அத்தியாயம் 9
ரிலீஸ் தினத்தன்று தியேட்டர்களுக்குச் சென்று ரசிகர்களின் கருத்தை அறிவதும், அதை உடனுக்குடன் இயக்குனருக்குச் சொல்வதும் கூட உதவி இயக்குநர்களின் பணிதான். ஏனென்றால் இந்தப் படம் போனாலும் அடுத்தப் படத்தில் இந்த இயக்குனருடன்தானே வேலை பார்க்க வேண்டும்?
சில நேரங்களில் கோவை, மதுரை, திருச்சி போன்ற பெரிய நகரங்களுக்கு உதவி இயக்குனர்களை அனுப்பி வைப்பார் டைரக்டர். எந்த இடத்தில் ரசிகனுக்கு போர் அடிக்கிறது. எந்த இடத்தில் கதை தொய்வடைகிறது. எந்த இடத்தில் ரசிகன் எழுந்து வெளியே செல்கிறான் என்ற அத்தனை விவரத்தையும் இயக்குனருக்குக் கொடுக்க வேண்டும்.இந்த விவரத்தை உடனுக்குடன் தெரிந்துகொள்கிற அவர், சில காட்சிகளுக்கு இங்கிருந்தே கட் கொடுப்பார். தியேட்டர் தியேட்டராகச் சென்று டைரக்டர் குறிப்பிட்ட பகுதிகளை கட் செய்வதும், அப்படி கட் செய்யப்பட்ட பிலிம்களை மீண்டும் சென்னைக்குக் கொண்டு வருவதும் உதவி இயக்குனர்களின் பணிதான்.
படம் வெற்றி என்றால் பத்திரிகை விமர்சனங்களைத் தொகுத்து ஒரு பைண்டிங் காப்பியாகத் தயாரித்து இயக்குனரிடம் தரலாம். அதுவே தோல்வி என்றால் டைரக்டர் முகத்தில் விழிப்பதே கொஞ்சம் சிரமம்தான். சுமார் ஒரு மாத காலத்திற்காவது இஞ்சி தின்ற எபெக்டில் இருப்பார் அவர். இந்த நேரத்தில்தான் அவரை அடிக்கடி சென்று பார்க்க வேண்டும். அற்ற குளத்து அறுநீர் பறவையாக ஓடிவிடும் உதவி இயக்குனர்களை அவர் மறப்பதே இல்லை. மதிப்பதும் இல்லை.
சில படங்கள் உலகப் பட விழாக்களில் கலந்து கொள்கிற அளவுக்குத் தரம் வாய்ந்ததாக இருக்கும். அத்தகைய படங்களுக்குத்தான் உதவி இயக்குனர்களின் பணி அவசியம் தேவைப்படும். இந்தப் படங்களில் இடம் பெறும் ஒவ்வொரு டயலாக்கும் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு சப் டைட்டில் போடப்படும். கோடம்பாக்கத்தில் அதற்கென்றே தனி திறமைசாலிகள் இருக்கிறார்கள். அப்படியென்றால் உதவி இயக்குனர்களின் வேலை என்ன? இப்படி சப் டைட்டில் போடுவதற்கு வசதியாக படத்தின் பிரதியைக் கொடுத்து உதவுவது. சப் டைட்டில் போடப்பட்ட படத்தின் டிவிடியை உலகப் படவிழா குழுவுக்கு அனுப்பி வைப்பது போன்ற வேலைகளை கவனிக்கலாம்.
ஊருக்குப் போவதைப் போல லக்கேஜோடு போய் இறங்குவது மட்டும் உதவி இயக்குனர்களின் வேலையல்ல, போருக்குப் போவதைப் போல புத்திசாலித்தனமாகவும் இருக்க வேண்டும் படப்பிடிப்பில். எங்கு, எப்போது, என்ன நடக்கும் என்பதை யாரால் அறிய முடியும்?
அந்நியன் படத்தில் மேட்ரிக்ஸ் ஸ்டைலில் ஒரு கராத்தே ஃபைட் பார்த்திருப்பீர்கள். ஒருவர் முதுகில் ஒருவர் ஏறி வேக வேகமாக ஓடுவார்கள். இந்தக் காட்சியை எடுத்துக் கொண்டிருக்கும்போது நாலைந்து ஃபைட்டர்களின் முகங்கள் சுவற்றில் மோதி தாவங்கட்டை பிளந்து உயிருக்கே ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டதையெல்லாம் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவர்கள் முதுகில் கட்டப்பட்ட ரோப், பில்டிங்குக்கு அந்தப் பக்கம் உள்ள லாரியில் இணைக்கப்பட்டிருக்கும். குறிப்பிட்ட நேரத்தில் அந்த லாரியை இயக்க வேண்டும். லாரி நகரும்போது அதில் கட்டப்பட்டிருக்கும் ரோப்பும் உயரும். இதில் அலாக்காக தூக்கிச் செல்லப்படும் ஃபைட்டர்கள் கீழே நிற்கிற மற்ற ஃபைட்டர்களின் முதுகில் ஏறி ஓடுவதைப் போல காட்சி அமையும். இந்த லாரியை இயக்கும் போது குறிப்பிட்ட ஒரு புள்ளியில் சென்று மிகச் சரியாக நிறுத்த வேண்டும். ஷூட்டிங்கின் போது டிரைவர் வண்டியை நிறுத்த வேண்டிய அந்த இடத்தில் ஒரு மார்க் மட்டும் வரையப்பட்டிருந்ததாம்.
இதை மேற்பார்வையிடுவது ஒரு உதவி இயக்குனர். இவரது கட்டுப்பாட்டையும் மீறி அந்த குறிப்பிட்ட புள்ளியை தாண்டி லாரி நிறுத்தப்பட்டதால் வேகமாக மேலே உயர்த்தப்பட்ட இவர்கள் மேலே உள்ள சுவற்றில் மோதி சிதைந்தவைதான் இந்த முகங்கள். இதற்கு உதவி இயக்குனர் என்ன செய்வார்? அது டிரைவரின் தவறுதானே என்று உச் கொட்டினாலும், அவர் சற்று கடுமையாக சில விஷயங்களை பின்பற்றியிருந்தால் இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம். அந்த லாரி டிரைவர் வேகமாக ஆக்சிலேட்டர் கொடுத்தால் கூட அந்த மார்க்கை தாண்டி சிறிதளவு கூட முன்னேற முடியாதபடி ஒரு பெரிய மரக்கட்டையை போட்டிருந்தால் இந்த விபத்தை தடுத்திருக்கலாம் அல்லவா?
சரி போகட்டும். நாம் உதவி இயக்குனர்களின் சாதுர்யத்தைப் பற்றியல்லவா பேசிக்கொண்டிருக்கிறோம்? இதே அந்நியன் படப்பிடிப்பில் நடந்த சுவையான சம்பவம் ஒன்று. படித்தபின் டைரக்டர் ஷங்கரின் மீது உங்களுக்கு கோபம் கூட வரலாம்.
அந்நியனுக்கு ஒரு பிளாஷ்பேக் உண்டு படத்தில். விக்ரம் ஏன் அப்படி ஒரு மன நோயாளி ஆனார் என்பதற்கான வலுவான காரணம் அது. அன்பான தங்கையை மின் வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் இழந்திருப்பார் விக்ரம். சாலையில் தேங்கிக் கிடக்கும் மழைநீரில் மின்சார வயர் விழுந்து கிடக்கும். அதிலிருந்து மின்சாரம் தாக்கி அவள் இறந்திருப்பாள் என்பதுதான் கண்ணீர் வரவழைக்கும் அந்த பிளாஷ்பேக். சிறுவயது விக்ரமுக்கு தங்கையாக அனு என்ற சிறுமி நடித்திருந்தாள்.
மின்சாரம் தாக்குவது போல காட்சியை எடுத்து முடித்துவிட்டார்கள். அது மட்டுமல்ல, இந்தப் பெண் தன் குடும்பத்தினருடன் எவ்வளவு அன்பானவளாக இருந்தாள் என்பதை உணர்த்தவும் ஏராளமான காட்சிகள் முன்பே எடுக்கப்பட்டுவிட்டன. சிறிது நாட்கள் கழித்து இறந்து போன அந்தச் சிறுமியை பாடையில் ஏற்றிக் கொண்டு போவது போல காட்சிகளை எடுக்க விரும்பினார் ஷங்கர்.
ஸ்ரீபெரும்புதூரில் படப்பிடிப்பு. ஒரு குறுகலான தெருவையும், ஒரு வீட்டையும், சாவு வீட்டுக்கான செட்டப்பையும் அங்கே ஏற்பாடு செய்துவிட்டார்கள். ஸ்பாட்டுக்கு வந்த சிறுமிக்கு காட்சியை விளக்கினார் உதவி இயக்குனர். அவ்வளவுதான். அழ ஆரம்பித்துவிட்டாள் அந்த சிறுமி. “நான் பொணமா நடிக்க மாட்டேன்” என்று பிடிவாதமாக மறுத்துவிட்டாள். யார் யாரோ பேசினார்கள். எந்தெந்த முறையிலோ கெஞ்சினார்கள். அவளது பெற்றோர்கள் சொல்லியும் மசியவில்லை அவள். ஷங்கரும் முடிந்தவரை சொல்லி பார்த்தார். அப்படி நடிக்க முடியாது என்பதற்கு அவள் சொன்ன காரணம், “நான் பிணமாக நடித்துவிட்டு ஸ்கூலுக்கு போனால் என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் என்னை பேய் என்று கிண்டல் செய்வார்கள். அதனால் முடியாது” என்றாள்.
இப்படியே நேரம் போய் கொண்டிருந்தது. என்ன செய்வதென்றே தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருந்தது யூனிட். இந்த சிறுமியை நீக்கிவிட்டு வேறொரு சிறுமியை நடிக்க வைக்கலாம் என்றால், இதற்கு முன்பு எடுத்த காட்சிகள் எல்லாவற்றிலும் இந்த சிறுமியை மாற்றியாக வேண்டும். ரீ ஷூட் என்றால் ஏகப்பட்ட பொருட் செலவு, நேர விரயம். என்ன செய்வது? அப்போதுதான் ஒரு உதவி இயக்குனர் ஷங்கரின் காதில் கிசுகிசுத்தார். “தூக்க மாத்திரை கொடுத்து அனுவை தூங்க வச்சிரலாமா?”
வேறு வழி? மதிய சாப்பாட்டில் தூக்க மாத்திரையைக் கலந்தார்கள் சிறுமிக்கு. அடுத்த அரை மணி நேரத்தில் கண்ணயர்ந்து தூங்கிய அனுவை வைத்து எல்லா காட்சிகளையும் படம் பிடித்தார்கள். படம் வெளியான பின்புதான் இப்படி ஒரு காட்சியில் நடித்ததே அவளுக்குத் தெரிய வந்தது. நியாயமாகப் பார்த்தால், இது நியாயமில்லைதான். ஆனால் ஒரு உதவி இயக்குனரின் குறுக்கு யோசனை பெரும் சிக்கலில் இருந்து இயக்குனரை விடுவித்தது அல்லவா?
- தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக