ஞாயிறு, 5 டிசம்பர், 2010

விஜய்யிடம் நஷ்டம் கேட்பவர்கள் சூர்யாவுக்கு லாபம் கொடுப்பார்களா?


'காவலன்' பஞ்சாயத்து..விஜய் நடிக்கும் 'காவலன்’ படத்துக்கு ஒரு காவலன் தேவைப்படும் அளவுக்கு பஞ்சாயத்துகள்!

''டிசம்பர் மாசம் வெளியிடுவதாகச் சொல்லும் 'காவலன்’ படத்தை வெளியிடவிட மாட்டோம்!'' என்று தியேட்டர் உரிமையாளர்கள் காட்டமாக அறிவித்து உள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு திரை அரங்கு உரிமையாளர்கள் சங்க இணைச் செயலாளர் ஸ்ரீதரிடம் கேட்டபோது, ''கடந்த 1-ம் தேதி கோயம்புத்தூரில் எங்கள் சங்க செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டினோம். நஷ்டம் அடைந்த திரையரங்க உரிமையாளர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தருவது, தமிழ் சினிமாவில் புதுசு கிடையாது. ஏற்கெனவே, டைரக்டர் மணிரத்னம் 'இருவர்’ படத்துக்காக திருப்பிக் கொடுத்தார். கமல், 'மும்பை எக்ஸ்பிரஸ்’ படத்துக்குத் தந்தார். ரஜினி 'பாபா’, 'குசேலன்’ படங்களில் ஏற்பட்ட நஷ்டத்தைக் கொடுத்தார். அதுபோல, 'சுறா’வுக்கு விஜய்யும் தரவேண்டும்...'' என்றார் உறுதியாக.

ஆனால், தமிழ்நாடு திரை அரங்கு உரிமையாளர்கள் சம்மேளனத் துணைத் தலைவரும், விநியோகஸ் தருமான திருப்பூர் சுப்ர மணியம், ''தொழில் தர்மத்தை திரையரங்க உரிமையாளர்கள் உணர வேண்டும். எல்லாத் தொழிலிலும் லாப - நஷ்டம் ஏற்படுவது இயற்கை. லாபம் வந்தால், கமுக்கமாக வைத்துக்கொள்வார்களாம். நஷ்டம் வந்தால், திருப்பிக் கேட்பார்களாம்! இது நியாயம் இல்லை. 'ரஜினி, 'பாபா’ படத்தில் பணத்தைத் திருப்பித் தரலியா? அதுபோல விஜய்யும் தரணும்...’ என்கிறார்கள். ரஜினி, திருப்பித் தந்தது, அவரது பெருந்தன்மை. ஆனால், விஜய்யும் அதுபோல தரவேண்டும் என்று சட்டம் இல்லையே! தந்துதான் தீரவேண்டும் என்று கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. நிறைய நடிகர்களின் பல படங்கள் சரியாக ஓடவில்லையே... அந்த நடிகர்களின் வீடு தேடிப் போய் நஷ்டத் தொகையைக் கேட்பார்களா?
கொஞ்ச நாட்களுக்கு முன்பு ரிலீஸான 'சிங்கம்’ திரைப்படம் கொள்ளை லாபத்தைக் கொட்டிக் கொடுத்ததே... அதற்காக, அந்தப் படத்தில் சம்பாதித்த லாபத்தை மூட்டை கட்டிக்கொண்டு போய் சூர்யாவிடம் கொடுத்தார்களா?!'' என்று கடுமையாகச் சீறி முடித்தார்.இந்தக் கேள்விக்கு என்ன பதில்?

கருத்துகள் இல்லை: