செவ்வாய், 7 டிசம்பர், 2010

பெரிய ரிஸ்க். ஆயிரத்தில் ஒருவன். ஒரு படமும் சில பழைய ரிக்கார்டுகளும்

‘இந்த வருடத்தின் சிறந்த’ லிஸ்ட்டில் அடுத்தது, சிறந்த தமிழ்ப் படம். என்ன தான் டப் செய்தாலும் தமிழ் நாடு தாண்டி இந்தக் கதை புரியாது என்று தெரிந்தும் மூன்று வருடங்களில் எடுக்கப்பட்ட பெரிய ரிஸ்க். ஆயிரத்தில் ஒருவன்.  கடைசியில் காட்பாடி தாண்டி ஆந்திராவில் பிய்த்துக் கொண்டு ஓட,  தமிழ் கூறும் நல்லுலகம் கதை புரியவில்லை என்ற பழைய ரிக்கார்ட்டை தேய்த்துக் கொண்டிருந்தது.
இந்த மாதிரி 263 நாட்கள் படம் எடுத்தார்கள், 32 கோடி செலவு செய்தார்கள் என்ற நம்பர் சாதனைகளைத் தாண்டி, இந்தப் படம் பார்க்கும் போது என்னை ஆக்கிரமித்து கொண்டு விட்டது.  அதாவது என்னையும் மறந்து முத்து, அனிதா மற்றும் லாவண்யாவுடன் நானும் கடல் மலைகளை தாண்டிச் சென்றேன், சோழ இளவரசனை(!) சந்தித்தேன், பைத்தியம் பிடிக்க ஓடினேன்,  சங்கம் வளர்த்த பாண்டியர்களை கடிந்து கொண்டேன், தஞ்சைக்காக ஏங்கினேன். நல்ல படம் என்பது பார்க்கும் உங்களை எதாவது வகையில் மூவ் செய்ய வேண்டும். தியேட்டரை விட்டு ஓட வைக்க வேண்டும் என்பதல்ல. எதாவது வகையில் பாதிக்க வேண்டும்.
ஆயிரத்தில் ஓருவனின் எழுத்தும் ஆக்கமும் தமிழ் சினிமாவில் ஒரு அரிய சாதனை. தனக்கு முன் இருந்த அத்தனை தமிழ் ப்ளாக்பஸ்டர் இயக்குநர்களையும் ஒரேடியாக அசுரத்தனமாக தாண்டி சென்ற செல்வாவிற்கு இவ்வருட சிறந்த திரைக்கதையாசிரியர் விருது.  இவ்விருது எல்லாம் கொடுத்து செல்வராகவனை ஏமாற்றி விடாமல், டிவிடி வாங்கி படத்தை ஒருமுறையோ மீண்டும் ஒருமுறையோ பார்த்து விட்டு டுவிட்டரில் வாழ்த்தினால் சந்தோஷப்படுவார். இதைத் தவிர செய்ய வேண்டியது, இந்த மாதிரி அபாரத் திறமைகளை இந்திப் பக்கம் போய்விடாமல் பார்த்து கொள்வது.

கருத்துகள் இல்லை: