செவ்வாய், 4 ஜூலை, 2017

பசுமை தீர்ப்பாயம் மீது மத்திய அரசின் அடுத்த தாக்குதல்

Gajalakshmi : டெல்லி: மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்து வரும் பசுமைத் தீர்ப்பாயத்தின் உறுப்பினர், தலைவர் நியமனத்தில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம், 2010 முதல் செயல்பட்டு வருகிறது. இதன் முதன்மை அமர்வு டில்லியிலும் மண்டல அமர்வுகள் சென்னை உட்பட நாட்டின் நான்கு இடங்களிலும் உள்ளன. இத்துடன் சிம்லா, ஷில்லாங், ஜோத்பூர் மற்றும் கொச்சியிலும் சர்க்கியூட் அமர்வுகள் உள்ளன. இந்த தீர்ப்பாயத்திற்கு நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவைகளை நிறுத்தி வைப்பது, கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவது போன்றவற்றை இந்த தீர்ப்பாயத்தால மேற்கொள்ள முடியும். தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பிக்கும் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மட்டுமே வழக்கு தொடுக்க முடியும். பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் விஷயங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.


சில நேரங்களில் அரசு அதிகாரிகளுக்கு கடிவாளமிடும் உத்தரவுகளையும் தீர்ப்பாயம் செய்துள்ளது. இதனால் சிக்கலில் மாட்டிக் கொண்ட அரசு தன்னுடைய அதிகார வரம்பிற்குள் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தலையிடுவதாக கருதியது. இந்நிலையில் தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர்கள் நியமனத்தில் சில மாற்றங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி தீர்ப்பாயம் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது ஹைகோர்ட் தலைமை நீதிபதி தான் இருக்க வேண்டும். இவர் தலைமையின் கீழ் இந்த தீர்ப்பாயத்தில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் புதிய விதிகளை பிறப்பித்துள்ளது. இந்த புதிய உத்தரவிற்கு எதிர்க்கட்சிகளும், சட்ட வல்லுநர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தன்னாட்சி அதிகாரத்துடன் இயங்கும் அமைப்புகளை அரசு தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தற்போதைய நிலையில் தீர்ப்பாயத்தின் தலைவர் இந்திய தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்பட்டவரை கொண்ட 5 உறுப்பினர்கள் குழு தலைவரைத் தேர்வு செய்கிறது. ஏனைய 4 பேரும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஏற்கனவே இருந்த விதியான தீர்ப்பாயத்தின் தலைவரை நீக்க வேண்டும் என்றால், தலைமை நீதிபதியின் கருத்தை கேட்ட வேண்டும் என்பது மாற்றப்பட்டுள்ளது.
புதிய விதியின்படி தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினரை, விசாரணை நடத்திய மத்திய அமைச்சரவை நீக்க முடியும் என திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம், ஐந்து ஆண்டுகள் என்றும் அவர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் என முந்தைய விதிகளில் கூறப்பட்டு இருந்தது. இது, தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம், மூன்று ஆண்டுகள் மட்டுமே என்றும் கிரேடு 1 அதிகாரிக்கு இணையான சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என, விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: