கும்மிடிப்பூண்டி பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் இலங்கை தமிழர் அகதி முகாமில் 19 வீடுகள் இடிந்து விழுந்தன. கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே இலங்கை தமிழர் அகதி முகாம் உள்ளது. இங்கு 1057 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 741 தமிழர்கள் தங்கியுள்ளனர். கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கன மழையால் முகாமில் பல வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கு வசிக்கும் தமிழர்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் ராமலிங்கம், ஸ்டெல்லா, செல்வி, ஆறுமுகம், ரவி, இலங்கேஸ்வரி உள்பட 19 பேரின் வீடுகள் மழையால் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.காற்றுடன் பெய்த கன மழையால் தாசில்தார் அலுவலகம் செல்லும் வழியில் நேற்று வேரோடு மரம் ஒன்று சாய்ந்தது. கும்மிடிப்பூண்டி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை உடனுக்குடன் ஜல்லி மற்றும் கிரவல் போட்டு தற்காலிகமாக சீரமைக்கும் பணி நெடுஞ்சாலை துறையினரால் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக