திங்கள், 6 டிசம்பர், 2010

விக்கிலீக்ஸ் இணையம் அம்பலமாக்கிய தகவல் தமிழ் அரசியல்வாதிகள் மீது சட்ட நடவடிக்கை


விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் தலைவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக அரசாங்க உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ் விவகாரத்தில் முக்கிய தமிழ் அரசியல் தலைவர்கள் உட்பட பலருடைய பெயர்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அரசாங்கத்தைப் பற்றிய தகவல்களை இராஜதந்திரிகளுக்கு வழங்கினார்கள் என்ற அடிப்படையில் அரச புலனாய்வுச் சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியுமா என்பதையிட்டு அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் ஆராயப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. இவ்வாறான சட்ட நடவடிக்கை ஒன்றை எடுப்பது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்துவதற்கு உத்தேசித்திருக்கும் பேச்சுவார்த்தைகளை பாதிப்பதாக அமையும் எனக் கருதப்படுகின்றது.

அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களுக்கு முன்னதாகவா? அல்லது பேச்சுக்களுக்குப் பின்னர் இத்தகைய சட்ட நடவடிக்கை எடுப்பதா என்பதையிட்டு இப்போது ஆராயப்படுவதாகவும் தெரியவந்திருக்கின்றது. விக்கிலீக்ஸ் இறுதியாக கசிய விட்டுள்ள இரகசிய ஆவணங்களில் சுமார் மூவாயிரம் ஆவணங்கள் இலங்கை தொடர்பானவையாகும். இதில் ஒரு சில ஆவணங்களின் உள்ளடக்கங்கள் மட்டுமே ஐரோப்பிய ஊடகங்களால் கடந்த வாரம் வெளியிட்டு பெரும் புயலை கிளப்பியிருந்தன.

குறிப்பாக தமிழத் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், தமிழர் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரிடம் தான் நடத்திய பேச்சுக்களின் விபரங்களை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா, வாஷிங்டனில் உள்ள இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்திருந்தார்.

இத் தகவல்கள் விக்கிலீக்ஸ் இணையத் தளத்தின் மூலமாக வெளி யாகியுள்ளதை அடுத்து குறிப்பிட்ட அரசியல் தலைவர்கள் உள்நாட்டு விபரங்கள் தொடர்பாக வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவருக்கு தகவல் களைக் கொடுத்துள்ளார் என்ற அடிப்படையில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவே அரச தரப்பில் ஆராயப்பட்டு வருவதாக தெரி விக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: