இலங்கை ஜனாதிபதியும் கரு ஜயசூரியவும்
இது குறித்துப் பேசிய அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அவர்கள், கரு ஜயசூரிய அவர்கள், நாட்டுக்கு எதிராகவும், இராணுவத்தினருக்கு எதிராகவும் போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று கூறுவதாகக் குற்றஞ்சாட்டினார்.
இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான போர் குற்றங்கள் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என்று அறிக்கை ஒன்றில் கூறியுள்ளதாகக் கூறப்படும் இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் துணைத் தலைவர் கரு ஜயசூரிய மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
சர்வதேச நாடுகளால் இலங்கைக்கு எதிராகப் போர்க் குற்றங்கள் சுமத்தப்படும் நிலையில், இலங்கை தனது நம்பகத் தன்மையை வெளிப்படுத்த, அந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்த புலனாய்வுகளை நடத்த வேண்டும் என்று கரு ஜயசூரிய கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதனைக் கண்டித்தே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவரப் போவதாக அரசாங்க அமைச்சர்கள் இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறியுள்ளனர்.
விக்கிரமபாகு கருணரட்ண
அதே சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் விமல் வீரவன்ச, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் கரு ஜயசூரியவின் அரசியல் நடவடிக்கைகளையும், நாட்டுக்கு எதிரான அவரது துரோகத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டப் போவதாகப் பேசினார்.
லண்டன் நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் கரு ஜயசூரியவும், நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்க்கிரமபாகு கருணரட்ணவும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அரசாங்க அமைச்சர்களின் இந்த அறிவிப்பு குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். சுவாமிநாதன் அவர்களைக் கேட்டபோது, கரு ஜயசூரியவின் நிலைப்பாடு சரியானதுதான் என்றும், நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தால், அதனை தாம் எதிர்கொள்வோம் என்றும் கூறினார்.
தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விக்கிரமபாகு கருணரட்ண மறுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக