செவ்வாய், 8 டிசம்பர், 2020

தமிழகத்தில் 51 கொரோனா தடுப்பூசி மையங்கள்!

minnambalam : இங்கிலாந்து நாடு கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில் அடுத்தடுத்து சில நாடுகளும் தடுப்பூசிகளை அங்கீகரிக்கும் இறுதிகட்ட செயல்பாட்டில் இருக்கின்றன. இந்நிலையில்... இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். அண்மையில் பிரதமர் மோடியே தடுப்பூசி தொடர்பான ஆய்வுகளின் நிலை பற்றி மூன்று இடங்களுக்கு நேரடியாகச் சென்று கேட்டறிந்தார். இந்நிலையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இந்திய தொழில்துறை கூட்டமைப்பான சிஐஐ ஆகியவை இணைந்து டிசம்பர் 7 ஆம் தேதி நடத்திய இந்திய போர்ச்சுகல் தொழில்நுட்ப மாநாடு 2020-ல் கலந்துகொண்டு பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்,

“இந்தியாவில் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்துகள் பல்வேறு கட்ட தயாரிப்பில் உள்ளன. அவற்றில் இரண்டு தயாரிப்பின் முக்கிய கட்டத்தில் உள்ளன-இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின், சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா தயாரிக்கும் கோவிஷீல்டு இவை இரண்டும் மூன்றாம் கட்ட மருத்துவ சோதனையில் உள்ளன.

நமது முதன்மை நிறுவனமான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தனது சோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அனைத்து நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளுக்கும் இந்தியா சோதனை முயற்சிகளை அளித்து வருகிறது. உலகின் மிகப்பெரும் தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்துக்கான சோதனையை மேற்கொண்டு வருகிறது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மரபணு சார்ந்த தடுப்பு மருந்தின் இரண்டாவது கட்ட சோதனையை ஜைடஸ் கேடில்லா மேற்கொண்டு வருகிறது.

மிகப்பெரும் மருந்து நிறுவனங்களுள் ஒன்றான டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரீஸ், ரஷ்ய தடுப்பு மருந்தின் இறுதிகட்ட சோதனையை மேற்கொண்டு அதற்கான ஒப்புதலைப் பெற்ற பிறகு இந்தியாவில் அதனை விநியோகிக்கும்” என்று அவர் குறிப்பிட்டார். மேலும், “உலகளவில் அதிக எண்ணிக்கையில் காப்புரிமைகளை பதிவு செய்துள்ள முதல் பத்து நாடுகள் பட்டியலில் இந்தியாவும் ஒன்று” என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.

இதற்கிடையே தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

”கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் நோய் விலகி விட்டது என்று எண்ணி அலட்சியம் கொள்ளாமல், கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கைகளான முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்டவைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் 51 இடங்களில் கொரோனா தடுப்பூசிகளுக்கான பாதுகாப்புடன் சேமித்து வைக்கும் மையங்கள் தயார் நிலையில் உள்ளது. மத்திய அரசு தடுப்பூசி வினியோகித்தல் குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் தரவில்லை. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் எவ்வாறு விநியோகிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வோம்”என்று கூறியுள்ளார்.

வேந்தன்

கருத்துகள் இல்லை: