ஞாயிறு, 15 டிசம்பர், 2019

BBC : மனோ கணேசன் : இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும்


குடியுரிமை திருத்தச் சட்டம்: ‘இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும்’ - மனோ கணேசன் இந்தியாவில் வாழ்கின்ற இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், முன்னாள் இலங்கை அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்திய குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பில் பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே மனோ கணேசன் இதனைக் குறிப்பிட்டார்.
இந்திய உள்நாட்டு பிரச்சனைக்குள் தலையீடு செய்ய தான் விரும்பவில்லை என கூறிய மனோ கணேசன், இலங்கையிலிருந்து அகதிகளாக சென்ற மக்கள் தொடர்பிலேயே கருத்து தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் வருகைத் தந்துள்ள அகதிகளுக்கு குடியுரிமை திருத்த மசோதாவின் ஊடாக குடியுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளை, இலங்கை அகதிகள் அந்த மசோதாவில் உள்வாங்கப்படாதது பாரபட்சமான விடயம் என அவர் தெரிவிக்கின்றார்.
இலங்கை அகதிகளுக்கு மாத்திரம் ஏன் இந்த பாரபட்சம் என பலரும் கேள்வி எழுப்புவதை அவர் நினைவூட்டினார்.

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக சென்றுள்ள இலங்கையர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் அதேவேளை, இலங்கை குடியுரிமையும் வழங்கப்பட வேண்டும் என மனோ கணேசன் கோரிக்கை விடுக்கின்றார்.
இலங்கை தமிழர்களின் ஜனநாயக போராட்டங்களும், ஆயுதப் போராட்டங்களும் தோல்வி அடைவதற்கு பிரதான காரணம் தமிழ் மக்களின் ஜனத் தொகை குறைவு என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
தமிழர்களின் போராட்டத்தை தாக்குபிடிக்கும் அளவிற்கான ஜனத்தொகை குறைவே, போராட்டங்கள் தோல்வி அடைவதற்கான காரணம் என அவர் கூறுகின்றார்.
தமிழர்களின் போராட்டங்கள் மற்றும் கனவுகள் எல்லாம் கனவுகளாகவே முடிவடைவதற்கு ஜனத்தொகை பற்றாக்குறையே காரணம் என மனோ கணேசன் குறிப்பிடுகின்றார்.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும், ஆஸ்திரேலியாவிலும், வாழ்கின்ற தமிழர்கள் மீண்டும் தாய் நாட்டிற்கு வர மாட்டார்கள் என அவர் கூறுகின்றார்.
இலங்கைக்கு அவர்களை வருமாறு அழைத்தால், தமது உயிருக்கு யார் உத்தரவாதம் அளிப்பது என புலம்பெயர் தமிழர்கள் கேள்வி எழுப்புவதாக கூறுகின்ற அவர், இலங்கையில் தற்போது வாழ்கின்ற தமிழர்கள் யாருடைய உத்தரவாதத்தில் வாழ்கின்றோம் என வினவினால் அதற்கு பதில் இல்லை எனவும் குறிப்பிடுகின்றார்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிப்பதில் எந்தவித பயனும் கிடையாது என மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.
எனினும், இந்தியாவில் வாழ்கின்ற இலங்கை தமிழ் அகதிகள் மாத்திரமே இலங்கைக் வருவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.
இந்தியாவில் சுமார் 98000 இலங்கை அகதிகள் உள்ளதாகவும், அவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருகைத் தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
இலங்கையில் தற்போது தமிழர்கள் வாழக்கூடிய சூழ்நிலையை தாம் தமது ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தியதாகவும், எதிர்வரும் காலங்களில் சமாதானம் தொடரும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அவ்வாறு இந்தியாவிலுள்ள தமிழர்கள் தாயகம் திரும்புவதன் ஊடாகவே, தமிழர் ஜனத்தொகை அதிகரிக்கும் எனவும், அதனூடாகவே அரசியல் பலத்தை அதிகரித்துக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
இந்த நிலையில், அரசியல் பலம் அதிகரிக்கும் பட்சத்தில் மாத்திரமே தமிழர்களின் ஜனநாயக இலக்குகளை அடைய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.
>இதன்படி, இந்திய மத்திய அரசாங்கம் குடியுரிமை சட்டத்தில் மற்றுமொரு திருத்தத்தை கொண்டு வந்து, இலங்கை அகதிகளுக்கு இரட்டை பிரஜாவுரிமையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை விடுக்கின்றார்.
இலங்கை தமிழர் பிரச்சினை முடிந்து விட்டதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்த கருத்து குறித்தும் மனோ கணேசன் பதில் வழங்கினார்.
அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்தை அவசரப்பட்டு அவதானிக்கக்கூடாது என மனோ கணேசன் குறிப்பிடுகின்றார்.
இலங்கையில் யுத்தம் கிடையாது, கடத்தல் காணாமல் போதல் கிடையாது, தொல்லை கிடையாது என்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டே அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விடயத்தை தெரிவித்திருக்கலாம் என அவர் கூறுகின்றார்.
இலங்கையில் தமிழர் பிரச்சனை உள்ளதை அடிப்படையாகக் கொண்டே, 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழர்களுக்கு பிரச்சனை உள்ளதாக கூறுகின்ற மனோ கணேசன், நாட்டில் யுத்தம் கிடையாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டே அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விடயத்தை கூறியிருக்கலாம் எனவும் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.

கருத்துகள் இல்லை: