வியாழன், 6 ஜூலை, 2017

பெங்களூரு .. லெஸ்பியன் திருமணம் செய்தமையால் வேலை நீக்கம் செய்த gozfo.com

first lesbian ‘wedding’ in Bengaluru, a 25-year-old woman tied the knot with a 21-year-old at a temple in Koramangala.
பெங்களூருவில் ஒரு பெண் லெஸ்பியன் திருமணம் செய்துகொண்டதாக டிவியில் செய்தி வெளியானதையடுத்து, அந்த பெண் வேலை செய்துவந்த நிறுவனம் அவரை பணி நீக்கம் செய்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பெண் பெங்களூருவில் உள்ள ஒரு கோயிலில் சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாத லெஸ்பியன் திருமணம் செய்துகொண்டார் என்று ஊடகங்களில் செய்தி வெளியான பிறகு அவர் வேலை செய்து வந்த நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தி பெங்களூரு மிரர் செய்தித்தாளில் இன்று ஜூலை 6ம் தேதி வெளியாகியுள்ளது.
பெங்களூருவில் புதுப்பிக்கத்தக்க மற்றும் பழைய பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் www.gozfo.com என்ற இணையதள நிறுவனத்தில் லெஸ்பியன் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படும் அந்த பெண் வேலை செய்துவந்துள்ளார்.
பெங்களூரு மிரர் செய்தித்தாள் நேற்று ஜூலை 5ம் தேதி வெளியிட்ட செய்தியில், 25 வயது மற்றும் 21 வயது கொண்ட 2 தூரத்து உறவுப் பெண்களுக்கு பெங்களூரு கோரமங்கலாவில் உள்ள ஒரு கோயிலில் திருமணவிழா ஏற்பாடு செய்யப்பட்டது என்று கூறியுள்ளது. இதில் என்ன பிரச்னை என்றால், இந்தியாவில் ஒருபால் உறவு திருமணங்கள் சட்டப் பூர்வமான திருமணங்கள் கிடையாது.

லெஸ்பியன் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படும் 21 வயதுகொண்ட அந்த இளம் பெண்ணின் ஃபேஸ் புக் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட படத்தை இன்று வியாழக்கிழமை ஒரு தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிறகு, அவர் வேலை செய்து வந்த www.gozfo.com நிறுவனம் அவரை பணி நீக்கம் செய்துள்ளது என்று அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த இளம் பெண் இன்று ஜூலை 6ம் தேதி வெளியாகியுள்ள பெங்களூரு மிரர் செய்தித்தாளில் கூறியிருப்பதாவது: "இன்று காலை அந்த நிறுவனத்திலிருந்து என்னை போனில் கூப்பிட்டு வேலையில் தொடர விரும்புகிறாயா? என்று கேட்டார்கள். மேலும், அவர்கள் என்னிடம் உங்களுடைய பெற்றோரிடம் பேச வேண்டும் என்று கேட்டார்கள். மீண்டும் பேசுவதாகக் கூறினார்கள். அதற்கு நான் கூறினேன். நான் என்னுடைய வழக்கறிஞர்களுக்கு பேசுவேன் என்றும் அவர்கள் திரும்ப பேசுவார்கள் என்று தெரிவித்தேன்” என்று கூறியுள்ளார்.
இதனிடையே, அந்த 25 வயது பெண் பெங்களூரு மிரருக்கு கூறுகையில், "நாங்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை. இருவரும் சேர்ந்து மட்டுமே வாழ்கிறோம். என்னுடைய பெரியப்பா பரப்பிய இந்த அவதூறால் நாங்கள் இருவருமே பாதிக்கப்பட்டிருக்கிறோம். அந்த நிறுவனம் அவளை பணியிலிருந்து தூக்கியெறிந்துள்ளது. இதை டிவி சேனல்களில் தெரிவிக்க ஒருவரும் இல்லை. டிவியில் ஒளிபரப்பப்பட்ட அந்த காட்சிகள் அவளுக்கு எதிரான முக்கிய ஆதாரங்கள் என்று நிறுவனத்தினர் அவளிடம் கூறியுள்ளார்கள். நாங்கள் திருமணம் எல்லாம் செய்துகொள்ளவில்லை. உண்மையில் நான் அந்த பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறேன். நாங்கள் ஒரே அறையில் வசிக்கிறோம். அவர்கள் அவளை பணி நீக்கம் செய்திருப்பது உண்மையில் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல." என்று தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்னை தொடர்பாக, அந்த 21 வயது இளம் பெண்ணின் தந்தை பெங்களூரு விஜய்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த பிரச்னையையொட்டி ஓரினச் சேர்க்கையாளகள் விவகாரம் மீண்டும் விவாதத்துக்கு வந்துள்ளது.இந்தியாவில் ஓரினச் சேர்க்கையாளர்களான லெஸ்பியன், கே, இருபால் சேர்க்கையாளர்களான பை செக்ஸுவல், திருநங்கைகள் (எல்ஜிபிடி) ஆகியோர் திருமணம் செய்துகொள்ள சட்ட உரிமை இல்லை. இந்திய தண்டனைச் சட்டம் 377வது பிரிவு ஓரினச்சேர்க்கையை குற்றநடவடிக்கைகளாகக் கூறுகிறது. 2009ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் அந்த பிரிவை முடிவுக்கு கொண்டுவர விரும்பியது. அதற்குப் பிறகு, 2013ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஓரினச் சேர்க்கையை 377வது பிரிவில் மீண்டும் குற்றநடவடிக்கையில் சேர்த்தது என்பது குறிப்பிடத் தக்கது.
பெங்களூருவில் 21 வயது இளம் பெண் லெஸ்பியன் திருமணம் செய்துகொண்டதாக டிவியில் செய்தி வெளியானதை அடுத்து அவள் வேலை செய்து வந்த நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டிக்கும் சம்பவம் எல்ஜிபிடி மக்களிடமிருந்து தீவிர எதிர்வினையை பெற்றுள்ளது. எல்ஜிபிடியினர் தங்களுடைய ஆதரவாளர்களிடம் gozfo.com நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த பிரச்னையில் பெங்களூரு மிரர் செய்தித்தாளின் கேள்விகளுக்கு அந்த பெண்ணை பணி நீக்கம் செய்த நிறுவனம் பதிலளிக்கவில்லை. இருப்பினும், அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் நாளிதழ் ஒன்றில் கூறுகையில், இந்த செய்தி நம்புவதற்கு கடினமானதாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அந்நிறுவனத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக கருத்து சொல்ல மறுத்துள்ளார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: