புதன், 9 டிசம்பர், 2020

காலிஸ்தான் பயங்கரவாதத்தை மீண்டும் தூண்டி விடும் பாகிஸ்தான்

.dinamalar.com புதுடில்லி : பஞ்சாபில், மறைந்த பயங்கரவாதி பிந்தரன்வாலேவின் உறவினர் லக்பீர் சிங் ரோடேவை பயன்படுத்தி, காலிஸ்தான் பயங்கரவாதத்தை மீண்டும் துாண்ட, பாகிஸ்தானின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., முயற்சித்து வருகிறது.

பஞ்சாப் மாநிலத்தில், 1980ம் ஆண்டுகளில், காலிஸ்தான் பயங்கரவாதம் மிக தீவிரமாக இருந்தது. காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த பிந்தரன்வாலே, 1984ல், அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் ராணுவம் நடத்திய, 'ஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார்' நடவடிக்கையில் கொல்லப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, அப்போதைய பிரதமர் இந்திரா, அவரது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதன்பின், மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால், பஞ்சாபில் காலிஸ்தான் பயங்கரவாதம் அடங்கியது. காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலரும், தற்போது வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பஞ்சாபில் மீண்டும் காலிஸ்தான் பயங்கரவாதத்தை துாண்ட, பிந்தரன்வாலேவின் நெருங்கிய உறவினர் லக்பீர் சிங் ரோடேவை, பாக்., உளவு அமைப்பான, ஐ.எஸ்எஸ்,. பயன்படுத்தி வருவதாக, உளவுத்துறை தெரிவித்துள்ளது.

latest tamil news


உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தபின், அங்கு, பயங்கரவாதிகளுக்கு எதிராக, பாதுகாப்பு படையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால், பாகிஸ்தானால் காஷ்மீரில் வாலாட்ட முடியவில்லை.இதையடுத்து, பஞ்சாப் மீது தன் பார்வையை பாகிஸ்தான் திருப்பியுள்ளது.

பஞ்சாபில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் வாயிலாக, பயங்கரவாதத்தை துாண்ட, ஐ.எஸ்.ஐ., முயற்சித்து வருகிறது.பிந்தரவாலேவின் உறவினர் லக்பீர் சிங் ரோடேவை, இதற்காக, ஐ.எஸ்.ஐ., பயன்படுத்த துவங்கியுள்ளது. முதல்கட்டமாக, காலிஸ்தான் ஆதரவாளர்களை, ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக திருப்பத் துவங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாகவே, பஞ்சாபில் சமீபத்தில் சிவசேனா தலைவர் ஹனி மஹாஜன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது; இதில், அவரும், அவரது மகளும் காயமடைந்தனர்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.இதையடுத்து, காலிஸ்தான் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க, பஞ்சாப் அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

கருத்துகள் இல்லை: