வியாழன், 1 மே, 2025

மக்கள் தொகைக் + சாதிவாரி கணக்கெடுப்பு : முதலமைச்சரை வழிமொழிந்த ஒன்றிய அரசு!

 கலைஞர் செய்திகள் : மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இக்கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சம உரிமை மற்றும் வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திட்டங்களைத் தீட்டி, சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம் என்றும், 2021ஆம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டும் என்றும், அத்துடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்த வேண்டும் எனவும் ஒன்றிய அரசை வலியுறுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.



இந்நிலையில், டெல்லியில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ”நாடுமுழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மாநில அளவில் தனித்தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அவசியம் இல்லை.”என தெரிவித்துள்ளார். ஆனால், அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை

கருத்துகள் இல்லை: