புதன், 8 டிசம்பர், 2010

ரிஷானாவின் தண்டனை நிறுத்தம.சவுதி மன்னர் தற்காலிகமாக நிறுத்

சவுதி அரேபியாவில் தனது பராமரிப்பில் இருந்த குழந்தையைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிஷானா நஃபீக்கின் தண்டனையை சவுதி மன்னர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிஷானாவின் தண்டனை ரத்துச் செய்யப்பட்டு அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்ததை அடடுத்தே இந்த தண்டனையை தற்காலிகமாக இடை நிறுத்த சவுதி மன்னர் ஒப்புக்கொண்டுள்ளதாக இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலவாழ்வு அமைச்சர் டிலான் பெரேரா நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் அடிப்படையில் ரிஷானாவின் தண்டனையை ரத்துச் செய்யும் அதிகாரம் சவுதி மன்னருக்குக் கிடையாது என்றும் இறந்த குழந்தையின் பெற்றோர் இணங்கும் பட்சத்திலேயே தண்டனைக்கான இரத்தப்பணம் வழங்கப்பட்டு ரிஷானாவுக்கு மன்னிப்பு வழங்கப்பட முடியும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
தேவைப்படும் பட்சத்தில் அந்த ரத்தப்பணம் எனப்படுகின்ற, கொலைக்கு மன்னிப்பு வழங்கப்படுவதற்காக அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைப் பணத்தை வழங்க இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதற்கிடையே இந்த மரணதண்டனை இடைநிறுத்தம் குறித்த செய்தியைக் கேட்டு ரிஷானாவின் தாய் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: