செவ்வாய், 8 டிசம்பர், 2020

`8 வழிச் சாலைக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும்!’-மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

எட்டுவழிச் சாலை... அரசுக்கு நீதிமன்றம் ‘குட்டு’
எட்டுவழிச் சாலை... அரசுக்கு நீதிமன்றம் ‘குட்டு’
 துரைராஜ் குணசேகரன் - vikatan :சென்னை முதல் சேலம் வரையிலான எட்டுவழிச் சாலைக்கு உயர் நீதிமன்றம் விதித்த தடை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

ரூபாய் 10,000 கோடி செலவில் சென்னை - சேலம் இடையே எட்டுவழிச் சாலை அமைப்பதற்கான அரசாணை வெளியானதிலிருந்து விவசாயிகள் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். அந்த அரசாணையில் திட்டத்துக்காக 1,900 ஹெக்டர் நிலங்கள் கையகப்படுத்தப்படவிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. நிலங்களைக் கையகப்படுத்துவதற்கும், இந்தத் திட்டத்துக்கு எதிராகவும் தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உயர் நீதிமன்றம் சாலை அமைப்பதற்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. அதோடு, கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அடுத்த எட்டு மாதங்களுக்குள் மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

டெல்லி உச்ச நீதிமன்றம்
டெல்லி உச்ச நீதிமன்றம்

நிலத்தைக் கையகப்படுத்துவதில் சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறவில்லை. எந்த ஒரு திட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பும் சுற்றுச்சூழல் அனுமதி மிகவும் அவசியம். நிலத்தைக் கையகப்படுத்தியதில் விதிமுறை மீறல்கள் நடந்திருக்கின்றன என்று உயர் நீதிமன்றத் தீர்ப்பின்போது கூறப்பட்டிருந்தது.

அதேபோல, நிலம் கையகப்படுத்தப்பட்டபோது அந்தப் பகுதி மக்களின் கருத்துகள் கேட்டறியப்படவில்லை. மக்களின் எதிர்ப்புகளையும் மீறி நிலம் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது என்றெல்லாம் கருத்துகள் கூறப்பட்டிருந்தன.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கில் இரண்டு தரப்பிலும் கருத்துகளைக் கேட்டறிந்தது. `சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தடை செல்லும்’ என்று கூறி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு மனுவைத் தள்ளுபடி செய்தது.

மேலும், ``சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை தொடரும். எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தத் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது. எட்டு வழிச்சாலை திட்டத்துக்குத் தடை இல்லை. மீண்டும் நிலம் கையகப்படுத்த மத்திய அரசு புதிய அரசாணையை வெளியிட வேண்டும். குறிப்பிட்ட அந்தந்தத் துறைகளில் அனுமதி பெற்று முறையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி எட்டு வழிச்சாலை திட்டத்தைப் புதிதாகத் தொடங்கிக் கொள்ளலாம். நெடுஞ்சாலை அமைப்பது தொடர்பாகச் சுற்றுச்சூழல் துறையிடம் முறையான அனுமதி பெற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது, உச்ச நீதிமன்றம்.

கருத்துகள் இல்லை: