கல்வி, ஆராய்ச்சி தொடர்பான விவகாரங்களில் ஒன்றை சாதிக்க வேண்டும் என்றால்,அங்கு அரசியலை தவிர்த்து, தொலை நோக்குடன் திட்டமிட வேண்டும்.
தமிழ் நாட்டில் மொழி அரசியலாக்கப்பட்டு ஆர்பாட்டம், விளம்பரம், சுய தம்பட்டம், அரசியல் ஆதாயம் என்ற நோக்கில் அணுகப்பட்டதன் விளைவு தமிழ் மொழி ஆராய்ச்சிக்கான ஒரு தேசிய நிறுவனம் தொடங்கப்பட்டு 14 ஆண்டுகளாகியும் இன்னும் தடுமாறிக் கொண்டுள்ளது.
13 ஆண்டுகளாக இயக்குனரே இல்லாமல் செயல்பட்ட அவலம், அதைவிட தமிழே தெரியாதவர்கள் அதன் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டது, நிரந்தரப் பணியாளர்களே இல்லாத சூழல,அதன் அலுவலக முத்திரையில் கூட தமிழ் இல்லாத கொடுமை….என தடுமாறி, கடைசியாக அடையாளமில்லாத ஒருவர் அரசியல் செய்து இயக்குனராகியுள்ளார்.
தமிழறிந்த அறிஞர் ஒருவரை அதன் தலைவராக நியமிக்காமல் முதல்வரே அதன் தலைவர் என கலைஞர் எடுத்த முடிவு தனக்கு பிறகு வரும் முதல்வர்களால் எப்படி கையாளப்படும் என அவர் யோசிக்கத் தவறிவிட்டார்.கருணா நிதியால் ஆரம்பிக்கப்பட்டது என்ற காரணத்தாலேயே செம்மொழி நிறுவனத்திற்கு பொறுப்பு ஏற்காமல்,அதை அலட்சியப்படுத்தி, நலிவடையச் செய்தார் ஜெயலலிதா!
சமஸ்கிருத மொழிக்கு இந்தியாவில் பத்துக்கு மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் உள்ளன! தற்போது கூட மூன்று நிகர் நிலை பல்கலை கழகங்கள் பல்கலையாக தரம் உயர்த்தப்பட்டன! ஆண்டுக்கு இரு நூற்றுச் சொச்சம் கோடி சமஸ்கிருத மொழி ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்படுகிறது!
இவையாவும் என்னால் தான் நடந்தது என அவர்களில் யாரும் தம்பட்டம் அடிப்பதில்லை! ஒரு தவம் போல செய்ய வேண்டியதை அமைதியாக செய்கிறார்கள்! அவர்களுக்கு சமஸ்கிருதம் வாழ்ந்தால் போதும்.அதை நான் தான் வாழவைத்தேன் என்ற பெருமை தேவையில்லை.ஆகவே அவர்களால் ஒன்றுபடமுடிகிறது. அந்த நோக்கம் அவர்களை ஒன்றுபடுத்திவிடுகிறது.
இங்கே செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஆரம்பத்தில் மத்திய அரசு 74.2 கோடி தந்தது! பிறகு ஆண்டுக்கு 25 கோடி வரையில் தரவும் முன்வந்தது. ஆனால்,அவற்றுக்கான செயல்திட்டம் போட்டு அந்த பணத்தை பயன்படுத்த வழியில்லாத நிலை சில காலம் தொடர்ந்தது. இதனால்,தந்த நிதி கூட திருப்பி அனுப்பப்பட்டது!
எனினும் திரு.இராமசாமி அவர்கள் பொறுப்பில் இருந்த போது உலகம் முழுவதிலுமிருந்த பழம் ஓலைச்சுவடிகள் பலவற்றை தேடிவாங்கி அதை டிஜிட்டல்மயப்படுத்தினார். நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி நூல்களை அறிஞர்களை கொண்டு எழுதவைத்தார். மிகப் பெரிய நூலகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால்,அதை சரியாகப் பயன்படுத்த தான் ஆட்கள் இல்லை!
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதலில் செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் என்ற பொறுப்பில் தன்னால் செயல்படமுடியாது என்ற யதார்த்தை உணர்ந்து அதற்கான மூத்த தமிழறிஞரை அப் பொறுப்புக்கு நியமிக்க வேண்டும்! அதுவே அவர் தமிழுக்கு செய்யும் தொண்டாக இருக்கமுடியும்!
திமுக எடுத்த தமிழ் அரசியலை தானும் கையிலெடுத்து பேசிவரும் மோடியும், பாஜகவும் உண்மையிலேயே அதில் அக்கறை காட்டி செயல்படாமல் தாங்களும் உணர்ச்சியையும்,கிளர்ச்சியையும் ஏற்படுத்திவிட்டு, உண்மையான வகையில் செய்ய வேண்டியதைக் கூட செய்யாமல் தவிர்க்கிறார்கள்! சமஸ்கிருத மொழிக்கு அவர்கள் செலுத்தும் அக்கறையில் பத்தில் ஒரு பங்கு தமிழுக்கு காட்ட முன்வந்தாலே கூட எவ்வளவோ ஆக்கபூர்வ மாற்றங்கள் நிகழும்!
தமிழ் சமஸ்கிருதத்திற்கு நிகரானது என்று நீங்கள் ஏற்காவிட்டாலும் கவலையில்லை!
தமிழ் சமஸ்கிருத்ததை விட தொன்மையானது என்பதை நீங்கள் ஏற்காவிட்டாலும் பரவாயில்லை.
தமிழின்,தொன்மையும், பண்பாட்டுச் சிறப்பும் உலக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதால், அதை இந்தியாவின் பெருமையாக உள்வாங்குங்கள்! அது தான் நீங்கள் கட்டிக் காக்கவிரும்பும் தேசியத்திற்கு வலுவூட்டும் என்ற அடிப்படையிலாவது செய்யுங்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக