புதன், 8 டிசம்பர், 2010

வெளிநாட்டு அழுத்தங்களை பொருட்படுத்தாது நாட்டு நலனை கருதி முடிவுகளை எடுத்தவர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா - ஜனாதிபதி


முன்னாள் பிரதமரான மறைந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் அரச தலைமைப் பதவியான பிரதமர் பதவியைப் பொறுப்பெடுத்தார். 1956ம் ஆண்டில் முன்னாள் பிரதமரான மறைந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா விட்டுச் சென்ற இடத்திலிருந்து தமது அரசியல் பணிகளை முன்னெடுத்தார். அவர் ஒரு முன்மாதிரிமிக்க அரசியல் தலைவராக மாத்திரமல்லாமல் அன்பு நிறைந்த சிறந்த தாயாகவும் விளங்கினார். இவர் வெளிநாட்டு அழுத்தங்களைப் பொருட்படுத்தாது நாட்டினதும், நாட்டு மக்களினதும் நலன்களை முன்நிறுத்தி தீர்க்கமான முடிவுகளை எடுத்தார். குறிப்பாக பாடசாலைகள், பெற்றோலிய நிறுவனம், காப்புறுதி நிறுவனம் என்பவற்றை அரச உடைமையாக்கினார். காணி உச்ச வரம்பு சட்டத்தை அறிமுகப்படுத்தினார். இவ்வாறான நடவடிக்கைகளை கண்டு, கோதுமை மாவுக்கு வழங்கிவரும் மானியத்தை நிறுத்தப்போவதாக வெளிநாட்டினர் அச்சுறுத்தினர். இருப்பினும் அந்த அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாது தமது தீர்மானங்களை துணிகரமாக முன்னெடுத்தார். காணி உச்ச வரம்பு சட்டத்தின் மூலம் தமக்கு நஷ்டம் ஏற்படுவதையும் பாராது நாட்டு மக்களின் நலன் கருதி அச்சட்டத்தை செயலுருப்படுத்தினார்.

கருத்துகள் இல்லை: