தமிழக சட்டப்பேரவையில் இன்று ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை குறித்து முதல்வர் பழனிசாமி அளித்த விளக்கத்தில், "திருச்சி, தில்லை நகரைச் சேர்ந்த லதா ராமஜெயம் என்பவர், 29.3.2012 அன்று, அதிகாலை 5 மணிக்கு நடைப்பயிற்சிக்கு சென்ற தனது கணவரும், முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பியுமான ராமஜெயம் வீடு திரும்பவில்லையெனவும், அவர் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறும் கோரி அன்றைய தினம் காலை 11.45 மணிக்கு புகார் அளித்ததன் பேரில், தில்லைநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அன்றைய தினம் சுமார் 11.30 மணியளவில், திருச்சி-கல்லணை சாலையில் உள்ள பொன்னுரங்கபுரம் என்ற இடத்துக்கு அருகில், ராமஜெயத்தின் உடல் காயங்களுடன் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது. இதுதொடர்பாக, திம்மராயபுரம் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், திருவரங்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், இவ்வழக்கு தில்லைநகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குடன் இணைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 27.6.2012 அன்று இவ்வழக்கு மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது. மாநில குற்றப்புலனாய்வுத் துறையினர் இவ்வழக்கில்
12 தனிப்படைகள் அமைத்து, இச்சம்பவம் தொழில்போட்டி அல்லது அரசியல் விரோதம் அல்லது குடும்ப பிரச்னை காரணமாக நடந்துள்ளதா என அறிய பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த வழக்கு குறித்து குற்றப்புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குநர் திருச்சி சென்று, புலன் விசாரணை பற்றி ஆய்வு செய்து அறிவுரைகள் கொடுத்துள்ளார். குற்றப்புலனாய்வுத் துறை கண்காணிப்பாளர் ஒருவரின் நேரடி மேற்பார்வையில் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. இறந்தவரின் உறவினர்கள், அவருடைய பணியாட்கள், அவருடன் தொழில் ரீதியாக அறிமுகம் உள்ளவர்கள், அரசியல் தொடர்பு உடையவர்கள் எனப் பலரும் விசாரிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து விவரங்களைப் பற்றியும் மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1,100 சாட்சிகளுக்கு மேல் விசாரணை செய்யப்பட்டுள்ளனர். தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் சம்பவ இடத்தில் தீவிரமாகச் சோதனை நடத்தி தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாயும் பயன்படுத்தப்பட்டது. வழக்குடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சம்பவங்கள் சிசிடிவி பதிவுகள் மூலம் பார்வையிடப்பட்டன. இறந்தவரை வாகனத்தில் கடத்திச் சென்றிருக்கலாம் என்ற ஐயத்தின் அடிப்படையில் திருச்சியை ஒட்டி உள்ள சுங்கச்சாவடிகளில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. சந்தேகப்படக்கூடிய வகையான 294 வாகனங்கள் சோதனைச் செய்யப்பட்டு அவற்றின் உரிமையாளர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற கடத்தல் அல்லது கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டோர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பார்களா என்றும் விசாரணை செய்யப்பட்டுள்ளது. 2,910 கைபேசி எண்கள் பட்டியலிடப்பட்டு அவற்றைப் பயன்படுத்துவோர் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக