மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன் லைனில் வந்தது. "கடந்த டிசம்பர் 3ஆம் தேதி சென்னையில் போயஸ் கார்டனில் இருக்கும் தன் வீட்டு வாசலில் இருந்தபடி, ’உயிரைக் கொடுத்தாலும் என் வாக்கைக் காப்பாற்றுவேன். அரசியல் கட்சியை தொடங்குவேன். டிசம்பர் 31ஆம் தேதி இது பற்றி அறிவிப்பேன்’ என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்ததற்கு பிறகு... தமிழகத்தின் பெரிய கட்சிகளான திமுக, அதிமுக மட்டுமல்ல வளரும் கட்சிகளான பலவற்றிலும் ரஜினி அறிவிப்பின் தாக்கம் எதிரொலித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவருடன் இணைந்து பணியாற்றத் தயார் என்ற தனது விருப்பத்தை அவ்வப்போது கமல்ஹாசன் வெளிப்படுத்தி வந்தார். பிரசாரத்துக்கு செல்லும்போது பலரது வீடுகளுக்கும் செல்வேன்.என் நண்பனைத் தேடிச் செல்லாமல் இருப்பேனா என்றெல்லாம் கேட்டார் கமல். முன்னதாக கடந்த மார்ச்சில், ‘நான் முதலமைச்சர் இல்லை. இன்னொருவரை முதல்வர் ஆக்குவேன்’ என்று ரஜினி மாற்றுத்திட்டத்தை முன்வைத்த போது... அப்படி என்றால் ரஜினி முன்னிறுத்தும் முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசனா என்றொரு கேள்வியும் எழுந்தது. ஆனால் அதற்குப் பிறகு ரஜினியின் அரசியல் அறிவிப்பிற்காக காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போன கமல்ஹாசன் தனது கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளை முடுக்கி விட்டார். மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன் என அறிவிக்கப்பட்டு இதோ இன்று பிரச்சாரக் களத்தில் இறங்கிவிட்டார்.
பிரச்சாரக் களத்தில் இறங்குவதற்கு முன்னதாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுடன் கமல்ஹாசன் பேசியிருக்கிறார். கட்சி தொடங்கியது முதல் இன்றுவரை கூட்டணி எதுவும் இல்லை என்ற நிலைப்பாட்டில் தான் சீமான் இருந்து வருகிறார். நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு எங்களோடு கூட்டணி சேர யாரும் இல்லை என்பதே சீமானின் தெளிவான நிலைப்பாடாக இருந்தது. ஆனால் ரஜினியின் வருகைக்குப் பிறகு நாம் உதிரிகளாக நிற்கக்கூடாது ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டும் என்று சீமானிடம் கமல்ஹாசன் கூறியிருப்பதாக மக்கள் நீதி மய்ய வட்டாரத்தில் கூறுகிறார்கள். கழகங்களுடன் தான் கூட்டணி இல்லை என்று சொன்னார் கமல். எனவே கமல், சீமான் கை கோர்க்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
ஏற்கனவே 117 தொகுதிகளுக்கான ஆண் வேட்பாளர்கள், 117 தொகுதிகளுக்கு பெண் வேட்பாளர்கள் என கிட்டத்தட்ட திட்டமிட்டு முடித்து அறிவிக்கப்படாமல் அவர்களை தேர்தல் பணி செய்ய ஆணையிட்டுவிட்டார் சீமான். அவர்களும் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் தேர்தல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் கமல்ஹாசன் சீமான் ஆகியோருக்கு இடையே கூட்டணி மலரக் கூடும் என்ற ஒரு குறிப்பு தென்படுகிறது. ரஜினியை மிக மிகக் கடுமையாக தாக்கும் சீமான், அந்த அளவுக்கு கமல்ஹாசனை தாக்குவதில்லை மேலும் இருவரும் இளையான்குடி, பரமக்குடி என ஒரே பகுதியில் இருந்து தமிழகத்தின் பொது நீரோட்டத்துக்கு வந்தவர்கள். கமல்ஹாசன் மீது மரியாதை வைத்திருக்கும் சீமான் மக்கள் நீதி மையத்தின் கூட்டணி காணவும் வாய்ப்பு இருக்கிறதா என்பதே இப்போது மய்ய வட்டாரத்தில் எதிரொலிக்கும் கேள்வி.
கமல்ஹாசன் சீமான் மட்டுமல்ல இந்த கூட்டணியை மேலும் வைப்ரேட் ஆக்குவதற்காக கடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் அனைவரையும் பேசவைத்த ஒவைசியும் இந்தக் கூட்டணியில் இணைய இருக்கிறார் என்கிறார்கள்.
முஸ்லிம் வாக்குகள் தங்களுக்கே என்ற அபரிமிதமான நம்பிக்கையில் திமுக கூட்டணி இருக்கும் போது... பிகார், தெலுங்கானா என இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் தனது செல்வாக்கை நிரூபித்திருக்கும் ஓவைசி தமிழ்நாட்டிலும் தனக்கு தோதான அணி தேடிக் கொண்டிருக்கிறார். அதற்கான பேச்சுவார்த்தைகளையும் கமலுடன் மேற்கொண்டிருக்கிறார். ஏற்கனவே இருக்கும் முஸ்லிம் கட்சிகள் திமுக, அதிமுக என மாறி மாறி சில சீட்டுகளுக்காக பயணித்துக் கொண்டிருக்கையில்... ஓவைசி இந்தக் கூட்டணியில் இடம்பெறும் பட்சத்தில் அது முக்கியமான கூட்டணியாக அமையும். கமல், சீமான், ஓவைசி ஆகியோரது அணி அமையும் பட்சத்தில் புதிய வாக்காளர்கள் இடையே ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது "என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக