ஞாயிறு, 5 டிசம்பர், 2010

வீ. ஆனந்தசங்கரி :தேசிய ஒற்றுமையும் நீடித்த சமாதானமும்

தேசிய ஒற்றுமையும் நீடித்த சமாதானமும்
வீ. ஆனந்தசங்கரி, தலைவர், தமிழர் விடுதலைக் கூட்டணி
இலங்கையின் ஜனாதிபதியாக இரண்டாவது தடவையும் நீங்கள் தெரிவு செய்யப்பட்டமைக்கு மீண்டும் ஒரு தடவை எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். பல்லாயிரக்கணக்கானவர் போல உங்கள் சத்தியப்பிரமாணம் சம்மந்தமாக நடந்தேறிய பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொள்ளாமை துர்ப்பாக்கியமே. ஏனெனில் பல்லாயிரக்கணக்கான இறப்புக்களுக்காகவும் காணாமல்போனவர்களுக்காகவும் இன்றுவரை துக்கம் அனுஸ்டித்து வருகின்றேன். அவர்களில் அனேகர் எனக்கு நன்கு தெரிந்தவர்களாக, அல்லது எனது நெருங்கிய நண்பர்களின் உறவினர்களாக உள்ளனர். மிக துன்பமான விடயம் என்னவெனில் முல்லைத்தீவு தொகுதி உருவாக்கப்படுவதற்கு முன்பு நான் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய முல்லைத்தீவு கிளிநொச்சி ஆகிய தொகுதிகளை சேர்ந்தவர்களாக இவர்களில் அனேகர் உள்ளனர்.

உங்களின் முதல் பணி தேசிய ஒற்றுமையும் நீடித்த சமாதானத்தையும் உறுதிப்படுத்துவதே என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தருகின்றது. வடகிழக்கு மக்கள் நீண்ட காலமாக பொறுப்பற்ற ஒரு கூட்டத்தினரின் அடக்குமுறையின் கீழ் வாழ்ந்தவர்கள் என்பதை ஒத்துக்கொள்வீர்கள். அவர்களே அம்மக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதற்கும், அவர்களின் ஜனநாயக மனிதாபிமான உரிமைகள் பெருமளவில் பாதிப்படைவதற்கும் காரணமாக இருந்தவர்கள். கால்நூற்றாண்டுகளுக்கு மேல் தாம் விடுதலை அடையவேண்டும் என்ற அங்கலாய்ப்பில,; தமது வீடுகளுக்கு சென்று முன்பு போல் அமைதியான வாழ்வு வாழவேண்டும் எனவும் பகல்கனவு கண்ட மக்கள் தான் இவர்கள்.

நீங்கள் அவர்களை இராணுவத்தின் உதவியுடன் மட்டுமன்றி எம்மக்களின் பெரும்பகுதியினரின் ஒத்தாசையுடனும்தான் விடுவித்தீர்கள். இவர்கள் தாம் இழந்த சுதந்திரத்தை மீளப்பெற்று தம்வாழ்வை மீண்டும் அனுபவிக்கவேண்டும் என்று எதிர்பார்த்தவர்களாவர். தாம் எதிர்பார்த்த வாழ்வை அடைய முடியவில்லையே என்ற ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு அனுமதிக்கவும். தொடர்ந்து இருபத்தைந்து முப்பது ஆண்டு காலமாக தாம் அனுபவித்த துன்பமான வாழ்விற்கு திரும்பி போகவிரும்பும் ஒருவரையாவது நீங்கள் காணமாட்டீர்கள். மனிதர்கள் தமது சக்தியை இழந்துள்ளனர். ஒரு வெடிச் சத்தம் கேட்டாலே பைத்தியம் பிடித்தவர்கள்போல் பெண்கள் ஓடுகின்றனர். பிள்ளைகளோ போதிய போசாக்கின்றி வாழ்கின்றனர். இவர்களில் அனேகர் பாடசாலைக்கு செல்வதில்லை. ஆயிரக்கணக்கான ஆண் பெண் பிள்ளைகளில் அனேகர் தமது கால் கைகளையோ அல்லது கண் பார்வையையோ இழந்தும் மனநிலை பாதிக்கப்பட்டும் உள்ளனர். வெடித்துச் சிதறிய குண்டுச் சிதறல்களை தம் உடலின் பல்வேறு பகுதிகளில் சுமந்து செல்கின்றனர். சிறிய இழப்புகளோடு சகஜ வாழ்க்கைக்கு திரும்பியுள்ளோம் என்று தம்பட்டம் அடிக்கும் எவரும் இல்லை. ஆனால் அனேகர் தமது செல்வம் வீடு வாகனங்கள் விவசாய உபகரணங்கள் போன்ற எல்லாவற்றையும் இழந்துள்ளனர். சிலர் தமது பெற்றோர்களையும் பிள்ளைகளையும் சில பெண்கள் தம் கணவன்மாரையும் சில ஆண்கள் தம் மனைவிகளையும் இழந்துள்ளனர். மொத்தத்தில் வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களில் அனேகரும், முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த அனைவரும் தம் சொத்துக்கள் அனைத்தையும் இழந்துள்ளனர். ஒவ்வொரு குடும்பமும் உலகிற்கு கூறுவதற்காக ஒரு சோகத்தை வைத்துள்ளது. துரதிஸ்டவசமாக தமக்கு நடந்ததை உலகிற்கு எடுத்துக்கூற அவர்களுக்கு ஒரு சந்தாப்;பம் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு நடந்தவற்றில் மிக சொற்பமானதையே தங்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன். ஆனால் அவர்கள் பட்ட கஸ்டம் இதைப்போல் நூறு மடங்கிற்கு மேலாகும். இவர்களின் துன்பத்திற்கு உரிய அனுதாபத்தை கவனத்திற்கு எடுக்கவேண்டியது தங்களின் கடமையாகும். நிறைய வலிகளை ஏற்கனவே அனுபவித்த இவர்களுக்கு எக்காரணம்கொண்டும் மேலும் வலிகளை ஏற்படுத்தக்கூடாது. வடகிழக்கைச் சேர்ந்த மக்கள் யுத்தத்தால் பெரியளவில் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் அவர்களின் தற்போதைய நிலைமையினை எவரும் தமக்கு சாதகமாக்கி இலாபம் சம்பாதிக்க அனுமதிக்க கூடாது. அவர்கள் ஏற்கனவே பலதுன்பங்களை அனுபவித்தவர்கள் என்பதால் முடிந்தவரை வசதியான வாழ்வை அவர்களுக்கு அமைத்துக் கொடுங்கள்;. இன்று தங்களுக்கு உள்ள முக்கிய பணி, நீடித்த தேசிய ஒற்றுமையையும் நிலைக்கக்கூடிய சமாதானத்தைதையும் உருவாக்குவதே.

என்னால் வழங்கப்படும் சில ஆலோசனைகளை நீங்கள் ஏற்றுக்கொள்வீhகள் என நான் வலுவாக நம்புகின்றேன். தங்களைப்போல் நானும் ஒரு தேசபக்தன். எம் நாட்டிற்காகவும் எம் நாட்டில் வாழும் சகல பிரிவினரின் நன்மைக்காகவும் என் உயிரையும் அர்ப்பணிக்க தயாராக உள்ளேன். சிங்கள தமிழ் இஸ்லாமிய மலே பறங்கியருடனும் மற்றும் சிறு குழுக்களுடனும் வாழ்ந்தும் பழகியும் உள்ளேன். ஆகவே இலங்கை வாழ் சகல இன மக்களுடைய மனநிலை போன்றவற்றை நான் நன்கு அறிவேன். இன்று மக்கள் வேண்டுவதெல்வாம் சமாதானமேயன்றி வேறெதுவுமில்லை. எமது மக்களில் எப்பகுதியினரும் பாரபட்சமான சலுகைகளை எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொருவரும் தாம் மற்றவர்களுடன் ஒரே மாதிரியாக நடத்தப்படுவதையே விரும்புகின்றனர். அதிகாரிகளைப் பிடித்து சில சலுகைகளை பெறும் மக்கள் சிலர் எங்கள் பகுதியிலும் உள்ளனர். அத்தகையோர் எந்தக் குழுவை சேர்ந்தவராக இருப்பினும் அவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் ஏனெனில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் சுயலாபம் பெறும் நோக்கோடு அரசை ஆதரிப்பது அவர்களுக்கு கைதேர்ந்த கலையாகிவிட்டது. உங்ளுடைய இலக்காகிய தேசிய ஒற்றுமையையும் நிரந்தர சமாதானத்ihயும் அடைய சில நல்ல ஆலோசனைகளை வழங்க விரும்புகின்றேன்.

1. முதலாவதாக நாட்டின் தலைவர் என்ற முறையில் மக்கள் அனைவரையும் எதுவித பாரபட்சமின்றி சமமாகவும் நீதியாகவும் பாதுகாத்து செயல்படவேணடடிய தார்;மீக கடமை தங்களுக்கு உண்டு என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்

2. கடந்த கால் நூற்றாண்டுக்கு மேல் வட பகுதி மக்கள் எவ்வாறு அடிமைகள் போல் நடத்தப்பட்டார்கள் என்பதை கவனத்தில் எடுத்துக்கொண்டு எதிர்காலத்தில் அதே நிலைமைக்கு அவர்கள் தள்ளப்படக்கூடாது என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். வடபகுதியில் பெருமளவு படையினரை குவித்து, பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக இராணுவமுகாம்களை அமைப்பதும் கரையோரப் பகுதிகளில் கடற்படை தளங்கள் அமைப்பதுமாகிய அரசின் முடிவே வடகிழக்கு பகுதிகளில் வாழும் மக்களின் இன்றைய பெரும் கவலையாகும். விடுதலைப்புலிகள் எத்தகைய இராணுவ ஆட்சியை இம்மக்களுக்கு கடந்த காலத்தில் கொடுத்தார்களோ அதே ஆட்சி முறையினை அரச படையினரும் கையாளப் போகிறார்களோ என்ற பீதி அவர்களை ஆட்கொண்டுள்ளது. பயங்கரவாதம் முற்றாக ஒடுக்கப்பட்டுவிட்டது என்ற அரசின் கூற்று உண்மை எனின் இராணுவத்திற்கோ கடற்படையினருக்கோ வட கிழக்கில் தளம் அமைக்க வேண்டிய எதுவித தேவையும் இல்லை. இருப்பினும் தேவையைப் பொறுத்து இரண்டொரு முகாம்களை அங்கும் இங்கும் இயங்கவிட்டு படையினரை முகாம்களுக்குள்ளே முடக்கிவைக்கலாம்.

3. நான் நம்நாட்டை பல தடைவ சுற்றி வந்துள்ளேன். பல நூற்றாண்டுகளுக்கு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு நாடுமுழுவதும் தேவையான நிலம் பரவி உள்ளது. ஆகவே இராணுவத்தினரையும் வேறு பகுதியில் உள்ள மக்களையும், கடந்த யுத்தகாலத்தில் மிகப் பாரிய கஸ்ரங்களை அனுபவித்த வடகிழக்கு மக்கள் மத்தியில் குடியேற்ற நினைப்பது புத்திசாலித்தனமான செயலாக எனக்குத் தெரியவில்லை. இத்திட்டத்தை இந்த காலகட்டத்தில் அமுல்படுத்த முயற்சித்தால் அச்செயல் உள்ளுர் வாசிகளை குழப்பம் அடையச் செய்வதோடு தேசிய ஒற்றுமையை அடைய தாங்கள் எடுக்கும் முயற்சி வெறும் பகல் கனவாகிவிடும் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும். தமிழர்கள் காணி நிலத்திற்காக பேராசை கொண்டவர்கள் அல்ல. ஆனால் வடகிழக்கிற்கு வெளியே வாழும் மக்களுக்கு உண்மையில் காணி தேவைப்படின் வடகிழக்கு மக்கள் எதுவித தயக்கமும் இன்றி விட்டுக்கொடுப்பார்கள். பொதுவாக அவர்கள் எதிர்ப்பது எதுவெனில் குழப்பத்தை உண்டு பண்ணும் நோக்கோடு திட்டமிட்டு குடியேற்றுவதையே. ஆகவே தயவு செய்து குழப்பத்தை உண்டுபண்ணும் நோக்கோடு திட்டமிட்டு செயல்படும் குழுக்களின் திட்டத்தை தடுத்து விடவும். நாட்டில் சகஜ நிலை ஏற்படுத்தப்பட்டதன் பின்பு மக்கள் பெருந்தன்மையோடு செயற்படும் நிலை உருவாகும் போது இப்பிரச்சினைக்குத் தீர்வு காணலாம். தற்போது அனேக மக்கள் தமது உற்றார் உறவினர்களை இழந்து தவிப்பில் இருக்கும்போது அவர்களுக்கு எதனையும் சிந்திதித்து செயலாற்றும் மன நிலை இல்லை.

4. யுத்தம் முடிந்து பதினெட்டு மாதங்கள் முடிந்த நிலையிலும்கூட அவர்களில் அனேகரின் கூரையற்ற நிலையில் இருந்த வீடுகள் இன்றும் அதே நிலையிலதான்; உள்ளன. வன்னிப்பகுதியில் ஒரு வீட்டுக்காவது கூரை அமைக்கப்படவில்லை. இராணுவத்தினர்; தமக்கு வீடுகள் அமைப்பதிலேயே தீவிரமாக உள்ளனர். நல்லெண்ண செயலாக இவ்வீடுகளை பாரமெடுத்து வீட்டை இழந்து நிற்கும் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு அவர்களின் வீடுகள் அமைக்கப்படும் வரை தற்காலிகமாக இவ்வீடுகளில் அவர்களை தங்கவையுங்கள். மழைக்காலம் ஆரம்பித்து உள்ளதால் அத்தியாவசிய தேவைகள் பூர்த்திசெய்யப்படாத நிலையில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களின் நரக வாழ்க்கையும் ஆரம்பிக்கின்றது.

5. “வடக்கின் வசந்தம”; பற்றிப் பிரமாதமாக பேசப்பட்டாலும் வன்னியின் அபிவிருத்திற்கு தேவையான முக்கிய பெரும் தெருக்கள் எதிலும் இதுவரை கை வைக்கப்படவில்லை. வன்னிப் பகுதியில் உள்ள உள் வீதிகள் படுமோசமான நிலையில் உள்ளன. பல பாடசாலைகள் இதுவரை திருத்தப்படவில்லை. வறுமை காரணமாக பாடசாலைக்கு செல்வதை தவிர்த்து, பிள்ளைகள் வீடுவீடாகச் சென்று வீசி எறியப்பட்ட இரும்புத்துண்டுகளை பொறுக்கி எடுத்து, விற்று அரை வயிற்றுக் கஞ்சி குடிக்கின்றார்கள், அவர்களின் முதல் தேவையாக அவர்களுக்கான பாடசாலையை அமைத்து அவர்களுக்கு உணவளித்து அவர்களின் ஏழைப் பெற்றோர்களின் பொருளாதாரத்தை வலுவடையச் செய்வதேயாகும.;

“இந்நாட்டில் சிறுபான்மையினர் இல்லை” என தாங்கள் கூறிய போது அதை நீங்கள் அல்ல சிறுபான்மையினர்தான் அவ்வாறு கூற வேண்டும் எனவும் அவ்வாறு அவர்கள் கூறவைக்கக் கூடிய வகையில் நீங்களே செயல்பட வேண்டும் என்று நான் எழுதியது தங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். தற்பொழுது நடக்கும் சம்பவங்களுக்கு நான் பொறுப்பல்ல, என நீங்கள் கூறலாம். ஆனால் அத்தகைய செயற்பாடுகளை உடன் நிறுத்தக்கூடிய அதிகாரம் கொண்ட பதவி தங்களுக்கு உண்டு. பல்வேறு சிற்றூழியர் நியமனங்களில் அதிகாரமற்றவர்களின் தலையீடு உண்டு என்று பரவலாகப் பேசப்படுகின்றது. அண்மையில் அம்பாறையில் முப்பது சிற்றூழியர் நியமனத்தில் ஒரேயொரு சிறுபான்மையினர் மட்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பில் 17 நியமனங்களில் 4 பேர் மட்டும் அம்மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாவார்கள். நான் ஒரு வகுப்புவாதியல்ல. ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுக்கள் ஏன் வரவேண்டும்? நில அளவையாளர்களாக தெரிவான 100க்கு மேற்பட்டோரில் அறுவர் மட்டுமே சிறுபான்மை இனத்தவர். மேலும் இலங்கை நிர்வாகச் சேவைக்குத் தெரிவான 247 பேரில் ஒருவரேனும் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர் இல்லை. ஜனாதிபதி அவர்களே 53 அமைச்சுக்களுக்கு நியமிக்கப்பட்ட செயலாளர்களில் ஒரு தமிழரையும் ஒரு இஸ்லாமியரையும் தவிர ஏனைய 51 பேரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என சுட்டிக் காட்டுவதற்கு என்னை மன்னிக்கவும். சபைகளுக்கும் கூட்டுத்தாபனங்களுக்கும் நியமிக்கப்படுகின்ற தலைவர்கள் பணிப்பாளர்கள் போன்ற பதவிகளில் சிறுபான்மை இனத்தவர்கள் தெரிவு செய்யப்படுவதில்லை என்ற புகாரும் உண்டு. இச்சம்பவங்கள் அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இரகசியப் பிரச்சாரம் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

ஆகவே ஓர் உண்மையான தேசபக்தன் என்றவகையில், இத்தகைய பிரச்சாரங்கள் தங்களின் இலக்கை அடைவதற்கு இடையூராக இருக்கும் என நான் அஞ்சுகின்றேன். நிரந்தர சமாதானத்தை அடைய என்னால் குறிப்பிடப்பட்ட விடயஙகளிலும் இது போன்ற வேறு விடயங்களிலும் நீங்கள் தனிப்பட்ட கவனத்தை செலுத்தவேண்டும். மேலும் நீங்கள் நீண்ட கால அரசியலில் பாராளுமன்ற உறுப்பினராகவும் பிரதம அமைச்சராகவும் இருந்து ஜனாதிபதியாகி இருப்பதால் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் என்ன என்பதையும் அவர்களின் பிரச்சினைகளுக்கு திருப்தி அளிக்கக்கூடிய தீர்வு என்னவென்பதையும் அறிவீர்கள்.

நான் திரும்பத் திரும்ப கூறிவருவதுபோல் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல் படுத்தினாலும்கூட எதிர் காலத்தில் அமையும் ஒரு பாராளுமன்றம் அதனை மாற்றி அமைக்கவும் கூடும். ஆகவேதான் நான் சிறுபான்மை மக்களுக்குத் திருப்தி அளிக்கக்கூடிய ஓர் தீர்வாக இந்திய அரசியல் சாசனத்தை ஒத்த முறைமையே பொருத்தமானதென கூறிவருகின்றேன். அத்தகைய தீர்வு ஆளும் கட்சி எதிர் கட்சிகளின் தலைவர்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் சமய தலைவர்களுக்கும் புலம் பெயர்ந்த மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும் என நம்புகின்றேன். இந்திய முறையிலான ஓர் தீர்வை அமுல்படுத்துவதன் மூலம் நீண்ட சமாதானத்தையும் ஐக்கியத்தையும் மிக விரைவாக அடைய முடியும்.

சிறுபான்மை மக்களுக்கு ஏற்புடையதான ஓர் தீர்வை முன்வைத்து அது ஏற்புடையதாக இருப்பின் மக்கள் வன்முறையினை தூக்கி எறிந்து விட்டு நீங்கள் விரும்பும் தேசிய ஒற்றுமையையும் நிரந்தர சமாதானத்தையும் அடைய உங்களுக்கு, அமோகமான முறையில் ஆதரவை வழங்குவார்கள்;.
நன்றி,
அன்புடன்,

வீ. ஆனந்தசங்கரி,
தலைவர், தமிழர் விடுதலைக் கூட்டணி

கருத்துகள் இல்லை: