நேஷனல் ஹெரால்டு வழக்கின் பின்னணி என்ன?
- ராகுல் காந்தியின் தாத்தா ஜவஹர்லால் நேருவால் 1937-ல் தொடங்கப்பட்ட நிறுவனத்தின் பெயர் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட். இந்நிறுவனத்தில் 5000க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர்.
- இந்நிறுவனத்தின் சார்பாக 1938-ம் ஆண்டு முதல் நேஷனல் ஹெரால்டு என்ற பெயரில் பத்திரிகை வெளியிடப்பட்டது
- உருது மொழியில் குவாமி ஆவாஸ், இந்தி மொழியில் நவ்ஜீவன் பத்திரிகைகளும் வெளியிடப்பட்டன.
- 1947-ல் நாட்டின் முதல் பிரதமராக நேரு பொறுப்பேற்றதால் நேஷனல் ஹெரால்டு குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
- 2008-ம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியிடுவது நிறுத்தப்பட்டது.
- 2016-ம் ஆண்டில் இணைய பதிப்பாக நேஷனல் ஹெரால்டு வெளியானது.
- 2012-ம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பாக சோனியா- ராகுலுக்கு எதிராக பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமிதான் முதலில் வழக்கு தொடர்ந்தார்.
- 2008-ல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மூடப்பட்ட போது, அப்பத்திரிகைக்கு காங்கிரஸ் கட்சி ரூ90 கோடி கடன் கொடுத்தது; இந்த கடனை சோனியா- ராகுல் பங்குதாரர்களாக இருக்கும் யங் இந்தியா மூலம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பெற்றது; இந்த கடனுக்காக நேஷனல் ஹெரால்டின் பங்குகள், யங் இந்தியாவுக்கு மாற்றப்பட்டன என்பது குற்றச்சாட்டு
- இந்த வழக்கில் பண மோசடி நடந்துள்ளது எனக் கூறி அமலாக்கத்துறை தலையிட்டது. 2023-ல் ரூ700 கோடி மதிப்பிலான சொத்துகளையும் அமலாக்கத்துறை முடக்கியது.
- இந்த வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் அண்மையில் சோனியா- ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத்துறை குற்ப்பத்திரிகை தாக்கல் செய்தது.
- இக்குற்றப்பத்திரிகையை ஏற்க முடியாது என டெல்லி நீதிமன்றம் இன்று (டிசம்பர் 16) தெரிவித்துவிட்டது. இது அமலாக்கத்துறைக்கு பெரும் பின்னடைவாகும்.
- அமலாக்கத்துறையின் விசாரணை என்பது முதல் தகவல் அறிக்கை (FIR) இல்லாமல் தனிப்பட்ட புகாரின் அடிப்படையில் அமைந்துள்ளது எனவும் டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளது. முதலில் விசாரணை நடத்தி FIR பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் இந்த முடிவை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. அமலாக்கத்துறையின் நடவடிக்கை “ஆதாரமற்றது” மற்றும் “சட்டவிரோதமானது” என்று காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். “உண்மை ஒருநாள் வெல்லும் என்பதற்கு இது ஒரு உதாரணம்” என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், நேஷனல் ஹெரால்டு வழக்குத் தீர்ப்பின் மூலம், எதிர்க்கட்சித் தலைவர்களைப் பழிவாங்குவதற்காக ஒன்றிய பா.ஜ.க. அரசினால் மத்தியப் புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை மீண்டுமொருமுறை நீதித்துறை அம்பலப்படுத்தியுள்ளது. சட்டரீதியான எந்தவொரு முகாந்திரமும் இன்றி, இத்தகைய வழக்குகள் அரசியல் எதிரிகளைத் துன்புறுத்தவும் களங்கப்படுத்தவுமே தொடரப்படுகின்றன.
உண்மையையும் அச்சமின்மையையும் தங்கள் பக்கம் கொண்டுள்ள மதிப்புக்குரிய நாடாளுமன்றக் காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தி அம்மையார் அவர்களும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் எனது சகோதரர் ராகுல் காந்தி அவர்களும் தவறிழைக்காதது நிரூபணமாகியுள்ளது.
ஆனாலும், மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பின் மாண்புநெறிகளில் அவர்கள் உறுதியாக நிற்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத பா.ஜ.க.வானது காந்தி குடும்பத்தினரைத் தொடர்ந்து வேட்டையாடுவதில் குறியாக உள்ளது.
பா.ஜ.க.வின் இந்தப் பழிவாங்கும் நோக்கம் நாட்டின் உயர் புலனாய்வு அமைப்புகளின் நம்பகத்தன்மையை மீண்டும் மீண்டும் சிதைத்து, அவற்றை வெறுமனே அரசியல் எதிரிகளை அச்சுறுத்துவதற்கான கருவிகளாகச் சுருக்குகின்றது என தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக