வியாழன், 1 மே, 2025

டாடா விமான சேவைக்கு ரூ.5000 கோடி இழப்பு! பாகிஸ்தான் வான்வழி மூடல்

 tamil.goodreturns.i - Prasanna Venkatesh :
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இந்திய விமானங்களுக்கு தனது வான்வழியை மூடியது.
பாகிஸ்தான் தனது வான்வழியை இந்திய விமானங்களுக்கு மூடியதால், ஏர் இந்தியா விமான நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 600 மில்லியன் டாலர் (ரூ.5000 கோடி) இழப்பை சந்திக்கும் என மதிப்பிட்டு, இதற்கு ஈடுசெய்ய மத்திய அரசிடம் மானியம் கோரியுள்ளது.



ஏர் இந்தியா நிறுவனம் ஏப்ரல் 27 அன்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில், பாகிஸ்தான் இந்திய விமான நிறுவனங்களுக்கு தனது வான்வழியை ஒரு ஆண்டுக்கு மூடினால் ரூ.5000 கோடி இழப்பு ஏற்படும் என மதிப்பிட்டுள்ளது. இந்த இழப்பை ஈடு செய்ய மத்திய அரசிடம் மானிய திட்டத்தை செயல்படுத்தவும். தடை நீக்கப்பட்ட உடன் மானிய திட்டத்தை நீக்கலாம் என்ற கோரிக்கை உடனும் ஏர் இந்தியா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

பாகிஸ்தான் தனது வான்வழியை மூடியதால் இந்திய விமானங்கள் மாற்று சுற்றுப்பாதையில் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் அதிக எரிபொருள் செலவு, கூடுதல் பணியாளர் தேவை ஆகியவை ஏர் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்டிகோ, ஏர் இந்தியா மற்றும் அதன் குறைந்த கட்டண பிரிவான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை ஏப்ரல் மாதத்தில் டெல்லியில் இருந்து ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்காவுக்கு மொத்தமாக 1,200 விமானங்களை இயக்க . பாகிஸ்தான் வான்வழியை மூடப்பட்டதால், இந்த விமானங்கள் மாற்று வழித்தடங்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் பயண நேரம் அதிகரிப்பதுடன், எரிபொருள் செலவும் கணிசமாக உயர்கிறது.

ஏர் இந்தியா, இந்தியாவில் 26.5% சந்தைப் பங்கு வகிக்கும் முன்னணி நிறுவனமாக, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு பாகிஸ்தான் வான்வழியைக் கடந்து செல்லும் பல நீண்ட தூர விமானங்களை இயக்குகிறது. இதனால், ஏர் இந்தியா நிறுவனம் மற்ற இந்திய விமான நிறுவனங்களை விட இந்தத் தடையால் அதிக பாதிப்பை சந்திக்கிறது. மிகப்பெரிய உள்நாட்டு போட்டியாளரான இந்தியோவை விட ஏர் இந்தியாவின் நீண்ட தூர வழித்தடங்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் ஏர் இந்தியா, போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களிடமிருந்து 200க்கும் அதிகமான விமானங்களை ஆர்டர் செய்திருந்தாலும், டெலிவரி தாமதமாகும் காரணத்தால் விமான சேவையை விரிவாக்கம் செய்ய முடியாமல் ஏற்கனவே பாதித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் வான்வழி தடை இந்நிறுவனத்தின் நிதி நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளது.

இந்த இழப்பை சரி செய்ய மத்திய அரசு மானிய திட்டத்தை அறிவிக்குமான என்ற கேள்வி எழும் இதேவேளையில் மற்றொரு விஷயமும் இன்று நடந்துள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) ஆகியவை விமான எரிபொருள் (ஏடிஎஃப்) விலையை குறைந்துள்ளது.

இன்று காலை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி விமான எரிபொருளின் விலையை 4.4 சதவீதமும் குறைத்துள்ளன. டெல்லியில் விமான எரிபொருள் விலை ஒரு கிலோலிட்டருக்கு 3,954.38 ரூபாய் குறைந்து, 85,486.80 ரூபாயாக உள்ளது. இது, விமான நிறுவனங்களுக்குச் செலவு சுமையைச் சற்று குறைக்க உதவும்.

கருத்துகள் இல்லை: