திங்கள், 7 டிசம்பர், 2020

முழு அடைப்பு போராட்டம் . காலை 11 மணி முதல் 3 மணி வரை நடைபெறும் - விவசாய அமைப்புகள் அறிவிப்பு

maalaimalar : நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டம் நாளை காலை 11 மணி முதல் 3 மணி வரை அமைதியான முறையில் நடைபெறும் என விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன. புதுடெல்லி:வேளாண் சட்டங்களில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்தது. இந்த திருத்தங்கள் விவசாயிகள் தங்கள் விழைபொருட்களை விற்பனை செய்ய அதிக வாய்ப்புகளை அளிக்கும் எனவும், நாடு முழுவதும் விவசாயிகள் தடையின்றி தங்கள் வேளாண் பொருட்களை விற்பனை செய்ய இனி எந்த தடையும் இல்லை என தெரிவித்தது. மேலும், ஏற்கனவெ மாநில அரசுகளால் நடத்தப்படும் மண்டி அமைப்பிடம் வேளாண் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் அரசு அமைப்பிடம் விற்பனை செய்யப்படுவதன் மூலம் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைத்து வருகிறது.

ஆனால், தற்போது கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் மூலம் மாநில அரசுகள் நடத்தும் மண்டி அமைப்பிடம் விற்பனை செய்வது மட்டுமல்லாமல் தனியாரிடமும் நேரடியாக வேளாண் பொருட்களை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதாவது, தனியார் நிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக விளைபொருட்களை வாங்கிக்கொள்ளலாம். இதனால், மண்டி அமைப்பு முறை அழிந்து அந்த அமைப்பு மூலம் உறுதி செய்யப்படும் குறைந்தபட்ச ஆதாரவிலை தடைபட்டுவிடும் என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

வேளாண் பொருட்களை விவசாயிகளிடம் இருந்து தனியார் நேரடியாக வாங்குவதால் இடைத்தரகர்களின் இடையூறுகள் இல்லாமல் விவசாயிகள் அதிக லாபம் பெற முடியும் என மத்திய அரசு வாதம் செய்கிறது.

ஆனால், மத்திய அரசின் இந்த சட்டங்களால் வேளாண் துறை தனியாரிடம் செல்வதுமட்டுமல்லாமல் விவசாயிகள் தனியார்கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் நிலை உருவாகும் என அச்சம் எழுந்துள்ளது.

இதனால், மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் உடனடியாக திரும்ப்பெறக்கோரி டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 12 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக விவசாய குழுக்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடந்த 5 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.

இதற்கிடையில், வேளாண் சட்டங்களை திரும்ப்பெறக்கோரி விவசாயிகள் சார்பில் நாளை (8-ம் தேதி) நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், திமுக, சிவசேனா, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஜம்முகாஷ்மீரின் குப்கர் கூட்டணி, மக்கள் நீதி மய்யம், கம்யூனிஸ்ட் உள்பட பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், திட்டமிட்டபடி நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என விவசாய அமைப்புகள் இன்று அறிவித்துள்ளன. அமைதியான முறையில் இந்த போராட்டம் நடைபெறும் எனவும், போராட்டம் நாளை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளதையடுத்து அந்த அழைப்பை ஏற்று பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளன. இதனால், நாளை நாடு முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போராட்டம் காலை 11 மணிக்கு தொடங்க உள்ளதாகவும் இதனால் அலுவலகம் செல்பவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் எனவும் ஆம்புலன்ஸ் தடையின்றி செல்லலாம் எனவும் திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பாரதிய கிசான் யூனியன் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ராகேஷ் டிகைட் தெரிவித்துள்ளார்.

பாரத் பந்த் போராட்டத்தின்போது விவசாயிகள் தேசிய நெடுச்சாலைகளில் மறியலில் ஈடுபட்டு சுங்கச்சாவடிகளில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என கிசான் யூனியன் ஏற்கனவே அறிவித்துள்ளது.

நாளை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்தால் டெல்லிக்கு ஏற்றிசெல்லப்படும் காய்கறி உள்பட அத்தியாவசிய வாகனங்களின் பயணம் பாதிப்புக்கு உள்ளாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், நாடு தழுவிய முழு அடைப்பு என்பதால் நாடு முழுவதும் போலீசார் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: