சீனாவிடமிருந்து ஹாங்காங் மக்கள் தங்கள் மாநில சுயாட்சியை மீண்டும் நிலை நிறுத்துவார்கள்?
சுமதி விஜயகுமார் : ·
அக்டோபர் 1. சீனா கம்யூனிச கட்சியின் ஆட்சியை ஒவ்வொரு ஆண்டும் மிக கோலாகலமாக கொண்டாடும் நாள். எழுபது வருடத்தில் இல்லாத விதமாக 2019 கொண்டாட்டம் ரத்த கரையுடன் துவங்கியது. அன்று துவங்கிய வெறியாட்டம் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பெரும்பான்மையான நாடுகளை போலவே சீனாவும் தன் சொந்த நாட்டு மக்களைத்தான் சூறை ஆடி கொண்டிருக்கிறது.
ஹாங்காங் என்றதும் நமக்கு முதலில் நினைவில் வருபவர் ஜாக்கி சான். சில மாதங்களுக்கு முன்னர் ஜாக்கி சான் ஒரு பதிவை ட்வீட் செய்ய 'ஹாங்காங் உங்களை வெறுக்கிறது' என்று பதில் டிவீட்கள் பறந்தன.
மற்ற சீன பகுதிகளை போல இல்லை ஹாங்காங். சிறப்பு அந்தஸ்தை பெற்றது. 1997 வரை ஹாங்காங் சீனாவை சேர்ந்ததில்லை. ஹாங்காங்கை 99 வருடங்களுக்கு குத்தகை எடுத்திருந்தது பிரித்தானிய பேரரசு. 99 ஆண்டுகள் நிறைவடையும் தருவாயில் சீனாவுடன் இணைத்து கொள்ள சில விதிமுறைபாலுடன் அனுமதித்தது பிரிட்டன் அரசு. அதில் முக்கியமான ஒன்று 'ஒரு நாடு , இரு அமைப்புகள்' . அதாவது சீன அரசின் சட்ட திட்டங்கள் ஹொங்காங்கிற்கு பொருந்தாது. ஹாங்காங்கின் சட்டங்களும் கொள்கைகளும் ஹாங்காங் அரசே முடிவு செய்யும். இந்த ஒப்பந்தம் 50 ஆண்டுகள் வரை நீடிக்கும். அதாவது 2047 வரை. இதனாலேயே மற்ற சீன பகுதிகளை விட ஹாங்காங்கில் ஜனநாயகமும் வர்த்தகமும் தளைத்தோங்குகிறது.
சீனாவின் எல்லை ஆக்கிரமிப்புகள், பொருளாதார கொள்கைகள், அசுர வளர்ச்சியின் மேல் மற்ற வளர்ந்த நாடுகள் பொறாமையும் கோபமும் கொண்டிருக்கும் போதும் , ஹாங்காங்கை ஒரு தனி நாடக பார்த்ததற்கு 'ஒரு நாடு , இரு அமைப்புகள்' கொள்கை முக்கிய காரணம். ஹாங்காங் தவிர்த்த மற்ற பகுதிகளை 'Mainland China' என்று அழைக்கிறார்கள். அந்த mainlandல் இருக்கும் சுதந்திரத்தை விட ஹாங்காங்கில் மக்கள் அதிக சுதந்திரத்துடன் வாழ்கிறார்கள்.
அதை நசுக்க சீன அரசு கொண்டு வந்த சட்டம் Anti Extradiction Law Amendment Bill. அதன் சுருக்கம் என்னவென்றால், ஹாங்காங் வாசிகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை mainlandக்கு அழைத்து சென்று விசாரிப்பது. 'இரு அமைப்புகள்' திட்டத்தின் கீழ் , ஹாங்காங் அரசு தனி சட்டம் வைத்திருப்பதால், ஹாங்காங் அரசு சட்டப்படி ஒருவரை, இந்த புதிய சட்டத்தின் மூலம் , சீன mainlandக்கு கொண்டு சென்று தண்டிக்க முடியும். அதாவது ஹாங்காங்கின் மாநில சுயாட்சிக்கு கொள்ளி வைக்கும் சட்டம். இதை எதிர்த்து தான் ஜூன் மாதம் 2019ல் போராட்டம் வெடித்தது. அக்டோபர் 1 அன்று சீன mainland கம்யூனிச(?) நாளை கொண்டாட தயாரான பொழுது, ஹாங்காங் மட்டும் போராட்டத்திற்கு தயாராகி கொண்டிருந்தது.
போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் 5 :
1. போராட்டக்காரர்களை கலவரகாரர்களாக அறிவிக்க கூடாது
2. அதுவரை போராட்டத்தில் கைதானவர்களை பொது மன்னிப்புடன் விடுதலை செய்ய வேண்டும்
3. காவல்துறையின் மனிதத்தன்மையற்ற நடவடிக்கைகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்
4. நிபந்தனையற்ற வாக்குரிமை
5. Anti Extradition மசோதாவை திரும்ப பெறுவது.
அதுவரை சந்தர்ப்பம் அமையாமல் காத்துக் கொண்டிருந்த அமெரிக்க டிரம்ப் அரசு, இந்த புதிய மசோதாவை எதிர்த்து தண்டனை அனுபவிக்கும் ஹாங்காங் வாசிகளுக்கு அடைக்கலம் தருவதாக அறிவித்தது. ஆமாம், தன் அண்டை நாடான மெக்ஸிகோவில் இருந்து வரும் மக்களை தடுக்க பெரிய சுவர் எழுப்பிய அதே டிரம்ப் அரசு தான் ஹாங்காங் வாசிகள் மேல் பரிவும் பாசமும் காட்டியது. ஆஸ்திரேலிய அரசும் போராட்டக்காரர்களுக்கு முழு ஆதரவை தெரிவித்தது.
அசைக்க முடியாத மக்கள் போராட்டத்தை தொடர்ந்து செப்டம்பர் மாதம் சீன அரசு இந்த மசோதாவை திரும்ப பெற்றது. அதனை அடுத்து இன்னொரு சட்டத்தை கொண்டு வந்தது. சீனாவின் தேசிய நலனை காக்க சீன அதிகாரிகள் ஹாங்காங்கில் பதவி வகிக்கலாம் என்ற சட்டம். அதாவது , இதுவரையில் சீன அரசை ஹாங்காங் வாசிகள் விமர்சிக்கலாம். இந்த சட்டம் அமலுக்கு வந்தால் சீனாவை எதிர்த்து விமர்சிப்பவர்களை சீன அரசு கைது செய்யும். பள்ளிகளில் சீன தேசிய பாதுகாப்பு குறித்த பகுதிகளை மேற்பார்வையிடும் உரிமை சீனாவிற்கு இருக்கும். ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு ஆணையை உருவாக்கி அதற்கு சீனா mainlandஐ சேர்ந்தவர் அதிகாரியாய் நியமிக்கப்படுவார். இந்த சட்டத்தை எப்படி வரையறைப்படுத்த வேண்டும் என்ற உரிமை சீனா அரசிற்கே உண்டு. ஹாங்காங் சட்டத்துடன் முரண்படுமேயானால், சீன அரசின் சட்டமே இறுதியாய் இருக்கும். இந்த சட்டம் 30 ஜூன் 2020ல் இருந்து அமலுக்கு வந்தது. இங்கிலாந்து , ஆஸ்திரேலியா , கனடா , ஜப்பான், தைவான் மற்றும் பல உலக நாடுகளும் ஹாங்காங் மக்களுக்கு தங்களின் வருத்தத்தை தெரிவித்தன.
சீன அரசு பிரிட்டனுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி ஹாங்காங்கின் தனித்தன்மையை அழித்து கொண்டிருக்கிறது. சீனாவின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து ஹாங்காங் மக்கள் இன்னமும் போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த நிலையில் 'சீனாவும் என் நாடு , ஹாங்காங்கும் என் நாடு. ஹாங்காங்கில் அமைதி திரும்ப வேண்டும்' என்று ட்வீட் செய்த ஜாக்கி சாணை ஹாங்காங் மக்கள் விமர்சித்து கொண்டிருக்கிறார்கள்.
மேட்டுக்குடி மக்கள் தங்களுக்கு என்று அடையாளத்தை உருவாக்கி கொள்கிறார்கள். பொது மக்கள் தான் என்றும் தன் இனத்தின் அடையாளத்தை காக்க களத்தில் நிற்கிறார்கள். அதனால் தான் போராட்டக்காரர்கள் எப்போதும் கலவரக்காரர்களாக தெரிகிறார்கள்.
காஷ்மீரில் தீவிரவாதம் நுழைந்து விட்டது என்று அப்பாவி மக்களை கொள்வது போல் நடப்பதற்கு முன் ஹாங்காங் மக்கள் விரைவில் தங்கள் மாநில சுயாட்சியை மீண்டும் நிலைநிறுத்துவார்கள் என்றே நம்புவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக