புதன், 9 டிசம்பர், 2020

செயற்கை இதயம் .. ஒரு பயணப்பையில் .. லண்டனில் ஒரு விஞ்ஞான சாதனை

செல்வா ஹூசைன்
Arivazhagan Kaivalyam : · ஒரு பயணப்பை என் கைகளில் இருக்கிறது, என்னுடைய மாற்றுத் துணிகள், மடிக்கணினி இன்னும் சில பொருட்கள், அதுதவிர நினைவுகளை சுமந்து கொண்டு உடல் நகர்கிறது, நிலம் பின்னோக்கி நகர்வதாக உணர்கிறேன். வீட்டை விட்டுப் பயணிக்கிற நாட்கள் பிரிவின் அழுத்தத்தை உணர வைக்கிறது, ஆனால், பிரிவு ஒரு சுழற்சி, அது நம்மைப் பின் தொடர்ந்து வருகிறது, மனிதர்கள் தினந்தோறும் எதையேனும் பிரிய வேண்டியிருக்கிறது. பயணங்களில் எல்லோரது கைகளிலும் ஒரு பை இருக்கிறது, பயணிக்கிற குடும்பங்களின் உறுப்பினர்களைப் போலவே அவை நகர்கின்றன, மறந்து விட்டுப் போகிற பைகள் திடுக்குற வைக்கின்றன. பெரிய பைகள் நீண்ட பயணங்களுக்காக வீடுகளில் காத்திருக்கின்றன. பைகள் அத்தனை முக்கியத்துவம் கொண்டவை இல்லைதான், அவற்றைக் குறித்து இந்த இரவில் நான் நீட்டி முழக்க வேண்டிய தேவை இல்லை. 
ஆனால், ஒரு பெண் தன் கையில் எப்போதும் வைத்திருக்கிற பையைப் பற்றிப் படித்த பிறகு நான் இப்படி பைகளை உற்றுப் பார்க்கிறவனாக, அதைப் பற்றி எழுத வேண்டும் என்கிற பரபரப்புக் கொண்டவனாக இருக்கிறேன்.
செல்வா ஹுசைன், இங்கிலாந்தில் வாழும் இரண்டு குழந்தைகளின் தாய், வழக்கமான ஒரு மாலைப் பொழுதில் குடும்பத்தினரோடு ஒரு பூங்காவில் அமர்ந்திருக்கிறார், அவருடைய கைகளில் ஒரு பை இருக்கிறது, பெண்களிடம் இருக்கும் பைகள் விசேஷமானவை.
 
அவர்களின் முழு உடலுக்கும் தேவையான பாதுகாப்பு உணர்வு பைகளுக்குள் இருக்கும், அவர்கள் யாரையும் நம்புவதில்லை, எதையும் எதிர்பார்ப்பதில்லை, ஆண்களால் நீண்ட பயணங்களில் கூட பைகளின்றிப் பயணிக்க முடியும், பெண்கள் அப்படியல்ல.
விஷயத்துக்கு வருவோம், செல்வா ஹூசைன் சிரிக்கிறார், தன்னுடைய குழந்தைகளின் முகத்தை வாஞ்சையோடு பார்த்தபடி நடக்கிறார், அவர் தன்னுடைய பையை அந்தப் பூங்காவின் மரப் பெஞ்சில் வைத்துவிட்டு நடக்கலாம் என்றுதான் நாம் நினைத்திருப்போம், ஆனால் அவர் விடாது அந்தப் பையை ஒரு உயிருள்ள குழந்தையைப் போல ஏந்தியபடி நடக்கிறார்.
அவரது உடலில் எல்லாம் இருக்கிறது, அழகான கண்கள், பளிச்சிடும் பற்கள், பெண்மையை நினைவுறுத்தும் அழகிய மார்புகள், ஆனால், அவருக்கு மார்பகங்களுக்குப் பின்னால் எல்லோருக்கும் இருக்கிற இதயம் இல்லை. அவருடைய இதயம் அவர் கைகளில் இருக்கிறது.
மருத்துவர்கள் அவரது சதையும் ரத்தமுமான இதயத்தை நீக்கி விட்டார்கள், அவருக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனை சென்ற போது ஏதோ வாயில் நுழையாத பெயர் சொல்லி அவரது இதயத்தை நீக்கி விடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.
பிறகு ஒரு பயணப்பையில் அவருடைய இதய அமைப்பைப் பொருத்தி கைகளில் கொடுத்து விட்டார்கள், இதயமாற்றுக்கு அவருடைய உடல் தகுதியானதாக இல்லை, பலவீனமாக இருக்கிறார் என்பதால் ஒரு செயற்கை இதய அமைப்பை உருவாக்கி அவர் கைகளிலேயே கொடுத்து விட்டார்கள்.
ஒரு காற்றுப்பை மாதிரியான அமைப்பை இதயம் இருந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள், அவருடைய பையில் ஒரு மோட்டாரும் அதை இயக்கும் பேட்டரிகளும் இருக்கிறது, அந்தப் பையைத்தான் பூங்காவில் உலவும் போது அவர் கைகளில் வைத்திருக்கிறார்.
செல்வா ஹூசைன் சிரிக்கிறார், கோபப்படுகிறார், பயணம் செய்கிறார், விரும்பிய உணவை சாப்பிடுகிறார், மறக்காமல் தன்னுடைய பையை சுமந்து கொண்டே இருக்கிறார். நம்முடைய இதயத்தை நம்முடைய கைகளிலேயே சுமந்து செல்வது என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், செல்வா ஹூசைன் அதைத்தான் செய்கிறார்.
குனிந்து காலுக்கடியில் இருக்கும் எனது பயணப்பையை ஒருமுறை பார்க்கிறேன், அதில் என்னுடைய இதயம் இல்லை, வாழ்வின் துயரங்கள், கனத்த பயணங்கள் எல்லாவற்றையும் இந்த இரவில் செல்வா ஹூசைன் துடைத்தழித்து விட்டார். நான் அவருடைய இதயமிருக்கும் பையை நினைத்துப் பார்க்கிறேன். மனிதர்கள் எவ்வளவு துயரத்தையும் சுமந்து கொள்ளவும், சிரிக்கவும், உயிர் வாழவும் ஒரு பையை வைத்திருக்கிறார்கள்.
செல்வா ஹூசைனின் பை, உலகின் இதயம், அதிலிருந்து நம்பிக்கையையும், அளப்பரிய தீரத்தையும் அவர் பம்ப் செய்கிறார். நம்முடைய பைகள் எத்தனை இலகுவானவை அல்லவா? என்று இந்த இரவில் தோன்றுகிறது.
நலமோடு நீடு வாழ்க தாயே, செல்வா ஹூசைன்.

கருத்துகள் இல்லை: