புதன், 8 டிசம்பர், 2010

ஸ்பெக்ட்ரம்: காங்கிரஸை மிரட்டுகிறார் கருணாநிதி: ஜெ சொல்கிறார்

Jayalalithaசென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழலில் முன்னாள் ராசாவை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அந்த விவகாரத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடையவர்களின் பெயர்களை வெளியிடத் தயங்க மாட்டேன் என்று காங்கிரஸ் கட்சியை முதல்வர் கருணாநிதி மிரட்டுகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த போது எப்படி நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தாரோ, அதே போல் கனமழை காரணமாக தமிழகமே வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், தன்னுடைய அமைச்சரவை சகாக்களுடன் திரைப்பட விழாவில் பொழுதைக் கழித்து இருக்கிறார் கருணாநிதி.

இளைஞன் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கருணாநிதி கலந்து கொண்டதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில், இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியதற்காக ரூ. 45 லட்சம் தனக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை கருணாநிதியே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை செய்த முன்னாள் அமைச்சர் ராசாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த திரைப்பட நிகழ்ச்சியை பயன்படுத்தினார் கருணாநிதி. ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை ஒரு புராணக் கதையுடன் ஒப்பிட்டு, இத்தனை கோடி ரூபாய் ஊழலை ராசா ஒருவரால் மட்டுமே செய்திருக்க முடியாது என்ற வகையில் தன்னுடைய கருத்தை வெளியிட்டிருக்கிறார் கருணாநிதி.

இது கலப்படம் இல்லாத உண்மை! கருணாநிதி, அவருடைய மகள் கனிமொழி மற்றும் சிலரும் இந்த சுரண்டலின் பங்குதாரர்கள் என்பதை தானே ஒப்புக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. கருணாநிதியைப் போலவே அவரது அறிக்கையும் வில்லங்கமாகவே உள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் மெத்தனப் போக்கை கடைபிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையை மறைமுகமாக அச்சுறுத்துவது போல் அவரது பேச்சு அமைந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசாவை நெருக்கிப் பிடிக்கும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டால், இந்த ஊழலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடையவர்களின் பெயர்களை வெளியிட தயங்க மாட்டேன் என்று எச்சரித்து இருக்கிறார் கருணாநிதி.

இது போன்று உண்மையை வெளியிடுவதை காங்கிரஸ் விரும்பாது என்பது தான் இதன் பொருள். வழக்கம் போல், கருணாநிதி கூட்டணிக் கட்சியை மிரட்டும் பாணி தான் இது.

மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பதவியிலிருந்து ராசா விலகியது மட்டுமே இந்தப் பிரச்சனைக்கு முடிவல்ல. நாட்டிற்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை மதிப்பிடுவதைத் தாண்டி விசாரணை நடைபெற வேண்டும்.

இந்த இமாலய ஊழல் நடைபெற்றதில் கொடுக்கப்பட்ட லஞ்சப் பணம் எவ்வளவு?. யார், யாருக்கு எவ்வளவு பணம் கிடைத்தது என்பது குறித்த உண்மைகள் வெளிக் கொணரப்பட வேண்டும்.

இந்தப் பிரச்சினையில் மத்திய புலனாய்வுத் துறை தனது விசாரணையை துவக்கியுள்ளது. நாட்டிற்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை மதிப்பிடுவதைத் தாண்டி விசாரணை நடைபெற வேண்டி இருக்கிறது. நீதி வழங்கப்பட்டால் மட்டும் போதாது, அந்த நீதி அனைவருக்கும் தெரியும்படி வழங்கப்பட வேண்டும். இதற்கான ஒரே வழி நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தான். இதைத் தான் எதிர்க்கட்சிகள் கோருகின்றன.

ஆனால், மத்திய அரசு இதை அமைக்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசாங்கம் தன்னுடைய நிலையில் இருந்து இறங்கி வராததன் காரணமாக கடந்த மூன்று வாரங்களாக நாடாளுமன்றம் நடைபெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைப்பதை எந்த அளவுக்கு எதிர்க்கிறதோ, அந்த அளவுக்கு இந்தப் பிரச்சனை நின்றுவிட வில்லை என்பதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.

உண்மையை வெளிக்கொணர நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசார ணையைத் தவிர வேறு வழியில்லை. இதற்கு ஒப்புக் கொள்கிற வரையில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் ஓயாது.

2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும், என்ற எனது கோரிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து பதில் அளிக்கும் விதமாக, அதிமுக ஆட்சிக் காலத்தில் அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசிலே அமைச்சராக இருந்து, பதவியை ராஜினாமா செய்தபோது, அவர்களை மத்திய அரசு கைது செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கூறினாரா? என்று ஒரு பொருத்தமற்ற கேள்வியை எழுப்பியுள்ளார் கருணாநிதி.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர்களாக பதவி வகித்த காலத்தில் இது போன்ற சூழ்நிலை யாருக்கும் எழவேயில்லை என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இதற்கிடையே, இந்த ஊழலுக்குப் பின்னால் அதிக நபர்கள் இருக்கிறார்கள் என்று கருணாநிதி சூசகமாக தெரிவித்துள்ளதால், அவரே தானாக முன் வந்து உண்மையை ஒப்புக் கொள்வது தான் பொருத்தமாக இருக்கும். இதன்மூலம் நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன்பு ஆஜராகி அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க வேண்டிய தர்மசங்கடத்தை தவிர்க்கலாம்.

முன்னாள் திமுக அமைச்சர் தா. கிருட்டிணன் பட்டப் பகலில் பல பேர் முன்னிலையில் படுகொலை செய்யப்பட்டார். தொலைக்காட்சி கேமராக்களுக்கு முன்பாக மதுரையில் உள்ள ஒரு பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்டு, அதன் காரணமாக மூன்று அப்பாவி ஊழியர்கள் இறந்தனர். மதுரைக்கு அருகே ஒரு லாரி ஹார்லிக்ஸ் பொட்டலங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அனைத்து குற்றங்களுக்கும் மூளையாக செயல்பட்டவர் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர் தான். அந்தக் குற்றவாளியை காப்பாற்றியவர் தானே கருணாநிதி?.

இல்லையெனில், மேற்படி வழக்குகள் அனைத்தும் தீர்க்கப்படாத வழக்குகளாக இன்னமும் காவல் துறை பதிவேடுகளில் ஏன் இருக்கின்றன?. ராசா மற்றும் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கைப் பொறுத்தவரையில், குற்றம் நடந்த இடம் தமிழகத்தில் உள்ள ஒரு பகுதியல்ல, டெல்லி என்பது கருணாநிதிக்கு நன்கு தெரியும்.

புகார்தாரர்களையும், சாட்சிகளையும் பிறழ் சாட்சிகளாக மாற்றி, தன் சொல்படி கேட்க வைக்க முடியாது. இந்த செயலற்ற நிலை தான் கருணாநிதியை அறிக்கைகளை வெளியிடச் செய்திருக்கிறது. ஏனெனில், தான் செய்த பாவங்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது கருணாநிதிக்குத் தெரியும்.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: