வியாழன், 10 டிசம்பர், 2020

அடுத்த கட்டம் ரயில் மறியல்: விவசாயிகள் அறிவிப்பு!

மின்னம்பலம் : மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இன்று (டிசம்பர் 10) 15 ஆவது நாளாக தலைநகர் டெல்லியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்

இன்று, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு மத்திய அரசு அனுப்பிய திருத்த வரைவுகளை மீண்டும் பரிசீலிக்குமாறு வலியுறுத்தினார், அவர்களுடன் மேலதிக விவாதங்களுக்கு தயாராக இருப்பதாகவும் கூறினார். "விவசாயிகளுக்கு புதிய சட்டங்களில் இருக்கும் எந்தவொரு பிரச்சினை பற்றியும் திறந்த மனதுடன் பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளது, அவர்களின் அச்சங்கள் அனைத்தையும் நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்" என்று தோமர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ஆனால் மத்திய அரசு வழங்கிய 20 பக்க முன்மொழிவு விவசாயிகள் சங்கங்களால் நேற்றே நிராகரிக்கப்பட்ட நிலையில், இன்று விவசாயிகளின் போராட்ட சங்கங்களின் கூட்டம் நடந்தது. இதன் பிறகு பேசிய விவசாய சங்கத் தலைவர்கள்,

”நாங்கள் ஏற்கனவே டிசம்பர் 10 ஆம் தேதி வரை ஒரு இறுதி எச்சரிக்கையை வழங்கினோம். பிரதமர் மோடிக்கு எங்கள் போராட்ட ஓசையை செவி கொடுத்துக் கேட்கவில்லை. வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால், நாங்கள் அடுத்ததாக நாடு முழுதும் ரயில் தடங்களைத் தடுப்போம். இன்றைய கூட்டத்தில் இந்திய மக்கள் அனைவரும் ரயில்வே பாதைகளுக்குச் சென்று ரயில்களை மறிக்க அழைப்பு விடுப்பதென்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்கள்.

ஏற்கனவே... டிசம்பர் 14 ம் தேதி, பாஜக தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் அலுவலகங்களின் குடியிருப்புகள் முற்றுகையிடப்படும் என்று விவசாய சங்கத்தினர் அறிவித்திருப்பது குறிப்பிடத் தக்கது.-வேந்தன்

கருத்துகள் இல்லை: