2011 கணக்கெடுப்பின் படி , 'வடமாநிலத்தில் (பீகார், உபி,மபி,இராஜஸ்தான்) மொத்தமாக 22சீட்டுகளை பெறும். அதேசமயம் தென்மாநிலங்கள் (ஆந்திரா, தெலுங்கானா,கேரளா, தமிழ்நாடு) 17 சீட்டுகளை மொத்தமாக இழக்கும்'. இதுவே 2026க்கு கணக்கிட்டு பார்த்தால் பீகார் மற்றும் உபி மட்டுமே 21 சீட்டுகளை பெறும். கேரளா, தமிழ்நாடு மட்டும் 16 சீட்டுகளை இழக்கும். அதாவது மக்கள் தொகை அடிப்படையில் 'நாம் இருவர் நமக்கு ஒருவர்' எனும் அளவில் தென்மாநில மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளா. ஆனால் வடக்கில் ஆண்டுக்கு ஆண்டு மக்கள் தொகை அதிகரிக்கிறது.
Jose Kissinger : புதிய பாராளுமன்ற கட்டிடம் வடக்கு-தெற்கு அரசியல் இழுப்பறியை தூண்டுமா?
பல்வேறு சர்ச்சைகள்/ வழக்குகள்/ எதிர்ப்புகளை தொடர்ந்து நாளை (டிசம்பர் 10,2020) புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டயிருக்கிறார் பாரத பிரதமர் நரேந்திர மோடி. ஏற்கனவே இந்த திட்டத்திற்கு 2000 கோடி ஒதுக்கீடு, 1000 கோடி ஒதுக்கீடு என பத்திரிக்கைகளில் வகைவகையாக செய்தி வந்ததையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு சபாநாயகர் ஓம் பிர்லா அவர்கள் இத்திட்டம் குறித்த அதிகாரபூர்வமான தகவல்களை தெரிவித்தார்.
அதில் 971கோடி செலவில் மிக பிரம்மாண்டமாகவும் பல்வேறு தொழில்நுட்பங்களுடனும் 2024க்குள் தயாராக இருக்கிறது புதிய பாராளுமன்ற கட்டிடம் என குறிப்பிட்டிருந்தார்.
தற்போதைய லோக் சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை 543, இராஜ்ய சபாவில் 245 என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் லோக் சபா இருக்கைகளின் எண்ணிக்கை 888 எனவும், இராஜ்ய சபாவில் 384 எனவும் தெரிவித்திருக்கிறார் சபாநாயகர் ஓம் பிர்லா. இதுதான் சர்ச்சைக்கான காரணம். அதிக இருக்கைகளுக்கான காரணமாக பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு அமர்வுக்கானது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இப்படி ஒரு அமர்வு மிக மிக அபூர்வமானது. சுதந்திர இந்தியாவில் இதுவரை 4 முறை மட்டுமே இப்படி நிகழ்ந்துள்ளது. இப்படி ஒரு அத்திபூத்த அமர்வுக்காக ஏன் இரண்டு அவைகளின் இருக்கைகளையும் அதிகரிக்க வேண்டும்? அதுவும் இந்திய அரசியல் சட்டத்தின்படி அதிகபட்சமாக லோக் சபாவில் 552 எம்.பிகள் தான். ஆனால் மாநில வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகைக்கு ஏற்ப பாராளுமன்ற அவைகளின் இருக்கைகளை அதிகரித்துக்கொள்ளலாம் என்பதற்கிணங்க இது சாத்தியப்படும்.
ஆனால் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டிய தேவை 1970களில் இந்திய அரசுக்கு வந்தபோது மிகத்தீவிரமாக அதனை செயல்படுத்தக்கோரி மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது அன்றைய மத்திய அரசு. அதனை தாரக மந்திரமாக கொண்டு செயல்படுத்தியக்காட்டிய தென்மாநில அரசுகளுக்கு இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் இருக்கைகள் மிகப்பெரிய தண்டனையை தரவிருக்கிறது. அதிக மக்கள் தொகையை இன்றும் கட்டுப்படுத்தமுடியாமல் திணறி வரும் உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் போன்ற வடமாநிலங்களுக்கு அரசியல் தளத்தில் அதிக இருக்கைகளும் அதிகாரங்களும் கிடைப்பதுடன் வடமாநில மக்கள் வருங்காலங்களில் 'கிங் மேக்கராக' இருக்கப்போகிறார்கள்.
இந்திய அரசின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு மக்கள் தொகையை வெகுவாக குறைத்ததுடன் அதனூடாக பொருளாதார ரீதியில் மாநில கஜானாவை நிரப்பி பல நல்ல திட்டங்களை செயல்படுத்திக்காட்டிய தென்மாநில அரசும் மக்களும் மத்தியில் தங்களின் பிரதிநிதித்துவத்தை இழக்கயிருக்கிறார்கள். வழக்கமாகவே தென்னகத்தின் குரல்கள் டெல்லி தலைமைக்கு கேட்காது. பிரதிநிதித்துவம் குறைந்து போனால் 'மத்தியில் கூட்டாட்சி மாநில சுயாட்சி' எனும் கலைஞரின் தாராக மந்திரமும் அடிப்பட்டு போகும்.
1970களில் இந்திய அரசுக்கு மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் எனும் கொள்கை தீவிரமாக இருந்ததால் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மறுபரிசீலிக்கும் விடயம் தொடர்ச்சியாக தள்ளிப்போடப்பட்டது. 2001 கணக்கெடுப்பின்போதே செய்ய வேண்டியது 2026க்கு ஒத்திவைக்கப்பட்டது. அது விரைவில் அமல்படுத்தப்படலாம் என்பதன் அறிகுறியாகவே இருக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.
தமிழகத்தில் சராசரியாக 1.8மில்லியன் மக்களுக்கு ஒரு பிரதிநிதி இருக்கிறார் என்றால் உத்தரபிரதேசத்தில் 3மில்லியன் மக்களுக்கு ஒரு பிரதிநிதி தான் இருக்கிறார் என்கிறார்கள். ஆனால் சமீபத்தில் மிலன் வைஷ்ணவ் மற்றும் ஜமி ஹின்ட்சன் எனும் இருவர் எடுத்த கணக்கெடுப்பின் முடிவில் ஒரு தொகுதிக்கு சராசரியாக தமிழகத்தில் 1.2மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள் என்றும் இவ்வாறு உத்தரபிரதேசத்தில் வாக்காளர்களின் நிலையை கொண்டு பார்த்தால் தமிழகத்தைவிட அங்கு குறைவான சதவீதத்தில் அல்லது சம அளவில் வாக்குகள் பதியப்பட்டுள்ளது என தெரிவிக்கிறது.
எது எப்படியோ அரசியல்/பொருளாதார அடிப்படையில் கடந்த 50 ஆண்டுகாலமாக காலம் தாழ்த்திக்கொண்டே வந்த இந்த அதிகாரத்தை நிர்ணயிக்கும் பஞ்சாயத்து விரைவில் வடக்கு-தெற்கு அரசியல் கிளர்ச்சி போராட்டத்தை நோக்கி தனது முதல் அடியை புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் மூலம் எடுத்து வைத்துள்ளது.
2011 கணக்கெடுப்பின் படி , 'வடமாநிலத்தில் (பீகார், உபி,மபி,இராஜஸ்தான்) மொத்தமாக 22சீட்டுகளை பெறும். அதேசமயம் தென்மாநிலங்கள் (ஆந்திரா, தெலுங்கானா,கேரளா, தமிழ்நாடு) 17 சீட்டுகளை மொத்தமாக இழக்கும்'. இதுவே 2026க்கு கணக்கிட்டு பார்த்தால் பீகார் மற்றும் உபி மட்டுமே 21 சீட்டுகளை பெறும். கேரளா, தமிழ்நாடு மட்டும் 16 சீட்டுகளை இழக்கும். அதாவது மக்கள் தொகை அடிப்படையில் 'நாம் இருவர் நமக்கு ஒருவர்' எனும் அளவில் தென்மாநில மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளா. ஆனால் வடக்கில் ஆண்டுக்கு ஆண்டு மக்கள் தொகை அதிகரிக்கிறது. அதனை குறைக்க முடியாமல் திணறி வருகிறது அம்மாநில அரசுகள்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட 15வது நிதி ஆணையத்தின் அறிக்கையில் தென்மாநிலங்கள் அதிகமான வரியை மத்திய அரசுக்கு செலுத்தியதன் பின்னணியில் மக்கள் தொகை கட்டுப்பாடு ஒரு மிக முக்கிய காரணமாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான ட்வீட் கீழே:
//The Union Government has suggested to the Finance Commission to consider incentivizing States who have worked on population control. Thus, a state like Tamil Nadu, which has devoted a lot of effort, energy and resources towards population control would certainly benefit: PM//
50 ஆண்டுகால தென் மாநில அரசுகளின் வளர்ச்சியை பார்த்து வடமாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தாமல் தவறியதற்கு உரிய தண்டனையையும் வடமாநிலங்கள் பெறப்போவதில்லை. மாறாக தென்மாநில அரசும் மக்களுமே பெற்றுக்கொள்ள போகிறார்கள் என்பது தான் வேதனையான உண்மை.
வலுவான பிரதிநிதித்துவம் பெற்று கூட்டாட்சியில் உள்ளபோதே ஒன்றிய அரசுகள் (காங்கிரஸ்/பாஜக) மாநில உரிமைகளை பறிப்பதில் தீவிரம் காட்டும். இதில் வடமாநிலங்களே அதிகாரத்தையும் அரசியலையும் தீர்மானித்தால், இன்று பெரும்பான்மை பலத்துடன் தனக்கு தேவையானதை மட்டும் (பணமதிப்பிழப்பு/ஜிஎஸ்டி/சிஏஏ/விவசாய மசோதா) கச்சிதமாக நிறைவேற்றிக்கொண்டு செல்லும் பாஜகவை போலவே இனிவரும் அரசுகளும் அதனை தொடரும் என்பதில் சந்தேகமேயில்லை.
இந்தியாவுடனான நல்லுறவை தொடர தென்மாநிலங்கள் முடிவு செய்யும் காலத்தையும் இந்திய அரசே விரைவில் வழங்கப்போகிறது என்பது தான் புதிய பாராளுமன்ற கட்டிடம் உணர்த்தும் செய்தி.
நன்றி: scroll.in
பிகு: இணைத்துள்ள படத்தில் மிலன் வைஷ்ணவ் மற்றும் ஜமி ஹின்ட்சன் அறிக்கையில் தரப்பட்டிருக்கும் தரவுகள்.
~ Vicky Kannan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக