ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு ஏற்படக் காரணம் என்னவென திமுக வட்டாரங்களில் விசாரித்தோம்...
திமுக தலைவர் ஸ்டாலின் சில காலங்களாக கை வலியால் அவதிப்பட்டு வந்தார். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் யாராவது கை அசைத்தால் திரும்ப கை அசைக்க முடியாத அளவுக்கு வலி இருந்தது. வீட்டிலேயே உடற்பயிற்சிக் கூடம் அமைத்து அதற்கான பயிற்சிகள் எடுத்துக்கொண்ட பிறகுதான் வலி சரியானது.
இந்த நிலைமையில் கொளத்தூர் தொகுதியில் நிவாரண உதவிகள் வழங்குவதற்காக இன்று வந்தார். நிவாரணம் வழங்குவதற்கு அடையாளமாக கொஞ்சம் பேருக்கு மட்டும் நீங்கள் தாருங்கள், மற்றவர்களுக்கு நாங்கள் தந்துவிடுகிறோம் என நிர்வாகிகள் ஸ்டாலினிடம் தெரிவித்தனர். பரவாயில்லை நானே எல்லோருக்கும் கொடுக்கிறேன் எனக் கூறி நின்றுகொண்டே அனைவருக்கும் பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது ஸ்டாலினுக்கு இடுப்பு வலி ஏற்பட்டதோடு, லேசான மயக்கமும் உண்டானது. இதனையடுத்துதான் அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனடியாக ஸ்டாலின் சென்றார். உடல்நிலை சரியானதைத் தொடர்ந்து வழக்கமான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள துவங்கினார்.
இதுபற்றி அறிந்த ஸ்டாலின் குடும்பத்தினர், அவரது உடல்நிலையை நெடுநாட்களாக கவனித்து வரும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை சீனியர் மருத்துவர் தணிகாசலத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஸ்டாலினை செல்போனில் தொடர்புகொண்ட மருத்துவர், நிலையை விசாரித்தார். இடுப்பு வலித்தது, லேசான மயக்கம் ஏற்பட்டது. வேறொன்றுமில்லை; இப்போது நலமாக இருக்கிறேன் என அவரிடம் ஸ்டாலின் கூறினார்.
ஆனாலும், நீங்கள் இப்போது வீட்டுக்குச் செல்லக் கூடாது, மருத்துவமனையில் என்னைப் பார்த்துவிட்டுதான் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார் தணிகாசலம். அதன்படி, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்ற ஸ்டாலினுக்கு எக்கோ, இசிஜி உள்ளிட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் நார்மல் என தெரிவித்து அனுப்பிவைத்திருக்கிறார் மருத்துவர். இதன்பிறகு தனது இன்றைய நிகழ்ச்சிகளை ஸ்டாலின் ரத்துசெய்துவிட்டார்.
எழில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக