். ரயில் வந்து கொண்டிருக்கும்போது ஒருவரை உயிருடன் ரயில் முன் எறிந்து அதைப் பார்த்து சிரிக்கும் அளவுக்கு கொடூரமானவர் என்கிறார்கள். இன்னும் எழுதியிருப்பதையெல்லாம் படித்தால் வாந்தி வருகிறது.
ஒரு தெலுங்கு தேசம் கட்சித் தொண்டரின் உடலில் இருந்து ஒரு நாளைக்கு ஒரு கிலோவாக கொஞ்சம், கொஞ்சமாக வெட்டியெடுத்து வீசியெறிந்து சித்ரவதை செய்து கொலை செய்துள்ளார். ஒருவரின் வயிற்றில் டிரில்லிங் மெஷினை வைத்து ஓட்டை போட்டு கொலை செய்துள்ளார்.
இவருக்குச் சற்றும் சளைக்காதவராக இருந்திருக்கிறார் இவருடைய தோஸ்த்தான மட்டலச்செருவூ சூர்ய நாராயண ரெட்டி. வீடு புகுந்து பெற்றோர்கள் முன்னிலையிலேயே ஒரு பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி கற்பழித்திருக்கிறார். இந்தப் புகார்தான் முதன்முதலாக இவரைப் பற்றி வெளியில் பேச வைத்துள்ளது. ஒரு அரசு ஊழியையும் கற்பழித்த புகாரும் இவர் மேல் உள்ளது.
இவர்களுடைய அட்டூழியங்களைப் பொறுக்க முடியாத மக்கள் நக்ஸலைட்டுகளின் துணையை நாடத் துவங்க.. நக்ஸலைட்டுகள் இவர்களை அதிகம் நெருங்க முடியாமல் கைத்தடிகளை முதலில் போடடுத் தள்ளத் துவங்கியிருக்கிறார்கள். இதனால் கோபம் கொண்ட ரெட்டிகளும் தங்கள் பங்குக்கு துப்பாக்கிகளுக்கு வேலை கொடுக்கத் துவங்கியிருக்கிறார்கள். இரு புறமும் போட்டுத் தள்ளுவது இதன் பின்பு மிக அதிகமாயிருக்கிறது.
1990-ல் சென்னா ரெட்டி மற்றும் சூரிய நாராயண ரெட்டியின் ஆட்கள் பத்தாபாளையம் கிராம தலைவரான போயா வெங்கட ராமுடு என்பவரை படுகொலை செய்திருக்கிறார்கள். இவர் பரிதலா ரவியின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். அத்தோடு கூடவே வேப்பகுண்டா கிராம சங்கத்தின் செயலாளர் வரதப்பாவையும் கொலை செய்து இருவரின் சடலத்தையும் டீஸல் ஊற்றி எரித்துள்ளனர்.
சென்னா ரெட்டி, சூர்யநாராயண ரெட்டி இருவருமே இணைந்தும் பல கொலை காரியங்களைச் செய்திருக்கிறார்கள். நேமிலிவரம் கிராம முன்சீப் சுப்பராயுடுவை கங்கணப்பள்ளிக்கு கடத்திச் சென்று அங்கேயே அவரை கொலை செய்திருக்கிறார்கள். 1994-ல் ராயுடுரகம் என்ற ஊரில் நாராயணப்பா என்பவரை கொலை செய்திருக்கிறார்கள். இவர் பரிதலா ரவிக்கு மிக நெருக்கமானவர்.
குடியரசு தினத்தன்று கொடியேற்றுவதற்காகச் சென்ற தகரகுண்டா கிராமத்தின் தலைவரான போயா நாகராஜூவை சூர்ய நாராயண ரெட்டியும் அவரது ஆட்களும் குண்டு வீசி கொலை செய்துள்ளனர். இவரும் பரிதலா ரவியின் குடும்பத்திற்கு மிக நெருக்கமானவர்.
இப்படி தனக்கு நெருக்கமானவர்களையெல்லாம் சென்னா ரெட்டியும், சூர்யநாராயண ரெட்டியும் அவர்தம் கூட்டாளிகளும் பொலி போட்டுவிட்டதை அறிந்த பரிதலா ரவி பதிலடி கொடுக்க நேரம் பார்த்துக் காத்துக் கொண்டுதான் இருந்திருக்கிறார்.
அதற்கான சரியான தருணத்தை நக்ஸல் அமைப்பினரே அவருக்குக் கொடுத்திருக்கின்றனர். 1991-ல் இந்த அழித்தொழிப்பு பிராஜெக்ட்டில் நக்ஸல்களுடன் கை கோர்த்திருக்கிறார் ரவி.
இத்தனை நாட்கள் இவர்களுடைய அட்டூழியத்தைப் பொறுத்துக் கொண்டவர்கள் பொறுத்தது போதும் என பொங்கி எழுந்தது இந்த ஆண்டில்தான் என்று ஆந்திர அரசியல் வரலாற்றில் எழுதப்பட்டிருக்கிறது.
முதல் பலி பெனுகுண்டா எம்.எல்.ஏ.வான சேனா சென்னா ரெட்டிதான். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தனது வீட்டில் சேரில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த சென்னா ரெட்டியை அணுகிய போலீஸ் உடையணிந்த நக்ஸல்கள் முதலில் ஒரு சல்யூட்டை அவருக்கு வைத்துவிட்டு பின்பு சராமரியாக அவரைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இந்தக் களேபரத்தில் சென்னாவின் அடியாட்கள் சிலரும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
எம்.எல்.ஏ.வான சென்னா ரெட்டியின் மரணத்தால் ஏற்பட்ட இடைத்தேர்தலில் பி.டெக். மூன்றாமாண்டு மாணவராக கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சென்னா ரெட்டியின் மூத்த மகன் ரமணா ரெட்டி தனது படிப்பை நிறுத்திவிட்டு தேர்தல் களத்தில் குதித்தார்.
தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் காடே லிங்கப்பா என்பவர் போட்டியிட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரத்திலேயே தங்களது கை வரிசையைக் காட்டியுள்ளது ரெட்டி தரப்பு. தெலுங்கு தேச கட்சித் தொண்டர்கள் சிலர் இந்தத் தேர்தலின்போது கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடுமையான எதிர்ப்பிலும் ரமணா ரெட்டியே வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகியிருக்கிறார். இதன் பின்பு இந்தக் கொடூர கூட்டாளிகளின் அட்டகாசம் அனந்தப்பூரையே அதகளமாக்கியிருக்கிறது.
இந்த நேரத்தில்தான் ஆந்திர அரசியலையே புரட்டிப் போடக் கூடிய ஒரு நிகழ்வு நக்ஸல்கள் இயக்கத்தில் தோன்றியது. அதுவரையில் ஏழை, எளிய மக்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வோம் என்கிற ஒற்றைக் குறிக்கோளோடு போராடி வந்த நக்ஸலைட்டுகள் அமைப்பு என்றழைக்கப்பட்ட மக்கள் யுத்தக் குழு இரண்டாகப் பிரிந்தது.
புகழ் பெற்ற போராளியான கொண்டப்பள்ளி சீதாராமையா மக்கள் யுத்தக் குழுவில் இருந்து வெளியேற்றப்பட்டார். மக்கள் யுத்தக் குழு சீதாராமையா குரூப் என்றே ஒரு தனிப் பிரிவு ஏற்பட்டது. சென்னா ரெட்டியை சுட்டுக் கொன்ற புகழ் பெற்ற இன்னொரு போராளி பொட்டுல்ல சுரேஷ் இந்த குரூப்பைச் சேர்ந்தவர்தானாம்..
இந்த நேரத்தில் ரவி எடுத்த ஒரு பகீர் முடிவுதான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மரணத்திற்கே காரணமாக அமைந்திருக்கிறது. சூர்ய நாராயண ரெட்டியைப் பழி வாங்க வேண்டி என்ன செய்யலாம் என்று மண்டையைப் போட்டுப் பிய்த்துக் கொண்டிருக்கிறது ரவியின் டீம்.
இந்தச் சமயத்தில் சூர்ய நாராயண ரெட்டியின் குடும்பத்தின் மீது அந்த ஊர் மக்கள் சிறிதளவு அனுதாபம் காட்டியிருந்ததாலும், சூர்ய நாராயண ரெட்டி அதிக நாட்கள் கர்நாடகாவிலேயே இருந்ததினாலும் அவரையும் நெருங்க முடியாமல் தவித்தது ரவியின் டீம். உண்மையில் தனது வலது, இடது கைகளைப் போன்றவர்கள் ஒவ்வொருவராக சுட்டுக் கொல்லப்படுவதை உணர்ந்து கொஞ்சம் பயந்து போன நிலையில்தான் சூர்ய நாராயண ரெட்டி கர்நாடகாவுக்குத் தப்பிச் சென்று பதுங்கியிருந்திருக்கிறார்.
அவரைக் கொலை செய்ய முடியாமல் தவித்தவர்கள் சூர்யநாராயண ரெட்டியின் வீட்டில் நடக்கவிருக்கும் விஜயதசமி கொண்டாட்டங்கள் பற்றிய செய்தி கிடைத்ததும் பரபரப்பாகியுள்ளார். ஒரு சினிமாவின் திரைக்கதையைப் போல இந்த படுகொலையை கனகச்சிதமாகச் செய்திருக்கிறது ரவியின் டீம்.
1993-ம் ஆண்டு இந்தக் கொடூரம் நிகழ்ந்திருக்கிறது. சூர்யநாராயண ரெட்டியின் அம்மா தனது வீட்டு டிவி ரிப்பேராகிவிட்டதாக டிவி ரிப்பேர் கடையில் டிவியை கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். இதை துப்பறிந்த பரிதலா ரவியின் டீம் மெம்பர்கள் இதனை வைத்தே அந்தக் குடும்பத்தை கூண்டோடு அழிப்பதற்கு முடிவு செய்திருக்கிறார்கள்.
டிவியை ஆன் செய்தாலே வெடித்துவிடும் வகையில் ஒரு வெடிகுண்டை செட்டப் செய்து டிவிக்குள் வைத்து அதனை அந்த நிகழ்ச்சி நடந்த நேரத்தில் சூர்யநாராயண ரெட்டியின் வீட்டுக்குக் கொண்டு போய் வைத்துவிட்டு எஸ்கேப்பாகிவிட்டார்கள்.
அவர்கள் வீட்டு வாசலைத் தாண்டவும், இங்கே டிவி வெடிக்கவும் மிகச் சரியாக இருந்திருக்கிறது. இந்தப் படுகொலைத் தாக்குதலில் சூர்ய நாராயண ரெட்டியின் அம்மா, தங்கை, அண்ணன், அண்ணன் மனைவி, வேலையாளர் என்று சிலர் இறந்து போய்விட்டார்கள். இந்தச் சமயத்தில் சூர்யநாராயண ரெட்டி, தனது மனைவி பானுமதியுடன் வீட்டுக்கு வெளியில் இருந்ததால் தப்பித்துவிட்டார். இந்தச் சம்பவம்தான் இன்றைக்கு ரவியை பரலோகத்துக்கு பார்சல் கட்டி அனுப்ப கடைசியான காரணமாக திகழ்ந்திருக்கிறது.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக பரிதலா ரவிதான் சேர்க்கப்பட்டிருக்கிறார். இவரை கொலையாளியாக உலகத்திற்கு அடையாளம் காட்டிய முதல் வழக்கும் இதுதான்.
இந்த நேரத்தில் மக்கள் யுத்தக் குழு மேலும் இரண்டாக உடைந்தது. ஒன்று ரெட் ஸ்டார் என்றும் மற்றொரு ரீ-ஆர்கனைஸிங் கமிட்டி என்றும் அழைக்கப்பட்டது. பொட்டுல்ல சுரேஷ் ரீ ஆர்கனைஸிங் கமிட்டிக்குத் தலைமை தாங்கினார். சுதர்சன் என்னும் நக்ஸல் தலைவர் ரெட் ஸ்டார் குழுவுக்குத் தலைமை தாங்கியிருக்கிறார்.
இதில் ரெட் ஸ்டாரை பிரமோட் செய்து ஆதரவளிக்க முன் வந்தவர்கள் சென்னா ரெட்டியின் மகன்களும், சூர்ய நாராயண ரெட்டியும். இந்தப் பக்கம் இவர்கள் இருந்தால் எதிர்த் தரப்பில் நிச்சயமாக பரிதலா ரவி இடம் பெறுவார் அல்லவா.? ஆமாம்.. ரீ ஆர்கனைஸிங் கமிட்டியின் பின்னணியில்.. ஆனால் முன்னணி பிரமுகராகத் திகழ்ந்தவர் பரிதலா ரவிதான்.
தனக்குப் பின்னேயிருந்த நக்ஸலைட் தோழர்களை வைத்துக் கொண்டு துவக்கப்பட்ட ரவியின் துப்பாக்கி தீர்ப்புகள் இனிமேல்தான் நிஜமாகவே ஆரம்பித்துள்ளன. ரவியின் குழு 16 பேரை நேரடியாக படுகொலை செய்துள்ளார்கள். ஓபுல் ரெட்டி மற்றும் சூர்ய நாராயண ரெட்டியின் ஆதரவாளர்களான 13 பேரை கடத்திச் சென்று கொலை செய்துள்ளார்கள்.
அப்போதைய காங்கிரஸின் ஆட்சிக் காலத்தில் ரவியின் மீது அடுக்கடுக்காக பல வழக்குகள் சுமத்தப்பட்டன. மொத்தம் 57 வழக்குகள் என்றாலும் அதில் நேரடி சாட்சிகள் இல்லை. ஆனால் 5 வழக்குகளில் மட்டுமே ரவியே நேரடியாக பங்கேற்று படுகொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
ரவியின் பின்புலத்தில் இருந்த நக்ஸலைட்டுகளை ரவி தனக்காகவும், பழி தீர்க்கவும் பயன்படுத்திக் கொண்டார் என்கிறார்கள். ஆனால் நக்ஸல்கள் இப்போதுவரையிலும் அதனை மறுக்கிறார்கள். நக்ஸல்கள் இல்லாமல் ரவி தனக்கென்று தனியாக ஒரு படையைத் திரட்டி வைத்திருந்தார். அந்தக் கூலிப்படைதான் அவர் கை காட்டியவர்களையெல்லாம் படுகொலை செய்தது என்கிறார்கள். ரவிக்கு முக்கியத் தளபதியாக இருந்தவர் பொட்டுல சுரேஷ், சமான், பிரபாகர், மதுசூதனன் ரெட்டி இன்னும் பலர்..
சென்னா ரெட்டி குரூப் மற்றும் சூர்ய நாராயண ரெட்டியின் குரூப்பைச் சேர்ந்தவர்கள் வகை, தொகையில்லாமல் இந்தச் சமயத்தில்தான் ரவியினால் அழித்தொழிக்கப்பட்டுள்ளார்கள். இந்த அனந்தப்பூர் வட்டாரத்தில் தன்னை எதிர்ப்பவர்கள் இருக்கவேகூடாது என்ற ரவியின் கட்டளைக்குப் பணிந்த அவரது கூலிப்படை செய்த படுகொலைகளினால் எதிர்ப் படுகொலைகளும் நடத்தப்பட்டுதான் வந்திருக்கின்றன. ஆனாலும் ரவிக்கு இதில் எந்தப் பாதிப்பும் இல்லாமல்தான் இருந்திருக்கிறது.
இப்படி அனந்தப்பூர் மாவட்டமே இந்த பழி வாங்கல் கதையில் கலகலத்துப் போயிருந்த சூழலில் கட்சிக் கூட்டத்துக்காக வந்த ஒரு தலைவரே இந்த இரண்டு குழுக்களின் வலிமையைக் கண்டு ஒரு கணம் அசந்துபோய் திகைத்துவிட்டார். அவர் கலியுகக் கண்ணனான திரு.என்.டி.ராமாராவ்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்டத்தையே தன் கைக்குள் வைத்திருந்த ரமணா ரெட்டியை எதிர்க்கவும், அந்த மாவட்டத்தில் மட்டும் தனது கட்சியின் சார்பில் எதிர்த்து நிற்கும் தைரியமுள்ள ஒருவரும் இல்லாமல் தவித்தும் கொண்டிருந்த என்.டி.ராமாராவிடம் பரிதலா ரவி பற்றி எடுத்துரைத்தார்கள் கட்சிக்காரர்கள். "சிக்கினான்டா ஒரு அர்ஜூனன்.. இழுத்துட்டு வாங்கடா..." என்ற ராமாராவின் உத்தரவின்பேரில் முதல் முறையாக மீடியாக்களின் லைம்லைட்டுக்கு, அரசியல் வெளிச்சத்துக்கு வந்தார் பரிதலா ரவி.
அரசியல் துணையோடு, ஆட்சி, அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு போலீஸ் துணையோடு ஆடி வரும் ரமணா ரெட்டியின் ஆட்டத்தை அடக்க வேண்டுமெனில் அரசியலில் நுழைவது சாலச் சிறந்தது என்ற ரவியின் அப்போதைய முடிவு சரியானதுதான்.
1993-ல் நடந்த மாநில சட்ட சபைக்கான தேர்தலில் பெனுகுண்டா தொகுதியின் தெலுங்கு தேசக் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார் பரிதலா ரவி. ரமணா ரெட்டியின் கடுமையான எதிர்ப்பு. சில தொண்டர்களின் படுகொலைகள்.. இத்தனையையும் தாண்டி முதல் முறையாக எம்.எல்.ஏ. தேர்தலில் நின்று 62 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார் ரவி. கூடுதலாக ராமாராவின் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் ஆனார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக