கடந்த நவம்பர் 11ம் தேதி கொடநாடு சென்ற ஜெயலலிதா நேற்று சென்னை திரும்பினார். கொடநாட்டிலிருந்து கோவைக்கு காரில் வந்த அவர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.
விமான நிலையத்திலும், அவரது போயஸ் கார்டன் வீட்டு வாசலிலும் ஜெயலலிதாவுக்கு அதிமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா,
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான விசாரணையில் ஏன் எந்த முன்னேற்றமும் இல்லை என்பது எனக்கு புரியாத புதிராகவே உள்ளது. மத்திய அரசு ஏன் விசாரணையை தாமதப்படுத்துகிறது?.
இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்ற எங்களது நிலையில் எந்த மாற்றமும் இல்லை.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சாராவை கைது செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ராசாவை தலித் ஹீரோ போல சித்தரிக்கிறார்கள். ஊழல் காரணமாகத்தான் அவர் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார் என்றார்.
முன்னதாக வடசென்னை பகுதியை சேர்ந்த அதிமுக தொண்டர்கள் 300 பேர் அங்கு திரண்டிருந்தனர். வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் மாற்றத்தில் அதிருப்தியடைந்த அவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பலர் மீதும் குற்றம் சாட்டி கோஷமிட்டனர்.
''காப்பாற்று, காப்பாற்று.. வடசென்னையை காப்பாற்று'' என்று அவர்கள் கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர்.
அவர்களை போலீசார் ஜெயலலிதா வீட்டிலிருந்து சிறிது தூரத்திலேயே தடுத்து நிறுத்தியிருந்தனர். ஜெயலலிதாவின் கார் வீடு நோக்கி சென்றபோது காரின் பின்னாலேயே ஓடிய அவர்களை காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து அதிமுக தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினார். இதைத் தொடர்ந்து ''வடசென்னையை காப்பாற்று'' என்ற கோஷத்தோடு ''ஜெயலலிதா வாழ்க'' என்றும் கோஷம் போட்டபடி கலைந்து சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக