புதன், 8 டிசம்பர், 2010

ஏட்டய்யா' விஜயகாந்த்..'மாட்டிக்கொண்ட' மன்மோகன் சிங்... 'நாளைய முதல்வர்' ஸ்டாலின் பேரன்!

இது வெ(ற்)றிகொண்டான் தாண்டவம்

நுரையீரலில் நீர்கோத்து அபாயக் கட்டத்தில் அப்போலோவில் சேர்க்கப்பட்ட தி.மு.க-வின் திடுதிடு பேச்சாளர் வெற்றிகொண்டான்... இப்போது மீண்டும் மேடைகளில்!

வயது முதிர்வும் நுரையீரல் கோளாறும் வெற்றி கொண்டானின் பழைய சுருதியைக் கொஞ்சமும் பாதிக்கவில்லை. விருகம்பாக்கத்தில் தி.மு.க-வின் சாதனை விளக்கக் கூட்டத்தில் பொளந்து கட்டினார் வெற்றிகொண்டான். எப்போதுமே கூட்டணி குறித்த முடிவை தி.மு.க. தலைமை எடுத்துவிட்டால், அதற்கேற்ற முழக்கத்தை வெற்றிகொண்டான் மூலம் பாய்ச்சித்தான் ஆழ நீளம் அறியும். அப்படி ஏதும் வெற்றிகொண்டானுக்கு சிக்னல் கிடைத்ததோ என்னவோ... காங்கிரஸுக்கு எதிராகக் கர்புர் காட்டி வெளுத்தார் வெற்றியார்!

''தலைவர் கலைஞர் என்னையப் பார்க்க வந்ததை வெச்சு, 'வெற்றிகொண்டானுக்கு முடிவு நெருங்கிடிச்சு. அவரோட இரங்கல் கூட்டத்தில் நான் அவசியம் கலந்துக்குவேன்’னு சில நாட்களுக்கு முன்னால், எஸ்.எஸ்.சந்திரன் பேசினார். ஆனா, நடந்தது என்னன்னு உங்களுக்கே தெரியும். அவரோட இரங்கல் கூட்டத்துக்கு நான் போற சூழ்நிலை உருவாகிடுச்சு. அவரோட மறைவை என்னால தாங்க முடியலைன்னாலும், அவர் வார்த்தைகளை இங்கே சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம்னு தோணிச்சு!'' என ஆரம்பத்திலேயே அரசியல் சுழற்சியை உருக்கமும் உண்மையுமாய் புட்டுப் புட்டுவைக்கத் தொடங்கிய வெற்றிகொண்டான், அடுத்தபடியாய் காங்கிரஸைக் கடாசத் தொடங்கினார்.

''எங்களுக்கு அ.தி.மு.க-காரன் எதிரி இல்லை. அவன் வீட்ல துக்கம்னா, நாங்கதான் போகணும். எங்க வீட்டு பாடை தூக்க, அவன்தான் வரணும். இன்னிக்கு காமராஜர் ஆட்சியை உருவாக்குவோம்னு யார் யாரோ கத்துறாங்க. காமராஜர், காங்கிரஸ் கட்சி யில இருந்தாலும்... கடைசிக் காலத்தில் அவரைக் காப் பாற்றியது தி.மு.க-தான். 'காமராஜர்... காமராஜர்’னு இன்னிக்குக் கத்துறவங்களில் பாதிப் பேர் அவர் உயிரோட இருந்தப்ப பிறந்திருக்கவே மாட்டாங்க. குழந்தை அழுவுறதால கல்யாணம் நின்னுபோயிடும்னு சில பேர் நினைக்கிறாங்க. 'சாப்பாடு சரியில்லை... கல்யாணத்தை நிப்பாட்டுங்க’ன்னு சில தறுதலைங்க சத்தம் போடுதுங்க... சின்னப் பயலுகளோட சத்தத்தை எல்லாம் எங்க தலைவர் சட்டை பண்ணிக்க மாட்டார்.

இந்த நாட்டுக்காக, தான் வாழ்ந்த வீட்டையே கொடுத்தவர் எங்க தலைவர். அவர் சும்மா இருந்தாலும் அவரோட சுழி சும்மா இருக்காது. அவர் வீட்டை ஆஸ்பத்திரிக்கு கொடுக்கச் சொல்லி யாரும் மனுவா போட்டாங்க? மகாத்மா காந்திகூட தன்னோட சபர்மதி ஆசிரமத்தை யாருக்கும் எழுதிவைக்கலியே...

நேருவோ, இந்திரா காந்தியோ தங்களோட பண்ணை வீடுகளை இந்த நாட்டுக்காக எழுதிவெச்சாங்களா? தேசத் தலைவர்கள்கூட செய்யாத காரியத்தை என் தலைவர் செஞ்சிருக்காருய்யா. வீடு ஒண்ணுதான்யா அவர்கிட்ட மிச்சம் இருந்துச்சு. அதை வாங்க அவர் பட்டபாடு கொஞ்சமா நஞ்சமா..? கதை வசனம் எழுதி, பெரியார்கிட்ட வேலை பார்த்து, குடியரசு பத்திரிகையில் சப் எடிட்டரா இருந்து வாங்கிய வீட்டை கொஞ்சம்கூட யோசிக்காம ஆஸ்பத்திரிக்கு எழுதிவெச்சிருக்கார். இவ்வளவு பெரிய தியாகத்தை ஜெயலலிதா பித்தலாட்டம்னு சொல்லுது!'' என்றவர் மீண்டும் கூட்டணி குடைச்சலையே கையில் எடுத்தார்.

''இன்னிக்கு அத்தனை கட்சியும் கூட்டணிக்கு அலையுது. 'அவர்கிட்ட போகலாமா... அந்தம்மாகிட்ட போகலாமான்’னு போட்டி போட்டு அலையுறாங்க. அந்தம்மா கூட்டணிக்குப் போகணும்னு துடியாத் துடிக்கிறவங்களுக்கு ஒரு விஷயத்தை சுட்டிக்காட்ட விரும்புறேன். ராஜீவ் காந்தியும் சோனியாவும் ஒண்ணாப் படிச்சாங்க. லவ் பண்ணினாங்க. கல்யாணம் கட்டிக்கிட்டாங்க. ராகுல், பிரியங்கான்னு ரெண்டு குழந்தைகளும் பிறந்திடுச்சு. அப்ப எல்லாம் ஏதும் சொல்லாதவங்க ராஜீவ் காந்தி கொலையானப்ப, காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரைக்கும் ஒண்ணா சேர்ந்து, 'சோனியா இத்தாலிப் பெண்... அவங்களை இத்தாலிக்கே விரட்டணும்’னு தொண்டை வலிக்க கத்தினாங்க. அன்னிக்கு ஒரே ஒரு குரல் இந்தியாவையே திரும்பிப் பார்க்கவெச்சுச்சு. 'சோனியா காந்தி இந்தியாவின் மருமகள். இந்தியாவை ஆளும் தகுதி அவங்களுக்கு உண்டு’ன்னு சொன்ன அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் கலைஞர்தானேய்யா!

காங்கிரஸ்காரனுங்களே அன்னிக்கு அந்த அம்மாவுக்கு எதிராப் பேசினாங்க. அந்த நேரத்தில் ஜெயலலிதா பேசிய பேச்சு எல்லாம் காங்கிரஸ்காரங்களுக்கு மறந்துபோச்சா? கூட்டணிக்காக இதை நான் சொல்லலை. கூட்டணிக்கு அலையுறாங்களே... அவங் களுக்காகச் சொல்றேன்!'' என சூடுவைத்த வெற்றிகொண்டான் அடுத்தபடியாய் அ.தி.மு.க-வைக் குறிவைத்துப் பேசியதுதான் ஹைலைட்!

''நாங்க ஜெயலலிதாவை மத்த விஷயங்களில் எதிர்க்கலை. ஒரு தமிழன்தான் தமிழ்நாட்டை ஆளணும் கிறதுதான் எங்க கோரிக்கை. அதனாலதான் அந்தம்மா இந்த நாட்டை ஆளக் கூடாதுன்னு சொல்றோம். நாளைக்கே ஜெய லலிதா, 'சசிகலாவை முதல்வர் ஆக்குவேன்’னு ஒரு அறிக்கை விடட்டும். நாங்க இப்பவே அதுக்கு வழிவிட்டு ஒதுங்கிக்கிறோம். இல்லைன்னா, ஊமையர் சங்கத் தில உறுப்பினரா இருக்கிற ஓ.பி.எஸ்-ஸை முதல்வர் ஆக்குவதா சொல்லட்டும். நாங்க அதுக்கும் சம்மதிக் கிறோம். இப்படி அறிவிக்க ஜெயலலிதாவுக்கு தைரியம் இருக்கா?'' எனக் கேட்க தி.மு.க-வினரே ஜெர்க் ஆகிப் போனார்கள்.

அடுத்தபடியாய் அனைவரும் ஆவலு டன் எதிர்பார்த்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை கையில் எடுத்தார் வெற்றிகொண்டான்.

''இன்னிக்கு அத்தனை பேரும் கத்துறான்... டெல்லியில் ஊழலாம்... பார்லிமென்ட்டில் ஊழலாம்... ஒருத்தன் சுப்ரீம் கோர்ட்ல தலை வெச்சு புகாரும் கையுமாத் தூங்கிட்டு இருக்கான். இதுநாள் வரைக்கும் கொசுவை விரட்ட ஆர்ப்பாட்டம் நடத்திட்டு இருந்த அந்தம்மா, இதை எல்லாம் பார்த்துட்டு, 'ஸ்பெக்ட்ரம் ஸ்பெக்ட்ரம்’னு கூவிக்கிட்டு போராட்டத்தில் இறங்கிடுச்சு. 'ஊழல், குடும்ப ஆட்சி’ன்னு ஏதேதோ கூவிட்டுக் கூட்டணிக்கு அலையுது. நான் பகிரங்கமா சொல்றேன்... நாங்க நடத்துறது குடும்ப ஆட்சிதான். எனக்குப் பிறகு என் வீடு, என் பையனுக்குத்தானே சொந்தம்... அந்த மாதிரிதான் இந்த நாடும், என் தலைவரோட வாரிசுகளுக்குத்தான் சொந்தம். 100 வயசு தாண்டி வாழக்கூடிய என் தலைவருக்குப் பின்னால், அவர் மகன் ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆளுவார். அவருக்குப் பிறகு, ஸ்டாலின் பேரன் ஆளுவார். எங்களுக்குக் குடும்பம் இருக்கு. அதனால குடும்ப ஆட்சி நடத்துறோம்... ஆனா, உங்களுக்கு..?'' எனச் சீறியவர் மேற்கொண்டுப் பேசியவை பிரசுரிக்க முடியாதவை.

வெற்றிகொண்டானின் அடுத்த அட்டாக்கில் சிக்கியவர் விஜயகாந்த். ''எல்லாவித ராஜ தந்திரங் களையும் படைச்ச ராஜகோபாலச்சாரியாராலேயே இந்தத் தமிழ்நாட்டுல சுதந்திரா கட்சியை நடத்த முடியலை. 'அத்தனை பிராமணர்களும் இடது கையில் பூணூலையும், வலது கையில் உதயசூரியன் கொடியையும் பிடிக்கணும்’னு சொல்லிட்டு கட்சியைக் கலைச்சிட்டார் ராஜகோபாலச்சாரி. ஆனா, இன்னிக்கு ஏட்டய்யா வேஷம் போட்ட ஒருத்தர் நாட்டைப் பிடிக்க ஆசைப்படுறார். சமீபத்தில அவர் நடிச்ச படத்தைப் பார்த்தேன். ஐ.ஏ.எஸ். ஆபீஸரா நடிக்கிற அவர் பிரதமரையே காப்பாத்துறாராம். சினிமாவிலேயே அதை நம்மளால தாங்கிக்க முடிய லைய்யா. ஒரு ஐ.ஏ.எஸ். ஆபீஸர்கிட்ட அஞ்சு நிமிஷம் தாக்குப்பிடிச்சு விஜயகாந்த் பேசிட்டார்னா, அவரையே தமிழக முதல்வரா அறிவிச்சிட்டு நாங்க கிளம்பிடுறோம்யா!

ஆனானப்பட்ட ஆளு மன்மோகன் சிங்கே பார்லி மென்ட்ல மாட்டிக்கிட்டுப் படாத பாடுபடுறார். 15 நாளைக்கும் மேலா பார்லிமென்ட்டை நடத்தவிட மாட்டோம்னு அரிச்சந்திரனுக்கு பிறந்தவனுங்க ஆட்டுவிக்கிறானுக. அவனுங்களை மன்மோகன் சிங் கண்டுக்கிறதே இல்லை. கடந்த முறை நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தப்ப நோட்டுக் கட்டுகளை லஞ்சம் கொடுத்ததாகக் காட்டிய அத்தனை பண்டாரப் பயலுகளும் இப்பக் கத்துறானுங்க. ஸ்பெக்ட்ரம் ஊழலைப்பத்தி யாராச்சும் யோக்கியவானுங்க பேசட்டும். அதுக்கு நாங்க பதில் சொல்லக் கடமைப் பட்டு இருக்கோம்.

ஒரு காலத்தில் எங்களை ஒழிச்சுக்கட்ட மத்திய சர்க்கார் நடத்தாத அராஜகமா? அதையே ஊதித் தள்ளிட்டு இத்தனை வருஷங்களைக் கடந்து வந்துட் டோம். ஸ்பெக்ட்ரம் பிரச்னை எல்லாம் எங்களுக்கு பிஸ்கோத்துய்யா. கலைஞர்ங்கிற தெய்வ மகனை மறுபடியும் முதல்வர் நாற்காலியில உட்காரவைக்காம நாங்க ஓய மாட்டோம்!'' என ஆடித் தீர்த்து விட்டார் வெற்றிகொண்டான்!

கருத்துகள் இல்லை: