அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இஸ்லாத்தை ஏற்றுகொள்ள வேண்டும் என்று தான் பிராத்தித்ததாக ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியாவுக்குச் சென்ற கென்யாவை சேர்ந்த அவரது பாட்டி சாரா ஒமர் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய ஹஜ் கடமையை முடித்துவிட்டு ஜித்தாவில் உள்ள அல்-வதான் பத்திரிகைக்கு பேட்டியளித்த பராக் ஒபாமாவின் 80 வயதான பாட்டி ஹாஜா சாரா ஒமர் `என் பேரன் பராக் ஒபாமா இஸ்லாத்தை ஏற்று கொள்ள வேண்டும் என்று பிராத்தனை செய்தேன்’ என்று கூறினார்.
ஹாஜா சாரா ஒமர் தன் மகனும் ஒபாமாவின் மாமாவுமான சயீத் ஹுசைன் ஒபாமா மற்றும் தன் நான்கு பேரக் குழந்தைகளுடனும் சவூதி அரசரின் சிறப்பு விருந்தினர்களாக ஹஜ் கடமையை மேற்கொள்ளச் சென்றிருந்தமை குறிப் பிடத்தக்கது. சவூதி இளவரசர் மஹ்மூத் சாரா அம்மையாருக்கு இராப் போசன விருந்து அளித்து கௌரவித்தார்.
ஒபாமாவின் அரசியல் குறித்து தான் புனித யாத்திரையின் போது எக்கருத்தையும் சொல்ல விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் வெள்ளை மாளிகைக்கு ஒபாமா தேர்ந்தெடுக்கப்படுவாரா எனக் கேட்டதற்கு எதிர்காலத்தை அறியும் ஆற்றல் தனக்கு இல்லை என்றும் அல்லாஹ் ஒருவனே அதை அறிவான் என்றும் கூறினார்.
மேலும் நோய் வாய்ப்பட்டுள்ள சவூதி மன்னர் அப்துல்லாஹ் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் தான் பிராத்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை ஹஜ் கடமைக்கு வருகை தந்திருந்த ஒபாமாவின் உறவினர்களில் ஒருவரும் சாரா அம்மையாரின் அழைப்பை ஏற்று இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டவருமான பைசல் அம்புயா, ‘எனது பாட்டி சாரா முஸ்லிமல்லாதவர்களை இஸ்லாத்தின்பால் அழைப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். அவரிடமிருந்துதான் அதிகமான இஸ்லாமிய விடயங்களைக் கற்றுக் கொண்டேன் » எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை தாம் வாழ்நாளில் ஹஜ் கடமையை நிறைவேற்றுவோம் என கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை எனக் குறிப்பிட்ட சாரா ஒமரின் குடும்பத்தவர்கள் இந்த சந்தர்ப்பத்தைத் தந்த அல்லாஹ்வுக்கும் சவூதி மன்னருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் அல் வதான் பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக