புதன், 8 டிசம்பர், 2010

கிளிநொச்சியில் காணி உறுதி; புலம்பெயர் மக்களுக்கு அறிவிப்பு


கிளிநொச்சி மாவட்டத்தில் காணி உரிமை உள்ள நிலையில், வெளிமாவட்டங்களிலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் மக்களுக்கான அறிவிப்பொன்றை காணி அமைச்சு விரைவில் வெளியிடவுள்ளது.
காணி உரிமைபற்றியும் எதிர்நோக்கும் பிரச்சினை பற்றியும் தகவல்களைப் பெற்றுத்   தருவதற்குக் குறித்த ஒரு கால அவகாசத்தை வழங்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகுமென்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்ட கிராமங்கள் தோறும் தற்போது உதவி அரசாங்க அதிபர்கள் தகவல்களைத் திரட்டி வருகிறார்கள். தகவல்கள் திரட்டப்பட்டதும் காணி உரிமையாளர்களை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இது குறித்து உதவி அரசாங்க அதிபர்கள் சகலரையும் அழைத்து அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அரச அதிபர் கூறினார்.
பிரச்சினைகள் உள்ள கிராமங்களில் தகவல்கள் திரட்டப்பட்டதும் எதிர்வரும் 23ம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மீளாய்வுக் கூட்டமொன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி, காணி அமைச்சின் முக்கிய அதிகாரிகள் பலரும் இந்த மீளாய்வுக் கட்டத்தில் கலந்து கொள்வார்களென்று தெரிவித்தார்.
மீளாய்வுக் கூட்டத்திற்குப் பின்னர், வெளி பிரதேசங்களில் உள்ளவர்களுக்கான ஓர் அறிவிப்பு வெளியிடப்படுமென்றும் அரச அதிபர் கூறினார்.
காணி உரிமை பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து ?பிம்சவிய? திட்டத்தின் கீழ் தீர்வினைப் பெற்றுக் கொடுக்க அரச அதிபர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன் மூலம் காணி உறுதி இல்லாதவர்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: