லண்டன் ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு
பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர் குழுவொன்றினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அசெளகரியம் ஏற்படுத்தியமைக்கு எதிராக வடக்கில் பல இடங்களில் நேற்று (04) தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். புலம்பெயர்ந்த ஒரு பிரிவு தமிழர்களின் செயலைக் கண்டித்து வர்த்தக நிலையங்களை மூடியும் கறுப்புக்கொடிகளைப் பறக்கவிட்டும் வடக்கில் தமிழர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். முல்லைத்தீவில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோரின் கொடும்பாவிகளையும் மக்கள் எரித்துள்ளனர்.
“பயங்கரவாதம் வேண்டாம்? நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தைக் கெடுக்காதீர்கள்! எமக்கு சமாதானமே வேண்டும்” என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர்.
கிளிநொச்சியில் நேற்றுக்காலை 10 மணிமுதல் கடைகள் பூட்டப்பட்டன. நகரெங்கும் கறுப்புக் கொடிகள், பதாகைகள் கட்டப்பட்டிருந்தன. சந்தைப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாக வந்து தண்ணீர்த் தாங்கி அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புலம்பெயர் தமிழர்கள் சிலரின் செய்கைக்கு எதிராக கிளிநொச்சியில் மக்கள் எழுச்சியொன்றை காணக் கூடியதாக இருந்தது. இதனால் மக்களின் இயல்வு வாழ்க்கை நேற்று ஸ்தம்பிதமடைந்திருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு, வள்ளுவர்புரம், ஒட்டுசுட்டான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு செயலகத்திற்கு முன்பாகக் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் புலம்பெயர் தமிழர்களின் செயலைக் கண்டித்துக் கோஷமெழுப்பினர்.
புலிகளின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுத்துறைத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோரின் கொடும்பாவிகளை எரித்தனர். சிலர் அவ்விருவரின் உருவப் பொம்மைகளுக்குத் தடியால் தாக்குதல் நடத்தினர்.
நேற்றைய மக்கள் எழுச்சியில் சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் தாங்கியிருந்தனர்.
இதேவேளை, புலம்பெயர் தமிழர் குழுவொன்றினால் ஜனாதிபதியின் லண்டன் விஜயத்திற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமை குறித்து தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமன்றி அரசியல் வாதிகள் மத்தியிலும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
புலம்பெயர் தமிழர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதாக இருந்தால், அவர்கள் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு வந்து வீடுகளையும் பாட சாலைகளையும் மீளக் கட்டியெழுப்பலாம். பாதைகளைப் புனரமைக்கலாம்.
அதனை விடுத்து தமிழ் மக்களுக்கு மேலும் நெரு க்கடிகளைத் தோற்றுவிக்கும் வகையில் செயற்படக்கூடாது என்று கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன், நுவரெலியா மாவட்ட பாராளு மன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான பி. திகாம்பரம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர்.
புலம்பெயர் தமிழர்கள் சிலரின் செயற்பாடுகள், அபிவிருத்தியைச் சீர்குலைக்குமென்றும், மீளக்கட்டியெழுப் பப்பட்டு வரும் தமிழ், சிங்கள நல்லுறவைப் பாதிக்குமென்றும் சுட்டிக்காட்டிய அவர் கள், புலம்பெயர் தமிழர்கள் இலங்கை வாழ் தமிழர்கள் தொடர்பில் இனியாவது தீர்க்கதரிசனத்துடன் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டனர்.
தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு இதற்கெதிராகக் குரல் கொடுக்க வேண்டிய காலம் பிறந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக